ராமர் என்ற பெயர் மூவுலகிலும் பரவி வெகு காலம் சுகமாக சிறப்பாக இருப்பார். ஆனால் சாபத்தின் பலனை அனுபவித்தே தீர்வார். இவரைப் பின் பற்றிச் செல்பவர்கள் சுகமாகவும் நிறைந்த செல்வச் செழிப்போடும் இருப்பார்கள். யாராலும் வெற்றி பெற முடியாத படி தர்மத்தின் படி அரசாளவார். ராமர் அரசனாக பதவி ஏற்றக் கொண்ட சில காலத்தில் ராமரிடமிருந்து சீதை பிரிந்து விடுவாள். ராமருக்கும் அவரது மனைவி சீதைக்கும் பிறக்கும் குழந்தைகள் அயோத்திக்கு வெளியே பிறப்பார்கள். ராமர் நிறைய அஸ்வமேத யாகங்கள் செய்வார். பத்தாயிரம் ஆண்டுகள் ராமர் தனது ராஜ்யத்தை ஆள்வார். அதன் பிறகு அவரின் மகன்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு அவரது லோகத்திற்கு சென்று விடுவார் என்று துர்வாச மகரிஷி சொல்லியிருக்கிறார் என்று வால்மீகி முனிவர் தன்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு பதிலாக சொன்னார். சில நாட்கள் கழித்து சீதைக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். சீதையை பார்த்துக் கொண்ட பெண்கள் குழந்தை பிறந்த தகவலை வால்மீகி முனிவருக்கு தெரியப்படுத்தினார்கள். மகிழ்ச்சி அடைந்த வால்மீகி முனிவர் குச முஷ்டி மற்றும் லவம் என்ற இரண்டு மூலிகைகளைக் கொண்டு காப்புகள் செய்து குழந்தைகளுக்கு அணிவித்தார். காப்பாக பயன்பட்ட மூலிகைகளே பெயராக வைத்து முதலில் பிறந்தவனுக்கு குசன் என்ற பெயரையும் இரண்டாவது பிறந்தவனுக்கு லவன் என்ற பெயரையும் வைத்து வேத மந்திரங்களை ஓதினார் வால்மீகி முனிவர். மேலும் கோத்ர பெயரைச் சொல்லி தாலாட்டு பாடினர். ராமர் சீதையின் புதல்வர்களின் பிறப்பைக் கொண்டாடினர். லவ குசர்கள் இருவரும் வால்மீகி முனிவரின் மேற்பார்வையில் வேதங்களை கற்று வளர்ந்து வந்தார்கள்.
ராமர் அயோத்தியை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். தனது சகோதரர்கள் மூவரையும் அழைத்து சில தர்ம காரியங்களைச் செய்ய விரும்புகிறேன். ராஜ சூய யாகம் செய்யலாம் என்று எண்ணுகிறேன் தங்களின் கருத்தை சொல்லுங்கள் என்றார். பரதன் பேச ஆரம்பித்தான். தர்மம் உங்களிடத்தில் நிலைத்து இருக்கிறது. பூமியில் உள்ள அரசர்கள் அனைவரும் உங்களை மற்றொரு பிரம்மா போல புகழ்ந்து போற்றுகின்றனர். எங்களைப் போலவே உலகத்தார் அனைவரும் உங்களை மதிப்பும் மரியாதையுமாக தங்களின் தந்தையைப் போல நினைக்கிறார்கள். அப்படி இருக்க இந்த யாகம் எதற்கு செய்ய வேண்டும் இந்த யாகம் செய்யும் போது பல நாட்டு அரசர்களும் யாகத்தில் பங்கு கொள்வார்கள். நமக்கு தான் முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று பல ராஜ வம்ச அரசர்களும் எண்ணுவார்கள். இதனால் வீணாக கோபமும் அகங்காரமும் தலையெடுக்கும். தன்னிடம் உள்ள செல்வத்தை காட்டிக் கொள்வதற்காக அவர்களுக்குள் போட்டி வரும் பொறாமை சண்டை தொடரும். அதனால் இந்த யாகத்தைத் துவங்கி வீணாக கலவரம் ஏற்பட்டு மனிதர்கள் மடிவார்கள். நம்மிடம் ஏற்கனவே புகழும் அதிகாரமும் நிறைந்து இருக்கும் பொழுது இது தேவையில்லை என்று எண்ணுகிறேன் என்றான் பரதன். இதைக் கேட்ட ராமர் நீ சொல்வதும் சரியே. நீ கூறிய இந்த கருத்தால் உன்னிடத்தில் எனக்கு மதிப்பு கூடுகிறது. நீ சொல்வது மிகச்சரியானது. மக்களுக்கு துன்பம் தரும் செயலை நாம் செய்ய வேண்டாம். நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
ராமரிடம் லட்சுமணன் பேச ஆரம்பித்தான். அஸ்வமேத யாகம் யாராலும் அடக்க முடியாத பலமும் வீர்யமும் உள்ளவர்கள் செய்வது. இதை யோசித்துப் பாருங்கள். இந்திரனுக்கு விருத்திரனை வதம் செய்ததால் பிரம்ம ஹத்தி தோஷம் வந்தது. தன் தோஷத்திலிருந்து விடு பட அவன் அஸ்வமேத யாகம் செய்து தனது தோசத்தை போக்கிக் கொண்டான். நம் அயோத்தி மக்களுக்கும் உலக மக்களுக்கும் இருக்கும் பல விதமான தோசங்களை நீக்கி அனைவருக்கும் நன்மைகளை அளிக்கும் இந்த அஸ்வமேத யாகத்தை நாம் செய்வோம் என்றான். இந்திரனுக்கு சற்றும் குறைவில்லாத பலமும் வீரமும் உடைய ராமரும் சரி என்று ஏற்றுக் கொண்டார். அஸ்வமேத யாகம் எப்போது எப்படி செய்வது என்று ஆலோசனை சொல்வதற்காக வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், மந்திரிகள், மற்றும் பிராமண சிரேஷ்டர்கள் கொண்ட சபையைக் கூட்டச் சொல்லி லட்சுமணனுக்கு உத்தரவிட்டார்.