ராமர் கேட்டவுடன் பத்ரன் என்ற ஒற்றன் வணக்கத்துடன் பதிலளித்தான். மக்கள் அனைவரும் நல்ல விதமாகத்தான் பேசிக் கொள்கிறார்கள். தாங்கள் ராவணனை அழித்ததைப் பாராட்டி பேசுகிறார்கள். இந்த யுத்தத்தைப் பற்றியும் அதன் வெற்றியைப் பற்றியும் நகரில் பல கதைகள் பரவியுள்ளன என்றான். அதற்கு ராமர் சுப செய்தியாக இருந்தாலும் அசுப செய்தியாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல். சுபமான செய்தி என்றால் தொடர்ந்து செய்வோம். அசுபமான செய்தி என்றால் நம்மை மாற்றிக் கொள்வோம் பயப்படாதே கவலையின்றி விவரமாகச் சொல் என்றார் ராமர். கடை வீதிகளிலும் வனங்கள் உபவனங்கள் என நமது நாட்டில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறேன் என்று பத்ரன் மிக கவனமான சொற்களுடன் விவரமாகச் சொல்ல அரம்பித்தான்.
ராமர் செய்தது அரிய செயல். சமுத்திரத்தின் மேல் சேது பாலத்தைக் கட்டி விட்டார். தேவர்கள் தானவர்கள் கூட இப்படி கடலின் மேல் பாலம் கட்டியதாக அறிந்தது இல்லை. நெருங்கவே முடியாதவன் என்று பெயர் பெற்ற ராவணன் தன் படை பலங்களோடு ராமரால் அழிக்கப்பட்டான். வானர வீரர்கள் கரடிகள் அவர்களோடு இப்போது ராட்சசர்களும் ராமரின் வசத்திற்கு வந்து விட்டார்கள். ராவணனை வதம் செய்து தன் சீதையை மீட்டு வந்துவிட்டார். முன்பு ராவணன் அவளை அபகரித்துக் கொண்டு இலங்கையின் அசோக வனத்தில் வைத்தான். ராட்சசர்களின் கட்டுப்பாட்டில் சில காலம் இருந்தவளை குறை ஏதும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார் ராமர். மாற்றான் கட்டுப் பாட்டில் இருந்த தன் மனைவியை ராமர் ஏற்றுக் கொண்டது பெரிய செயல். சீதையுடன் சேர்ந்ததில் தான் அவருக்கு எவ்வளவு ஆனந்தம். மாற்றானுடன் இருந்த சீதையை காணும் போதெல்லாம் ராமருக்கு எப்படி ஆனந்தம் ஏற்படுகிறதோ தெரியவில்லை? நமது வீட்டின் பெண்களுக்கும் இது போல் ஏதேனும் பிரச்சனை வந்தால் நாமும் அது போலவே பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களுக்குள் பலவாறு பேசுகிறார்கள் என்று சொல்லி முடித்தான். இதைக் கேட்ட ராமரின் முகம் வருத்தத்தில் வாடியது. கூடியிருந்த நண்பர்களைப் பார்த்து இது என்ன புதிய குழப்பம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்களும் தலை குனிந்தபடி ராமரை வணங்கி இப்படித்தான் நாங்களும் கேள்விப் பட்டோம். இவன் சொல்வது சரிதான் என்றார்கள். அவர்கள் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்ட ராமர் அவர்களை அனுப்பி விட்டு யோசிக்கலானார்.
ராமர் நீண்ட யோசனைக்குப் பிறகு வாயில் காப்போனைக் கூப்பிட்டு சீக்கிரம் லட்சுமணன் பரதன் சத்ருக்னன் மூவரையும் அழைத்து வா என்று கட்டளையிட்டார். வாயில் காப்போன் ஜய கோஷம் செய்து வாழ்த்தி விட்டு ராஜா உங்களை அழைக்கிறார். என்று மூவருக்கும் செய்தியை கூறினான். மூவரும் உடனடியாக ராமர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார்கள். ராமரின் கவலையான முகத்தைப் பார்த்து ஏதோ குழப்பம் என்று ஊகித்துக் கொண்டார்கள். கண்களில் நீருடன் முகம் வாட்டாமாக இருந்த ராமரைப் பார்த்து செய்வதறியாமல் பேசாமல் நின்றனர். அவர்களை அமரச் செய்த ராமர் அவர்களிடம் பேச ஆரம்பித்தார். நீங்கள் மூவரும் தான் எனக்கு உயிர். நீங்கள் மூவரும் தான் எனக்கு எல்லாம். உங்கள் உதவியோடு தான் நான் ராஜ்ய பாலனம் செய்கிறேன். சாஸ்திரங்களை அறிந்தவர்கள் நீங்கள். நல்ல புத்தி உடையவர்கள். நான் சொல்வதைக் கேட்டு யோசித்து ஆராய்ந்து பதில் சொல்லுங்கள் என்றார். ராமர் என்ன சொல்லப் போகிறாரோ என்று மனம் கலங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போன்ற குழப்பங்கள் மனதில் தோன்ற வாய் பேசாமல் அவர் முகத்தையே பார்த்தபடி மூவரும் அமர்ந்திருந்தனர்.