புலஸ்தியரின் மகனான விஸ்ரவஸ் சத்யவானாக சீலனாக சாந்த குணத்துடன் வாழ்ந்து வந்தான். இதையறிந்த பரத்வாஜர் என்னும் முனிவர் தன் மகள் தேவ வர்ணினி என்பவளை மணம் செய்து கொடுத்தார். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எல்லா விதமான பிரம்ம குணங்களும் நிறைந்த குழந்தையைக் கண்டு புலத்தியர் மிகவும் மகிழ்ந்தார். நன்மை தரும் விதமான புத்தி இயல்பாகவே உடையவனாக இருப்பான் என்று ஆசிர்வதித்தார். தேவ ரிஷிகளுடன் கலந்து ஆலோசித்து குழந்தைக்கு வைஸ்ரவனன் என்ற பெயர் வைத்த புலத்தியர் இவனும் தந்தையைப் போலவே தவ சீலனாக இருப்பான் என்று ஆசிர்வதித்தார். வைஸ்ரவன் வளர்ந்து பெரியவன் ஆனான். உயர்ந்த தர்மம் எதுவோ அதை கடைபிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து கடும் தவம் செய்து வந்தான். உக்ரமான விரதங்களை சங்கல்பம் செய்து கொண்டு ஆயிரம் வருடங்கள் தவம் செய்தான். சில நாட்கள் தண்ணீர் மட்டுமே உணவாகவும் பின் காற்றை மட்டும் உணவாகவும் பின் அதுவும் இல்லாமல் ஆகாரமே இல்லாமல் என்று ஆயிரம் வருடங்கள் செய்த தவம் ஒரு வருடம் போல சென்றது.
வைஸ்ரவனின் ஆயிரம் வருட தவத்தில் மிகவும் மகிழ்ந்த பிரம்மா அவனுக்கு தரிசனம் கொடுத்தார். உன் தவச் சிறப்பைக் கண்டு மெச்சுகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பிரம்மாவை எதிரில் கண்ட வைஸ்ரவணன் நான் லோக பாலனாக ஆக வேண்டும். செல்வத்தைக் காப்பாற்றுபவனாக உயர்ந்த பதவி வேண்டும் என்றான். பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் நானே நான்காவது லோக பாலனை நியமிக்க எண்ணியிருந்தேன். இந்திரன் வருணன் யமன் இவர்களுக்கு சமமான அந்தஸ்தை பெறுவாய் என்று ஆசிர்வதித்து செல்வத்துக்கு அதிபதியான தனாதிபதி (தனத்தின் அதிபதி) என்ற பதவியை ஏற்றுக் கொள். இந்திரன் வருணன் யமன் குபேரன் என்ற நால்வரும் லோக பாலர்களாக விளங்குவீர்கள் என்றார். பிரம்மா வைஸ்ரவனுக்கு சூரியன் போல பிரகாசமான புஷ்பக விமானத்தை பரிசாக அளித்தார். இது உனக்கு வாகனமாக இருக்கட்டும் என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார்.
வைஸ்ரவனன் தனது தந்தையான விஸ்ரவஸ்யை வந்து வணங்கி எனக்கு தேவையான வரங்களை பிரம்மாவிடம் கேட்டு பெற்றுக் கொண்டேன். பிரம்மா என்னை தனாதிபதி ஆக்கி விட்டார். நான் வசிக்க தகுந்த இடமாக ஒன்று சொல்லுங்கள். அங்கு எந்த பிராணிக்கும் எந்த விதமான தொந்தரவும் ஏற்படக் கூடாது என்றான். விஸ்ரவஸ் சற்று யோசித்து விட்டு தென் சமுத்திரக் கரையில் திரிகூடம் என்று ஒரு பர்வதம் உள்ளது. அதன் மேல் விசாலமாக இந்திரனின் நகரம் போலவே இலங்கை என்ற நகரம் ரம்யமாக அமைந்துள்ளது. தேவலோகத்து விஸ்வகர்மா இந்திரனுக்கு அமராவதியை கட்டிக் கொடுத்தது போல இதனை ராட்சசர்களுக்கு என்று கட்டியிருக்கிறார். தங்கத்தால் செய்யப்பட்ட தூண்கள் தங்கத்தில் வைடூரியம் இழைத்து செய்யப்பட்ட தோரணங்கள் என்று செல்வச் செழிப்புடன் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட நகரம் அது. இந்த இலங்கை நகரம் நீ வசிக்க ஏற்றது. அங்கிருந்த ராட்சசர்கள் அனைவரும் விஷ்ணுவிற்கு பயந்து ஓடி விட்டார்கள். யாரும் இல்லாததால் அந்த நகரம் தற்போது சூன்யமாக இருக்கிறது. தற்சமயம் இலங்கைக்கு உரிமையாளன் தலைவன் என்று யாரும் இல்லை. அந்த இடத்தில் நீ சௌக்யமாக வசிக்கலாம். போய் வா உனக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று வாழ்த்தி அனுப்பினார். வைஸ்ரவணன் இலங்கையை தன்னுடையதாக்கிக் கொண்டு மலையின் உச்சியில் தன் விருப்பமானவர்கள் ஆயிரக்கணக்கானோர் உடன் வர மகிழ்ச்சியுடன் ஆட்சியை ஆரம்பித்தான். அவனுடைய ஆட்சியின் கீழ் யாவரும் மன நிறைவோடு இருந்தனர். நான்கு பக்கமும் சமுத்திரம் சூழ்ந்த அந்த நகரத்தில் இருந்து கொண்டு அவ்வப்பொழுது புஷ்பக விமானத்தில் தாய் தந்தையரைக் காண வந்து கொண்டிருந்தான். தேவ கந்தர்வர்கள் இவனுடைய குணத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.
தொடரும்………..