ராமர் யுத்தம் முடிந்ததும் ராமேஸ்வரத்திற்கு வந்து சிவ பூஜை செய்த பிறகே அயோத்திக்கு சென்றார் என்ற உண்மைச் செய்தி ஒன்று உள்ளது. இந்த செய்தி வால்மீகி எழுதிய ராமாயணத்திலும் இல்லை கம்பர் எழுதிய கம்பராமாயணத்திலும் இல்லை. ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் ஆரம்பித்த போது முதலில் கங்கை கரையைத் தாண்டி குகனின் இருப்பிடத்தில் இருக்கும் போது அங்கு வந்து சந்தித்த பரதன் ராமரை மீண்டும் அயோத்திக்கு அழைத்தான். ராமர் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக வர மறுத்து விட்டார். அதற்கு பரதன் பதினான்கு ஆண்டு காலம் வனவாசம் முடிந்த அடுத்த நாளே ராமர் அயோத்திக்கு திரும்பி வர வேண்டும் என்ற வரத்தை வாங்கினான். ராமர் தான் கொடுத்த வாக்குப்படி வரவில்லை என்றால் தன் உடலை விட்டு இறந்து விடுவேன் என்று ராமரிடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். யுத்தம் முடிந்து ராமர் சீதையை அடைந்ததும் பதினான்கு ஆண்டு வனவாச காலத்தின் இறுதி நாட்கள் வந்துவிட்டது. பரதனிடம் கொடுத்த வாக்குப்படி உடனடியாக அயோத்திக்குத் திரும்ப வேண்டியது இருப்பதால் ராமர் இலங்கையில் இருந்து நேராக புஷ்பக விமானத்தில் அயோத்தியின் எல்லையில் இருக்கும் கங்கை கரைக்கு வந்து விட்டார். அயோத்திக்குத் திரும்பியதும் அனைவரது விருப்பத்தின்படி பட்டாபிஷேகத்தை ஏற்றுக் கொண்டு அரசனாக பதவி ஏற்றுக் கொண்டார்.
ராமர் அரசனாக பதவி ஏற்றதும் முதலில் மக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்த பிறகு தனக்கும் தனக்காக யுத்தம் செய்தவர்களுக்கும் செய்ய வேண்டியதைப் பற்றி சிந்தனை செய்தார். யுத்தத்தில் பலர் இறப்பதற்கு காரணமாக தானும் லட்சுமணனும் வானரங்களும் விபீஷணனும் இருந்தபடியால் அனைவருக்கும் பலவிதமான தோஷங்கள் தொற்றிக் கொண்டன என்பதை அறிந்து கொள்கிறார். அவற்றை போக்குவதற்காக பூஜைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பூஜைகளை செய்வதற்கான குறிப்பிட்ட நாளையும் நேரத்தையும் வேதத்தில் உள்ள ஆகமங்களின் படி செய்ய அதற்காக பணிகளை மேற்கொண்டார். இதற்காக தனது நண்பர்களான சுக்ரீவனையும் விபீஷணனையும் ராமேஸ்வரத்திற்கு வரவேண்டும் என்று செய்தி சொல்லி அனுப்பினார்.
