ராமர் என்ன நடக்கப் போகிறது என்பதை யுகித்துக் கொண்டவராக சீதையை பிடிக்க அவளருகில் ஓடினார். அந்த கண நேரத்தில் பூமி இரண்டாகப் பிளந்தது. பூமிக்குள்ளிருந்து உத்தமமான சிம்மாசனத்தில் பூமித்தாயான தரணி தேவி திவ்யமான அலங்காரத்துடன் வெளி வந்தாள். சீதையின் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு தன்னுடைய சிம்மாதனத்தில் அருகில் அமர்த்திக் கொண்டாள். தேவர்கள் இடை விடாமல் மலர் மாரி பொழிந்தனர். பூமித்தாய் தன்னுடைய பூமியிலிருந்து சீதையை ஜனகருக்கு எப்படிக் கொடுத்தாலோ அது போலவே தற்போது சீதையுடன் பூமிக்குள் சென்று விட்டாள். முனிவர்களும் ரிஷிகளும் தேவர்களும் சீதையை வாழ்த்திய சத்தம் விண்ணை முட்டியது. அங்கு ராமருடன் வந்த படைகள் பூமிக்குள் சீதை சென்ற இடத்தையே பார்த்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் ராமரைப் பார்த்தவாறு திகைத்து நின்றனர். ராமர் ஒன்றும் செய்ய இயலாதவராக துக்கத்துடன் லவ குசர்களை பார்த்தவாறு நின்றார். லவ குசர்கள் வால்மீகி முனிவரை பார்த்தவாறு நின்றனர். ஒருவருக்கொருவர் பார்த்தபடி யாரும் எதுவும் செய்ய இயலாத நிலையில் அந்த இடம் மிகவும் நிசப்தமானது. அனைத்தையும் அறிந்த வால்மீகி முனிவர் அமைதியுடன் நின்றிருந்தார்.
ராமர் மனம் கலங்கியபடி பேச ஆரம்பித்தார். இது போல் சீதைக்கு எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகத் தான் சீதையின் காதுகளில் இந்த செய்தி விழுந்து விடாமல் பார்த்துக் கொண்டேன். இப்போது வால்மீகி முனிவரிடன் சொல்ல வேண்டிய சூழ்நிலையால் நானே சொல்லி விட்டேன். என்னுடைய சீதையை நான் இனி மேல் பார்க்க மாட்டேன். இது வரை நான் அனுபவிக்காத வேதனை என் மனதை வாட்டுகிறது. கூரிய ஆயுதம் கொண்டு மனதை கீறி கிழிப்பது போல் இந்த வேதனை என்னை தாக்குகிறது. என் சீதை கண் எதிரில் காணாமல் போவதை பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் நின்று விட்டேன் என்று புலம்பிய ராமர் திடீரென்று கோபத்துடன் பேச ஆரம்பித்தார். முன்பு இலங்கையிலிருந்து சீதையை மீட்டு வந்தது போல இப்பொழுது பாதாளத்திலிருந்து சீதையை எனக்கு மீட்டு வரத் தெரியும் என்ற ராமர் பூமித்தாயே நீ தான் சீதையை ஐனகருக்கு கொடுத்தாய். உன்னுடைய மகளான சீதை புனிதவதி என்று உலகத்திற்கு எடுத்துக் கட்ட உன்னுடனேயே அழைத்துச் சென்று விட்டாய். உலகமும் சீதையைப் பற்றி தெரிந்து கொண்டு விட்டது. அதனால் என்னுடைய சீதையை இப்போது எனக்கு திருப்பிக் கொடுத்துவிடு. நீ திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் என்னையும் உன்னுடனேயே அழைத்துச் சென்று விடு பூமிக்கு அடியில் சீதை இருக்கும் இடத்தில் நானும் இருந்து கொள்கிறேன். இரண்டினில் எதாவது ஒன்றை செய்து விடு. என்னுடைய பேச்சை நீ அலட்சியம் செய்தால் இந்த வனம் மலைகள் எல்லாவற்றையும் சேர்த்து உன்னையும் நாசம் செய்து விடுவேன். பூமியே இல்லாதபடி எங்கும் தண்ணீரால் நிரப்பி விடுவேன் அதற்கு எற்ற தவ பலனும் வலிமையும் என்னிடம் இருக்கிறது விரைவாக சீதையை என்னிடம் கொடுத்து விடு என்றார்.
ராமரின் வருத்தத்தையும் கோபத்தையும் பார்த்த பிரம்மா அவரை சமாதானம் செய்ய தேவர்கள் சூழ அங்கு வந்து ராமரிடம் பேச ஆரம்பித்தார். ராம இப்படி வருத்தப்படாதே சூழ்நிலையை சமாளித்துக் கொள். உன்னுடைய இயல்பான தன்மைக்கு வா உன்னுடைய அவதாரத்தை சிறிது நினைவு படுத்திப்பார். சீதை உன்னையே தெய்வமாக துதித்து வாழ்ந்தவள். இந்த உலகத்தில் பெண்ணானவள் எந்த சோதனைகள் வந்தாலும் இப்படியும் வாழ முடியும் என்று அனைவருக்கும் எடுத்துக் காட்டி விட்டுச் சென்று விட்டாள். தற்சமயம் தன் தவ வலிமையால் பூமாதேவியுடன் பாதாள லோகம் சென்று விட்டாள். உன்னுடைய வைகுண்டத்திற்கு நீ செல்லும் போது நிச்சயம் உன்னுடன் வந்து சேருவாள் கவலைப்படாதே. ஒரு நிகழ்ச்சியையும் விடாமல் விவரித்து உனது வரலாற்றை வால்மீகி முனிவர் திவ்யமாக சத்ய வாக்கியமாக தெளிவாக அற்புதமாக ராம காவியமாக படைத்திருக்கிறார். நீ உன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு முழுவதுமாக இதனைக் கேள். இனி நடக்க இருப்பதையும் தெரிந்து கொள். உனக்காகத் தான் வால்மீகி முனிவர் இதனை இதனை இயற்றினார். இதனை படித்து கேட்டு விமர்சிக்க உன்னைத் தவிர வேறு யாராலும் முடியாது. உன்னை நம்பி இப்போது லவ குசர்கள் இருக்கிறார்கள். அவர்களை வளர்க்க வேண்டிய கடமை இப்போது உனக்கு இருக்கிறது. எனவே அமைதி கொள். அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதில் உன்னுடைய கருத்தை செலுத்து என்று ராமரை அமைதிப்படுத்திய பிரம்மா அங்கிருந்து சென்றார்.