ராமர் நடந்து கொண்டிருக்கும் அஸ்வமேத யாகத்தில் மிகவும் திருப்தி அடைந்தார். வெகு சிறப்பாக யாகம் நடந்து கொண்டிருக்கும் பொழுது வால்மீகி முனிவர் தன் சீடர்களுடன் அங்கு வந்தார். ராமர் அவருக்கான மரியாதைகளை செய்து அவருக்குரிய ஆசனத்தை கொடுத்து அமரச் செய்தார். வால்மீகி முனிவர் யாகத்தின் ஏற்பாடுகளைப் பார்த்து வியந்தார். யாக சாலைக்கு அருகில் தான் தங்குவதற்கு ஒரு குடிலை அமைத்துக் கொண்ட வால்மீகி முனிவர் அங்கேயே சில காலம் தங்கினார். தன் குடிலுக்கு தன் பிரதான சீடர்களாக இருந்த ராமரின் மகன்கள் லவ குசா இருவரையும் வரவழைத்த வால்மீகி முனிவர் உங்கள் இருவருக்கும் ராமர் கதை முழுவதும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் அதனை இருவரும் சேர்ந்து நகரத்திற்குள் சென்று ஆனந்தமாக பாடுங்கள். ஒரு நாளைக்கு இருபது அத்தியாயம் என்ற கணக்கிற்கு பாடுங்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் ரிஷிகள் வசிக்கும் இடங்கள் வேதம் அறிந்தவர்கள் கூடும் இடங்களிலும் பாடுங்கள். அயோத்தியின் அரசர் ராமர் இக்கதையை கேட்க விரும்பி அழைத்தால் அங்கு சென்று சபையில் பாடுங்கள். பசித்த பொழுது சாப்பிட யாரிடமும் எதையும் யாசிக்காதீர்கள். உணவுக்கு தேவையானதை காலையில் கிளம்பும் போதே ஆசிரமத்தில் இருந்து கொண்டு செல்லுங்கள். தனம் செல்வம் இவற்றில் சற்றும் மோகம் கொள்ளாதீர்கள் எதற்கும் ஆசைப்பட வேண்டாம். யாரும் குறை சொல்ல முடியாதபடி ராகம் அமைத்து ராமரின் கதையை கவனமாக பாடுங்கள். நீங்கள் யார் என்று யாரேனும் கேட்டால் வால்மீகி முனிவரின் சீடர்கள் என்று மட்டும் சொல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார்.
ராமரின் கதையை வால்மீகி முனிவர் சொல்லிக் கொடுத்தபடி அயோத்தி நகருக்குள் இருவரும் பாடல்களாக படிக்கொண்டே சென்றார்கள். லவ குசாவின் ராம கானத்தை அயோத்தி மக்கள் மிகவும் ரசித்து கேட்டார்கள். நகரத்திற்குள் இரண்டு சிறுவர்கள் ராமரின் கதையை பாடலாகப் பாடுகின்றார்கள் என்று ராமருக்கு அரண்மனை பணியாளர்கள் செய்தியை கூறினார்கள். தன் கதையே இரண்டு சிறுவர்கள் பாடுகின்றார்களா என்று ஆச்சரியப்பட்ட ராமர் அவர்களை சபைக்கு வரவழைத்தார். சபையில் பல இசை மேதைகளையும் அறிஞர்களையும் ரிஷிகளையும் வரவழைத்து அவர்களின் முன்பு பாட வைத்தார் ராமர். சபையில் கலந்து கொண்டவர்கள் லவ குசாவைப் பார்த்தால் ராமரைப் போலவே இருக்கிறார்கள் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஜடா முடியும் மரவுரி உடையுடன் இருவரும் பாடிக்கொண்டு வராமல் இருந்திருந்தால் நாம் இவர்களை ராமரின் வாரிசு என்றே நம்பியிருப்போம் என்று பேசிக் கொண்டார்கள். சபையில் இருவரும் பாடல்களை பாட ஆரம்பித்தார்கள். நாரதரைக் கண்டதிலிருந்து பாடலை ஆரம்பித்து ராமர் சீதையுடன் அயோத்திக்கு அரசனாக பதவி ஏற்ற வரை பாடி முடித்தார்கள்.
ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். லட்சுமணனனிடம் பதினெட்டாயிரம் பொன்னை இந்த கலைஞர்களுக்குக் கொடுத்து மேலும் ஏதேனும் வேண்டுமா என்றும் கேட்டு அவர்கள் விரும்பியதைக் கொடுத்துவிடு என்று சொல்லி விட்டு சிறுவர்களிடம் பேச ஆரம்பித்தார். நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்? இக்கதையில் மொத்தம் எத்தனை அத்தியாயங்கள் உள்ளது இதனை இயற்றியவர் யார் என்று கேட்டார். அதற்கு சிறுவர்கள் நாங்கள் வால்மீகி முனிவரின் சீடர்கள். அவரின் உத்தரவுப்படி அவர் இயற்றிய கதையை பாடலாக பாடி வருகிறோம். இக்கதையில் மொத்தம் இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்கள் உள்ளது. ஐநூறு அத்தியாயங்கள் ஆறு காண்டங்கள் என்றும் மேலும் சற்று அதிகமாகவும் வரிசைப் படுத்தி தங்களின் சரித்திரம் முழுவதும் எழுதியிருக்கிறார் என்றார்கள். லட்சுமணன் அந்த சிறுவர்களுக்கு சன்மானங்களை தனித் தனியாக கொண்டு வந்து கொடுத்தான். வனத்தில் எங்களுக்குத் தேவையான பழம் கிழங்குகள் கிடைக்கின்றன. எங்களிடம் உள்ளதில் நாங்கள் திருப்தியாக இருக்கிறோம். இந்த தங்கத்தை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று இருவரும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.