சந்தையில் இருக்கும் மாட்டு வண்டிக்கு உயிரும் இல்லை அறிவும் இல்லை. மாட்டுக்கு உயிர் உண்டு அறிவும் உண்டு வண்டிக்காரன் உயிருடன் இருக்கும் அறிவுள்ள மாட்டை உயிரில்லாத வண்டியுடன் பூட்டி தான் செல்ல வேண்டிய இடத்தை தீர்மானித்து வண்டியை செலுத்துவான். மாட்டிற்கு தேவையான உணவையும் தண்ணீரையும் வழியில் கொடுப்பான். ஒய்வு நேரத்தில் அதற்கு ஓய்வு கொடுப்பான். சில நேரங்களில் பாதை நன்றாக இருக்கும். மாடு சுலமாக செல்லும். சில நேரங்கிளில் கரடு முரடான பாதை வரும். அப்போது மாட்டினால் தூக்க முடிந்த அளவு மட்டுமே பாரத்தை வைத்து கரடு முரடான பாதையில் கொண்டு செல்வான். பாதை சரியில்லை என்றால் வேறு பாதையில் செல்வான். எவ்வளவு தூரம் எவ்வளவு நேரம் எவ்வளவு பாரம் அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே. அறிவிருந்தும் அனைத்தையும் சுமந்து நடப்பது தானாக இருந்தாலும் மாட்டினால் ஒன்றும் செய்ய இயலாது. அதுபோல
உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா என்ற மாட்டுடன் பூட்டி இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டி தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். மனிதன் இயங்கி ஒடிக்கொண்டே இருக்கின்றான். மனிதனுக்கு தேவையான உணவு தண்ணீர் அளித்துவிடுகின்றான். அவன் கர்ம விதிப்படி தாங்கும் அளவிற்கு சந்தோசம் துக்கம் கொடுக்கின்றான். எத்தனை பிறவி எத்தனை காலம் அனைத்தையும் தீர்மானித்து இயக்குபவன் இறைவன் ஒருவனே. இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை. இதை உணராதவனுக்கு அமைதி இல்லை.