ராமரிடம் யுத்தம் செய்து அழிந்த ராவணனின் குணங்கள் கெட்டுப் போய் கீழானதாக இருந்ததே தவிர அவன் சிவன் மீது கொண்ட பக்தியும் அவன் செய்த பூஜைகளும் அவனது பலமும் மிகவும் உயர்வானதாகவே இருந்தது. அதனால் ராவணனை அழித்த ராமருக்கு மூன்று விதமான தோஷங்கள் தொற்றிக் கொண்டன. அவை பிரம்ம ஹத்தி தோஷம், வீர ஹத்தி தோஷம் மற்றும் சாயா ஹத்தி தோஷம் ஆகும். ராவணன் சிறந்த சிவபக்தன். முறையாக வேதங்களை கற்று ஆகமங்களின் படி தினந்தோறும் யாகங்களை செய்தவன். அவனை ராமர் அழித்ததால் பிரம்ம ஹத்தி தோஷம் ராமருக்கு ஏற்பட்டது. பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்த ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். கார்த்த வீர்யார்ஜூனன் மற்றும் வாலி என்ற இருவரைத் தவிர தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்ட மிகச்சிறந்த வீரன் ராவணன். ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு வீர ஹத்தி தோஷம் உண்டானது. வீர ஹத்தி தோஷம் நீங்க வேதாரண்யம் (திருமறைக்காடு) தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமர். மூன்றாவதாக சாயா என்றால் பிரகாசமான ஒளி என்று அர்த்தம். சாயா என்பது கீர்த்திக்குரிய எந்தக் குணத்தையும் குறிக்கும். ராவணனுக்கு உருவத்தில் கம்பீரமும், வேத சாஸ்திரப் படிப்பும், சங்கீத ஞானமும், சிவ பக்தியும் ஆகிய பல சாயாக்கள் இருந்ததால் அவனை அழித்ததில் ராமருக்கு சாயா ஹத்தி தோஷம் உண்டாயிற்று. சாயா ஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரம் தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமர்.
ராமர் தன்னுடைய பிரம்ம ஹத்தி தோஷம் விலகுவதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட ராமேஸ்வரத்திற்கு தனது நண்பர்களான சுக்ரீவன் அனுமன் விபீஷணன் ஆகியோருடன் வந்தார். கடற்கரையில் சிவ பூஜை செய்வதற்காக குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வரும்படி அனுமனிடம் கேட்டுக் கொண்டார் ராமர். ராமரின் கட்டளையை நிறைவேற்ற அனுமன் காசி நோக்கிப் புறப்பட்டார். அனுமன் காசியில் இருந்து சிவ லிங்கம் கொண்டு வருவதற்கு வெகு நேரம் ஆகியது. குறிப்பிட்ட காலம் முடிவதற்கு முன்பாக சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார் ராமர். அவரது எண்ணத்தை புரிந்து கொண்ட சீதை கடற்கரை மணலிலேயே ஒரு சிவலிங்கத்தை செய்தாள். அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு வழிபாடும் செய்து முடித்தார் ராமர். இந்த லிங்கமே தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசியில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் வருந்தினார். அதனால் அந்த மணல் லிங்கத்தை அங்கிருந்து தனது வலிமையான வாலால் எடுக்க முயன்றார் அனுமன். இந்த முயற்சியில் தோல்வியுற்ற அனுமனுக்கு அவரது வால் அறுந்தது. அதனால் வருத்தமடைந்த அனுமனிடம் ராமர் தனக்காக மிகவும் சிரமப்பட்டு லிங்கத்தை கொண்டு வந்ததற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர் கொண்டு வந்த காசி லிங்கத்திற்கு முதல் பூஜை நடந்த பிறகே தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜைகள் நடக்கும் என்று ஆறுதல் கூறினார். அந்த லிங்கம் தற்போது ராமேஸ்வரத்தில் ராமநாதருக்கு வடது புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டு காசி விஸ்வநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ராமேஸ்வரத்தில் தினந்தோறும் அதிகாலையில் காசி விஸ்வநாதருக்கு முதல் பூஜை செய்த பின்னரே ராமர் பிரதிஷ்டை செய்த ராமநாதருக்கு பூஜைகள் செய்யப்படுகிறது. ராமருடன் பல இடங்களுக்கு சென்ற சுக்ரீவன் விபீஷணன் உட்பட யுத்தம் செய்து தோஷங்கள் உள்ள அனைவரும் ராமரின் கட்டளைப்படி பூஜைகள் செய்து தங்களது தோஷங்களை போக்கிக் கொண்டார்கள்.
உத்தர காண்டம் முன்னுரை முற்றுப் பெற்றது.