குபேரனுக்கும் தசக்ரீவனுக்கும் யுத்தம் கடுமையாக நடந்தது. தசக்ரீவன் தன் மாயத்தை காண்பித்து மறைந்து நின்று பல விதமான ரூபங்களை எடுத்து யுத்தம் செய்து குபேரனை அலைக்கழித்து இறுதியில் தனது பெரிய கதையால் ஓங்கி அடித்தான். குபேரன் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரம் போல தரையில் விழுந்தான். குபேரனின் படைகள் அவனை நந்தன வனத்துக்கு கொண்டு சென்று குபேரனை மயக்கத்தில் இருந்து தெளிவித்தார்கள். தசக்ரீவன் குபேரனை வெற்றி பெற்று விட்டோம் என்று மகிழ்ந்தான். தன்னுடைய வெற்றியைக் கொண்டாட குபேரனுடைய புஷ்பக விமானத்தை அபகரித்து எடுத்துக் கொண்டான். அதன் தூண்கள் தங்கத்தில் இருந்தது. தோரணங்களில் வைடூரியம் இழைத்து கட்டப்பட்டு இருந்தது. முத்துக்களால் வலைகள் பின்னப்பட்ட ஜன்னல்கள் இருந்தது. மனோ வேகத்தில் செல்லக் கூடியது. நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை உடையது. ஆகாயத்தில் பறக்கும் அது விரும்பிய ரூபத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியுடன் இருந்தது. அதன் படிகள் மணிகள் இழைத்து பொன்னால் செய்யப்பட்டிருந்தன. மூன்று உலகையும் வெற்றி கொண்ட இறுமாப்புடன் குபேரன் இருந்த கைலாச மலையின் ஒரு பகுதியை தன் ஆற்றலால் வெற்றி பெற்றதாக மகிழ்ந்து கொண்டாடினான்.
குபேரனை வெற்றி பெற்ற தசக்ரீவன் அங்கிருந்து புஷ்பக விமானத்தில் கையிலை மலைக்கு மேலே செல்ல முயற்சித்தான். அங்கிருந்த மலை தங்கம் போல் ஜொலித்தது அழகிய வனங்களைக் கொண்ட அந்த மலையில் ஏறும் பொழுது புஷ்பக விமானம் நின்று விட்டது. ஏன் நின்று விட்டது என்று மந்திரிகளுடன் கலந்தாலோசித்தான். ஏன் நான் நினத்தபடி செல்லவில்லை இந்த மலையில் யாரவது என்னை தடுக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அப்போது மாரீசன் பதில் சொன்னான். காரணம் இல்லாமல் இந்த புஷ்பகம் நிற்கவில்லை இது குபேரனைத் தவிர மற்றவர்களுக்கு வாகனமாகப் பயன்படாது என்ற விதி முறை ஏதாவது இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்றான். அப்போது சிவபெருமானுடைய வாகனமான நந்தி பகவான் கருப்பும் மஞ்சளும் ஆன நிறமும் புஜ பலத்துடன் கூடிய உருவத்துடன் வித்தியாசமான தலையுடனும் வித்தியாசமான உருவமாக தசக்ரீவன் அருகில் வந்து பேச ஆரம்பித்தார்.
சிவனுடைய கிங்கரன் நான். எனது பெயர் நந்திகேஸ்வரன். தசக்ரீவா திரும்பி போ. இந்த இடம் சிவனின் இருப்பிடம். இந்த இடத்தை யாராலும் நெருங்கி வர முடியாது. சிவனைக் காணும் பாக்கியம் பெற்ற தகுதியானவர்கள் மட்டுமே இங்கு நுழைய முடியும் என்பது நடைமுறை விதி. துர்புத்தியிடன் இருக்கும் நீ திரும்பி போ இல்லையெனில் நாசமடைவாய் என்று எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்ட தசக்ரீவன் நந்திபகவானின் உருவத்தை அலட்சியமாக பார்த்து இடி இடிப்பது போல சிரித்து அவரது உருவத்தைப் பார்த்து ஏளானம் செய்து சிரித்தான். இதனால் கோபம் கொண்ட நந்திபகவான் கடுமையான குரலில் தசக்ரீவா எனது உருவத்தைப் பார்த்து ஏளானம் செய்து சிரித்து விட்டாய். இப்பொழுதே நான் உன்னை வதம் செய்து அழித்து விடுவேன் அது என்னால் முடியும். பிரம்மா உனக்கு அளித்த வரத்திற்கு மரியாதை செய்யும் விதமாக உன்னை நான் விடுகிறேன். இரண்டாவதாக உனது தீய செயல்களால் நீ ஏற்கனவே அழிந்து விட்டாய் இப்போது இருப்பது வெறும் சதைப்பிண்டம் மட்டுமே. வெறும் சதைப்பிண்டத்தை கொல்வதால் பயன் ஒன்றும் இல்லை. நீ என்னை ஏளானம் செய்ததின் விளைவாக எனது பலமும் வீர்யமும் தேஜசும் உள்ள வானரங்கள் உனது குலத்தை நாசம் செய்ய வருவார்கள். நகமும் பற்களுமே ஆயுதங்களாகவும் மனோ வேகத்தில் செயல் படுபவர்களாகவும் வெறி கொண்டு யுத்தம் செய்பவர்களாகவும் பெரிய மலை போன்ற உருவத்துடன் வருவார்கள். அவர்கள் உன் கர்வம் அகங்காரம் இவற்றை அடக்கி விடுவார்கள். உன்னை சார்ந்திருக்கும் மந்திரிகள் புத்திரர்கள் உற்றார் உறவினரோடு நாசம் அடைவாய் என்றார். நந்தி பகவான் இப்படிச் சொன்னதும் தேவர்கள் நந்திபகவானின் மீது மலர்களை தூவினார்கள். தேவ துந்துபிகள் முழங்கின.