ராமர் தனது அரசவையை கூட்டி வசிஷ்டரையும் தன் மந்திரிகள் மற்றும் நீதி முறைகளை அறிந்த அறிஞர்களையும் பரதனையும் வரவழைத்தார். நான் இந்த உலகத்தை விட்டு செல்வதற்கான நேரம் நெருங்கி விட்டது. அதனால் அயோத்தி நகருக்கு அரசனாக பரதனை முடிசூட்டி ராஜ்யத்தில் அமர வைக்க முடிவு செய்திருக்கிறேன். இனி அயோத்திக்கு அரசனாக பரதன் இருப்பான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். ராமரின் உத்தரவைக் கேட்டு திகைத்து நின்ற அனைவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். ராஜ்யம் என்ற சொல்லையே கேட்கப் பிடிக்காதவனாக பரதன் பேச ஆரம்பித்தான். சொர்க்கமே ஆனாலும் நீங்கள் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். நீங்கள் இல்லாத ராஜ்யத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன். ராஜ்யத்தின் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. இப்போது ராஜ்யத்தை ஆள்வதற்கு குச லவர்கள் இருக்கிறார்கள். அதற்கான தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது. அயோத்தியை இரண்டாகப் பிரித்து கோசல தேசத்திற்கு குசனையும் உத்தர தேசத்திற்கு லவனையும் அரசனாக்கி முடி சூட்டி வைத்து விடலாம். தாங்கள் செல்லும் இடத்திற்கு நானும் உங்களுடன் வந்து விடுகிறேன் என்றான் பரதன். பரதனின் கோரிக்கையை ராமர் ஏற்றுக் கொண்டார்.
ராமரிடம் வசிஷ்டர் பேச ஆரம்பித்தார். மக்களைப் பார். இவர்களின் விருப்பம் என்ன என்று தெரிந்திருந்து கொள். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யாதே என்றார். உடனே ராமன் சபையில் இருந்த மக்களிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டான். அனைவரும் ஏகோபித்த குரலில் நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுடன் நாங்களும் வருகிறோம். உங்களின் இறுதிக்காலத்தையும் தாண்டி உங்களுடன் இருக்க விரும்புகிறோம். நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களை பின் தொடர்ந்து நாங்களும் வருகிறோம் எங்களை தடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். மக்களின் விருப்பத்தை ராமர் ஏற்றுக் கொண்டார். பரதனின் யோசனைப்படி கோசல தேசத்துக்கு குசனையும் உத்திர தேசத்துக்கு லவனையும் அரசனாக்கி அனைத்து பொறுப்புகளையும் அவர்களிடம் ஒப்படைத்தார்.
ராமர் தனது தூதர்களை அழைத்து சத்ருக்னன் இருக்கும் மதுராம் என்ற நகருக்கு சென்று அயோத்தியில் நடந்த நடக்கப் போகும் செய்திகளை அவனிடம் சொல்லி சத்ருக்கனனை அழைத்து வருமாறு கட்டளையிட்டார். தூதர்கள் மூன்று நாள் பிரயாணம் செய்து மதுராம் நகரை அடைந்தார்கள். சத்ருக்னனிடம் லட்சுமணன் அயோத்தியை விட்டு சென்றதையும் ராமர் இவ்வுலகத்தை விட்டு செல்ல இருப்பதையும் தங்களை ராமர் சந்திக்க விரும்புகிறார் ஆகையால் தாங்கள் அயோத்திக்கு உடனடியாக வர வேண்டும் என்று ராமர் செய்தி அனுப்பினார் என்று தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட சத்ருக்கனன் தானும் ராமருடன் தானும் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான். தான் ஆட்சி செய்து வந்த மதுராம் நகரை இரண்டாக பிரித்து தனது மகன்களான சுதாகு சுருதசேனன் இருவரையும் அரசனாக்கினான். சேனைகள் செல்வங்கள் அனைத்தையும் இருவருக்கும் சமமாக பிரித்து அளித்து விட்டு ராமரைப் பார்க்க வேண்டும் என்று விரைவாக அயோத்தி வந்த சேர்ந்தான் சத்ருக்கனன். தனது வணக்கத்தை ராமருக்கு தெரிவித்த சத்ருக்கனன் என் புதல்வர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்து விட்டேன். நானும் உங்களுடனேயே வருகிறேன் என்னை தடுக்காதீர்கள் என்றான். ராமரும் சத்ருக்கனனுக்கு அனுமதி கொடுத்தார். ராமர் உலகை விட்டு செல்லப் போகிறார் என்ற செய்தி கேட்டு சுக்ரீவன் தனது பரிவாரங்களுடனும் வீபீஷணன் தனது பரிவாரங்களுடனும் வந்து சேர்ந்தார்கள். சுக்ரீவன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். அங்கதனை எனது ராஜ்யத்திற்கு அரசனாக்கி விட்டுத்தான் வந்திருக்கிறேன். நானும் உங்களுடனேயே வருகிறேன் என்றான். ராமரும் சிரித்துக் கொண்டே சுக்ரீவா நீ என் நண்பன். நீ வேறு நான் வேறல்ல. நாம் இருவரும் சேர்ந்தே செல்வோம் என்றார். விபீஷணனிடம் ராமர் பேச ஆரம்பித்தார். மக்கள் உள்ள வரை நீ இலங்கையில் பேசப்படுவாய். மக்களுக்காக நீ தொடர்ந்து உனது ராஜ்யத்தை ஆட்சி செய் என்று கேட்டுக் கொண்டார். விபீஷணனும் ராமரிடம் அப்படியே செய்வதாக வாக்கு கொடுத்தான்.