விஷ்ணு தேவர்களுக்கு துணையாக வருவார் என்று தெரிந்தும் தங்களது பலமும் கர்வமும் ராட்சசர்களை தேவலோகத்திற்கு அளவற்ற தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல வைத்தது. மாலியும் சுமாலியும் மால்யவானும் படைக்குத் தலைமை தாங்கி முன்னால் சென்றனர். வெற்றி நிச்சயம் என்ற கோஷம் செய்து கொண்டு நம்பிக்கையோடு மால்யவானை தலைவனாகக் கொண்டு ராட்சச வீரர்கள் தேவலோகத்திற்குள் சென்றனர். ராட்சசர்கள் கோலாகலமாக வருவதை பார்த்த தேவ தூதர்கள் ஓடிச் சென்று விஷ்ணுவிடம் தெரிவித்தனர். விஷ்ணு ஆயிரம் சூரியன் போன்று ஒளி வீசிய கவசத்தை அணிந்து கொண்டு ஆயுதங்களுடன் மலை போன்ற சுபர்ணன் எனப்படும் கருடனின் மேல் ஏறி ராட்சசர்களை வதம் செய்யப் புறப்பட்டார். தேவரிஷிகள் கந்தர்வர்கள் யட்சர்களும் சேர்ந்து கொண்டு விஷ்ணுவை துதித்து பாடினார்கள். விஷ்ணு தன் பாஞ்ச ஜன்யத்தை எடுத்து ஊதி ஒலி எழுப்பி யுத்தம் செய்ய ஆரம்பித்தார். விஷ்ணுவின் ஆயுதங்களுக்கு ராட்சசர்கள் சளைக்காமல் பதில் அடி கொடுத்தனர். நெருப்பு பரவுவது போல தாக்கும் அஸ்திரங்களை பிரயோகித்தனர். விஷ்ணு ராட்சச படைகளுடன் யுத்தம் செய்வதை பார்க்க நீல மலையிலிருந்து கற்கள் உருண்டு கீழே விழுவது போல இருந்தது. மலை போன்ற சரீரம் உடைய ராட்சசர்கள் அந்த மலைகளில் இருந்து வரும் கற்களில் அடிபட்டு விழுந்ததைப் போல அடுத்தடுத்து விழுந்தார்கள். விஷ்ணுவின் சங்கு நாதமா அல்லது அவரது அம்பிலிருந்து எழும் நாணின் சத்தமா இல்லை இறந்து விழும் ராட்சசர்களின் அலரல் சத்தமா என்று ஒன்றும் புரியாமல் ராட்சசர்கள் குழம்பி நின்றார்கள்.
விஷ்ணு செலுத்திய பாணங்கள் ராட்சசர்களை விரட்டி அடித்தது. ஆயிரக்கணக்கான ராட்சசர்கள் மடிந்து விழவும் மாலி தானே முன் நின்று விஷ்ணுவை எதிர்க்க ஆரம்பித்தான். மாலியைக் கண்ட விஷ்ணு தன் வில்லை எடுத்து அம்புகளால் அவனைத் தாக்கி தனது சக்கரத்தை எறிந்தார். சூரிய மண்டலம் போல பிரகாசித்த அந்த சக்கரம் மாலியின் தலையை துண்டித்து விழச் செய்தது. மாலி இறந்ததும் சுமாலி விஷ்ணுவை எதிர்க்க ஆரம்பித்தான். வெறி பிடித்தவன் போல யுத்தம் செய்த சுமாலி இறுதியில் விஷ்ணுவிடம் தோல்வி அடைந்து பின் வாங்கினான். பின் வாங்கிய ராட்சசர் படைகளை விஷ்ணு துரத்தி துரத்தி அழித்தார். மாலி விஷ்ணுவால் தாக்கப்பட்டு அழிந்தான் சுமாலி தோல்வி அடைந்து இலங்கைக்கு ஓடி விட்டான் என்ற வருத்தத்துடன் தன் இருப்பிடம் சென்ற மால்யவான் மீண்டும் போர்க்களம் வந்து சேர்ந்தான்.
விஷ்ணுவாகிய நீங்கள் யுத்த தர்மத்தை மீறி விட்டீர்கள். யுத்தம் செய்ய விருப்பமின்றி பயந்து சென்ற என் வீரர்களை தாக்கி விட்டீர்கள். இதோ நான் தயாராக வந்திருக்கிறேன். என் மேல் உங்கள் பலத்தை காட்டுங்கள் என்றான். அதற்கு விஷ்ணு தேவர்களுக்கு நான் அபயம் அளித்திருக்கிறேன். அவர்கள் உங்களிடம் பயந்து நடுங்குகிறார்கள். ராட்சசர்களை அழித்து தேவர்களை காப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் நான் அங்கு உங்களைத் தேடி வந்து அழிப்பேன் என்றார். இந்த வார்த்தைகளால் கோபமடைந்த மால்யவான் தன் மணியோசையுடைய சக்தி ஆயுதத்தை விஷ்ணுவின் மீது எறிந்தான். ஆயுதம் விஷ்ணுவின் மார்பில் உரசியது. அப்போது தன் முஷ்டியினால் அவரது வாகனமான கருடனை தாக்கினான் மால்யவன். கருடன் மகா கோபம் கொண்டு இறக்கைகளை அடித்துக் கொண்டு வேகமாக பறந்தது. இறக்கையில் கிளம்பிய காற்று பெரும் புயல் காற்றில் உலர்ந்த இலைகள் பறப்பது போல ராட்சசர்களைத் தூக்கி அடித்தது. கருடனின் இறக்கைகள் அடித்து உண்டாக்கிய பெரும் காற்றில் மால்யவான் வீசியெறியப்பட்டு இலங்கையை வந்தடைந்தான். தோல்வி அடைந்து விட்டோம் என்ற அவமானம் வெட்கம் அவனைப் பிடுங்கித் தின்றது. விஷ்ணுவின் மேல் வந்த பயத்தினால் இனி இலங்கையில் இருக்க முடியாது என்ற நிலையில் மால்யவன் சுமாலி இருவரும் இலங்கையில் இருக்கும் அனைவருடனும் அந்த நகரத்தை காலி செய்து கொண்டு பாதாளம் சென்று விட்டார்கள். ராமா நீ வதம் செய்த ராவணனை விடவும் இவர்கள் பலம் மிகுந்தவர்கள். சுமாலி, மால்யவான், மாலி இவர்கள் ராவணனின் முன்னோர்கள். இப்படித் தான் இலங்கை நகரம் உருவாகி பின்பு காலியானது என்று ராமரிடம் கூறினார் அகத்தியர்.