ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -17

நந்திபகவான் சொன்னதைக் கேட்ட தசக்ரீவன் சற்றும் யோசிக்காமல் பேச ஆரம்பித்தான். மலை மேல் இந்த புஷ்பக விமானத்தில் நான் செல்வதை தடுத்து நிறுத்தி என்னை அவமதித்து விட்டாய். எனது வலிமை தெரியாமல் இருக்கிறாய். இந்த மலையை தூக்கி எனது வலிமையை காண்பிக்கிறேன் அப்போது எனது பலத்தை நீ தெரிந்து கொண்டு என் முன் மண்டியிடுவாய் என்ற தசக்ரீவன் மலையை தன் கைகளால் தூக்க முயன்றான். மலை அசைந்து ஆடியது. தேவ கணங்கள் நடுங்கினர். பார்வதியும் சிவனை அணைத்துக் கொண்டாள். அப்பொழுது சிவன் தன் கால் கட்டை விரலால் மலையை லேசாக அழுத்தினார். மலையின் அடியில் அகப்பட்டுக் கொண்ட தசக்ரீவனது கைகள் நசுங்கியது. தசக்ரீவனின் மந்திரிகள் செய்வதறியாமல் விழித்தார்கள். தன்னுடன் வந்தவர்கள் ஒன்றும் செய்யாமல் நிற்பதால் கோபமும் கைகள் நசுங்குவதால் ஏற்பட்ட உடல் வலியும் சேர தசக்ரீவன் மூவுலகும் நடுங்கும்படி உரத்த குரலில் அலறினான். தசக்ரீவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு பிரளய காலம் வந்து விட்டதோ என்று பலர் பயந்து நடுங்கினார்கள். தசக்ரீவனின் பரிதாபமான கதறலை கண்ட மந்திரிகள் சிவனை துதித்து பாடுங்கள். அவரைத் தவிர உங்களை காப்பாற்ற வேறு யாரலும் முடியாது வேறு வழி இல்லை. அவரை தோத்திரம் செய்து வணங்கி உங்கள் பிரார்த்தனையால் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள். சிவபெருமான் கருணையே வடிவானவர். உன் பிரார்த்தனையை கேட்டு நிச்சயம் அருள் புரிவார் என்று யோசனை சொன்னார்கள். இதற்கு சம்மதித்த தசகரீவன் சாமகானத்தில் பாடல்கள் பாடி சிவபெருமானை வணங்கி பிரார்த்தனை செய்து வழிபட்டான்.

சிவபெருமான் தசக்ரீவனின் சாமகானத்தில் மகிழ்ந்து அவனை விடுவித்தார். கைலாய மலையை தூக்கும் உனது பலத்தையும் தன்னம்பிக்கையும் பாராட்டுகின்றேன். உனது சாமகானத்தால் நான் மிகவும் மகிழ்ந்தேன். மலையின் அடியில் இருந்து நீ போட்ட கூக்குரலால் பிரளய காலம் வந்து விட்டதோ என்று பயப்படும் அளவிற்கு மூவுலகமும் நடுங்கியது. இதனால் இன்று முதல் நீ ராவணன் என்று அழைக்கப்படுவாய் என்று வாழ்த்தினார். (ராவண என்றால் உலகை நடுங்கச் செய்தவன் என்று பொருள்) மூன்று உலகங்களிலும் நீ எங்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று உனக்கு அனுமதி தருகிறேன் என்றார். அதற்கு ராவணன் நான் பாடிய சாம கானத்தில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தது உண்மையானால் எனக்கு ஒரு வரம் தாருங்கள். பிரம்மா எனக்கு தீர்காயுளையும் யட்சர்கள் கந்தர்கள் தேவர்களால் எனக்கு மரணம் இல்லையென்று வரம் அளித்திருக்கிறார். உங்கள் கையால் எனக்கு ஒரு அஸ்திர ஆயுதம் தாருங்கள் என்று சிவனிடம் கேட்டுக் கொண்டான். ராவணன் கேட்டதும் சிவபெருமான் சந்திர ஹாஸம் என்ற வாளைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட ராவணனிடம் ஒரு எச்சரிக்கையும் செய்தார். இந்த ஆயுதத்தை அலட்சியமாக எண்ணாதே. நீ சற்று மதிப்பு குறைவாக நடந்து கொண்டாலும் இந்த ஆயுதம் என்னிடம் திரும்பி வந்து விடும் என்றார். சிவபெருமானை வணங்கி விடை பெற்றுக் கொண்டு புஷ்பகத்தில் ஏறிய ராவணன் இந்த பூமி முழுவதும் சுற்றினான். ஆங்காங்கு தென்பட்ட சத்திரிய அரசர்களை தனது பரிவாரங்களோடு சென்று துன்புறுத்திய வண்ணம் பலரை அழித்தான். ராவணன் வருகிறான் என்று தெரிந்ததும் பலர் பயந்து ஓடினார்கள். சிலர் இவனுடைய கர்வத்தையும் அட்டகாசத்தையும் தெரிந்து கொண்டு இவனைக் காணும் முன்னே தோற்றோம் என்று ஒப்புக் கொண்டு மண்டியிட்டு சரணடைந்தார்கள்.

சிவபெருமானிடம் வரம் பெற்றதும் உலகை சுற்றி வந்து அனைவரையும் வெற்றி பெற்ற ராவணன் ஒரு முறை இமய மலைச் சாரலுக்கு வந்தான். அங்கு மான் தோல் உடுத்தி ஜடை தரித்து தவம் செய்யும் ஒரு பெண்ணைக் கண்டான். இயல்பாகவே அழகான அந்த பெண் தன் தவத்தாலும் நியமங்களாலும் தேஜசுடன் பிரகாசமாக விளங்கினாள். அவளிடம் சென்று பேச ஆரம்பித்தான் ராவணன். அரசர்களையும் மோகத்தில் வீழ்த்தக் கூடிய அழகு உன்னுடையது. உன் அழகுக்கும் இளமைக்கும் சற்றும் பொருத்தமில்லாத தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாய். உன் அழகிற்கும் இள வயதிற்கும் தவம் செய்யும் செயல் ஏற்றது அல்ல. ஏன் உன்னை வருத்திக் கொண்டு தவம் செய்கிறாய். யார் நீ உன்னுடைய பூர்வீகம் என்ன என்று கேட்டான். விருந்தினருக்கு உரிய மரியாதை செய்த பின் அந்த பெண் பேச ஆரம்பித்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.