வேதவதி கோபத்தில் எரிப்பதைப் போல பார்ப்பதைக் கண்ட ராவணன் ஒரு கணம் ஸ்தப்பித்து நின்றான். வேதவதி ராவணனிடம் பேச ஆரம்பித்தாள். பண்பற்றவனே வனத்தில் தனியாக இருக்கும் என்னை யார் என்பதை நீ அறிந்து கொள்ளாமல் அனாவசியமாக என்னை தொட்டு விட்டாய். பல வரங்கள் பெற்று வலிமையுடன் இருக்கும் உன்னை என்னால் அழிக்க முடியாது. ஆனால் உனக்கு சாபம் கொடுக்கலாம். நான் உனக்கு சாபம் கொடுத்தால் அது என் தவ வலிமையைக் குறைத்து விடும். உனது கைகள் பட்ட இந்த சாரீரத்துடன் இனி நான் இருக்க மாட்டேன். இங்கேயே அக்னியை வளர்த்து இந்த நெருப்பில் விழுந்து எனது உடலை விடப் போகிறேன். நான் இது வரை செய்த தவத்தின் பலன் சிறிதளவாவது இருக்குமானால் நான் ஒரு தர்மவானின் குலத்தில் பிறந்து நீ அழிவதற்கு ஏதெனும் ஒரு வகையில் காரணமாக இருப்பேன் என்று சொல்லிக் கொண்டே வேதவதி அக்னியில் குதித்து தன் உடலை விட்டாள். அப்போது வானத்தில் இருந்து பூக்கள் மழையாக பொழிந்தது.
ராமரிடம் ராவணனின் வரலாற்றை சொல்லிக் கொண்டிருந்த அகத்தியர் இடையில் நிறுத்தி சிலவற்றைச் சொன்னார். நாராயணனை அடைய வேண்டி தவமிருந்து வந்தவள் வேதவதி. அவளே ஜனகர் ஏர் கலப்பையால் உழும் பொழுது பெட்டிக்குள் இருந்து குழந்தையாக வந்தாள். கலப்பையில் (சீத) உண்டானவள் என்பதால் சீதை என்று பெயர் பெற்றாள். அவளே தன் தவப்பயனால் உனக்கு மனைவியாக வந்தாள். நீ தான் சனாதனனான நாராயணன். ராவணன் மீது கொண்ட கோபம் மேகவதியின் மனதில் வேரூன்றிப் போனதால் ராவணனின் அழிவுக்கும் அவளே காரணமானாள். பல வரங்கள் பெற்று யாராலும் வெல்ல முடியாத ராவணனை மானிடத்திற்கும் மேலான தங்களின் பேராற்றலால் வென்றீர்கள் என்று சொன்ன அகத்தியர் தொடர்ந்து ராவணனின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.
வேதவதி நெருப்பில் குதித்தது ராவணனிடத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பழைய படி உலகை சுற்ற ஆரம்பித்தான். ஒரு நாள் யாகம் செய்து கொண்டிருந்த மருத்தன் என்ற அரசரைக் கண்டு அவரின் அருகில் சென்றான். இவர் சம்வர்த்தன் என்ற பிரம்ம ரிஷியின் சகோதரர். மற்ற தேவகணங்கள் சூழ யாகம் செய்து கொண்டிருந்தார். இவருடன் இருந்த தேவர்கள் ராவணனின் வரங்களின் பலத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள். ராவணனை கண்டதும் பயந்து தங்கள் உருவத்தை பறவை மற்றும் மிருகங்களின் உருவமாக மாற்றிக் கொண்டார்கள். ராவணன் யாகத்தை அசுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அசுத்தமான நாய் போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டு யாக சாலையினுள் நுழைந்தான். யாகம் செய்து கொண்டிருந்த அரசனிடம் என்னுடன் யுத்தத்திற்கு வா அல்லது என்னிடம் தோற்று விட்டேன் என்று என் முன் மண்டியிடு என்று அதட்டினான். அதற்கு அரசர் யாக சாலைக்குள் வந்து திடிரென்று யுத்தத்திற்கு வா என்று கூப்பிடுகிறாயே நீ யார் என்று கேட்டான். ராவணன் அந்த இடம் அதிர சிரித்து தன் பெருமை பேசினான். என்னைக் கண்டு பயப்படாமல் நிற்கிறாயே? நான் பெற்ற வரங்கள் ஆயுதங்கள் அஸ்திரங்கள் என் பலம் இவற்றை எல்லாம் உலகமே தெரிந்து வைத்திருக்கிறது. என்னை கண்டால் தேவர்களும் பயந்து ஓடி ஒளிந்து கொள்வார்கள். என்னைப் பற்றி நீ அறிந்ததில்லையா? குபேரன் சகோதரன் ராவணன் நான். என் சகோதரன் என்றும் பார்க்காமல் குபேரனை வெற்றி பெற்று அவன் விமானத்தை அபகரித்துக் கொண்டவன் நான் என்றான்.
மருத்தன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். குபைரனையே எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்கிறாய் அப்படி என்றால் நிச்சயமாக உனக்கு சமமாக யாரும் இருக்க முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். நீ தர்ம வழியில் தவம் செய்து வரங்களைப் பெற்றதாக நான் இதுவரை அறியவில்லை. நீ சொல்லும் போது தான் தெரிந்து கொள்கிறேன். நீ வீணாக தற்பெருமை பேசுகிறாய். துஷ்டனே யாகத்தை அசுத்தப்படுத்திய நீ இங்கிருந்து நீ உயிருடன் தப்ப முடியாது. என் உயிருள்ள வரை உன்னை விட மாட்டேன். கூர்மையான என் பாணங்களால் உன்னை யம லோகத்துக்கே அனுப்புகிறேன் என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டே தன் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு யுத்தம் செய்ய தயாரானான்.