வீணையுடன் நாரதர்

திரிலோக சஞ்சாரியான நாரதருக்கு, வீணை இசைப்பதில் தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற கர்வம். தேவலோகத்தில் வீணை இசை வாசிப்பதில் சிறந்தவர்கள் நாரதர் மற்றும் தும்புரு. தும்புரு கைலாயத்திலும் நாரதர் வைகுண்டத்திலும் தம்முடைய திறமையை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம் இவர்களுக்குள் தம்முள் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை வந்தது. இருவரும் தீர்மானித்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர். அப்படி செல்லும் வழியில் ஓர் அடர்ந்த வனம் குறுக்கிட்டது. அந்த வனத்தில் இருந்து ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்ற ராம நாமம் ஒலித்தது. இது என்ன இந்த வனத்தில் ராமநாம ஜெபம் கேட்கிறதே? உள்ளே சென்று பார்ப்போம் என்று இருவரும் வனத்தினுள் நுழைந்தனர். அங்கே ஆஞ்சநேயர் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து ராமநாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். இருவரும் அனுமனை வணங்கினர். யாழிசை வல்லுனர்களே இருவரும் சேர்ந்து எங்கே பயணிக்கிறீர்கள்? என்று கேட்டார் அனுமன். உடனே நாரதரும் தும்புருவும் தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியையும் சிவனை தரிசித்து தீர்வு காண இருப்பதையும் கூறினர். யாழ் இசை வல்லுநர்களுக்குள் யார் இசை சிறந்தது என்ற போட்டியா? சரியான போட்டிதான் எனக்காக உங்கள் இசையை கொஞ்சம் வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்டார் அனுமன். இருவரும் தங்கள் யாழில் இசை மீட்டிக் காட்டினர். அருமையாக வாசிக்கிறீர்கள் நானும் கொஞ்சம் உங்கள் யாழை மீட்டட்டுமா? என்று அவர்களிடமிருந்த வீணையை வாங்கி வாசிக்கத் தொடங்கினார் அனுமன்.

அனுமன் வாசிக்க துவங்கியதும் அண்ட சராசரமும் அப்படியே உறைந்து நின்றுவிட்டது. நதிகளில் தண்ணீர் ஓடவில்லை. மரங்கள் கிளைகளை அசைக்கவில்லை. பறவைகள் அப்படியே பறந்தபடி நின்றன. உலகமே அந்த இசையில் மயங்கி அப்படியே நின்றுவிட்டது. அனுமன் அமர்ந்திருந்த அந்தப் பாறை அப்படியே உருகி வழிந்து ஓடத் துவங்கியது. நாரதரும் தும்புருவும் வெட்கம் அடைந்தனர். ஏதோ வாசித்து இதில் யார் சிறந்தவர் என்று போட்டியிட்டு கொள்கிறோமே? கல்லையும் கரைய வைக்கிறதே அனுமனின் இசை இவரல்லவோ சிறந்தவர். இவர் இசையல்லவோ சிறந்தது. இத்தனை திறமை இருந்தும் அடக்கமுடன் வாழும் இவரை பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். சிறிது நேரத்தில் அனுமன் இசைப்பதை நிறுத்தி யாழை பாறையில் வைத்தார். உறுகிய பாறைக்குழம்பு கெட்டிபட்டு அதில் யாழ் ஒட்டிக்கொண்டது. இப்போது அனுமன் சொன்னார். நாரத தும்புரு முனிவர்களே இதோ இந்த பாறையில் உங்கள் யாழ் ஒட்டிக் கொண்டு விட்டது. நீங்கள் மீண்டும் இசை வாசியுங்கள். உங்களில் யார் இசைக்கு இந்த பாறை உருகுகிறதோ அவரே சிறந்தவர். அவர் இந்த வீணையை எடுத்துக் கொள்ளலாம். இதற்குப் போய் எதற்கு சிவனை தொந்தரவு செய்ய வேண்டும் என்றார். இரு முனிவர்களும் அனுமனின் பாதம் பணிந்தனர். சுவாமி உங்கள் இசை எங்கள் கண்களை திறந்து விட்டது. கல்லையும் கரைய வைக்கும் திறமை எங்களுக்கு இல்லை. எல்லாம் இறைவன் அருள். இறைவனே எல்லாவற்றையும் தருகிறார். எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது இறைவனே. இனி எங்களுக்குள் போட்டி வராது. எங்கள் கர்வம் ஒழிந்தது என்று வணங்கி நின்றனர். அனுமன் மீண்டும் இசைக்க பாறை இளகி யாழ் கிடைத்தது. அதை இருவரிடம் கொடுத்த அனுமன் முனிவர்களே வித்யா கர்வம் கூடாது. கர்வம் நானே பெரியவன் என்ற பெருமையை கொடுப்பது போல் தெரியும். ஆனால் இறுதியில் அழித்து விடும். அடக்கமே சிறந்த குணம். இதை உணர்ந்து இறைவனை பாடி வாருங்கள் என்று கூறினார்.

அனுமன் வாசிப்பில் ஒவ்வொரு ஸ்வரமும் ராம் ராம் என்று சொல்லும். அவர் வீணையுடன் ஒன்றி வாசிக்க அந்த நாதத்தில் ஸ்ரீ ராமனும் ஒன்றி விடுவார்.  இவருக்குப் பிடித்த ராகத்தின் பெயர் ஹனுமத்தோடி என்று புராண வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இடம் குடந்தை ராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ அனுமான் வீணையுடன் காட்சி தருகின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.