பக்தி

ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு முதிய செல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு பாலைவன வழியில் பயணித்துக் கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர், அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். புனிதத் தலத்தில் இறைவனைத் தொழுது விட்டுத் திரும்பிய பின் அவர் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். பாலைவனத்தில் ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி அந்த வழியாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு உண்ண உணவும் இளைப்பாறிச் செல்ல வசதியும் ஏற்படுத்தித் தர முடிவு செய்தார். அதையும் தானே அங்கு தங்கிச் செய்ய நினைத்த அவர் மகன்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுத் தன் செல்வத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பாலைவனத்தின் மத்தியில் அந்தப் பெரியவர் பெரிய கூடாரம் இட்டுக் கொண்டு அதில் சில வேலையாட்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அவர் இலவசமாக நீர் மற்றும் உணவும் இளைப்பாற வசதிகளும் தந்தார். ஆனால் வருபவர்கள் தொழுகை நடத்தி இறைவனை வணங்கிய பின்னரே அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார். பாலைவன வழியாக பயணித்த அனைவருக்கும் அவர் சேவை பெரிய உபகாரமாக இருந்தது. புனிதத் தலத்திற்குச் செல்லாமல் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் அவர் கூடாரத்திற்கு வந்து தொழுகை நடத்தி சாப்பிட்டு இளைப்பாறி விட்டுத் திருப்தியுடன் சென்றார்கள். அந்தப் பெரியவரும் அந்தப் பயணிகளுக்கு உதவ முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தார். பசியுடனும் களைப்புடனும் கூடாரத்திற்குள் நுழையும் மக்கள் திருப்தியுடனும், உற்சாகத்துடனும் கிளம்புவதைக் காணும் போது இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யும் சேவை போல் அவருக்கு நிறைவைத் தந்தது. அவரும் ஒரு ஆளிற்காவது உணவளிக்காமல் உணவருந்தியதில்லை. அவர் தொழுது முடித்தாலும் கூட யாத்திரீகர்களில் ஒருவராவது வந்து தொழுகை நடத்தி முடிக்கும் வரை காத்திருந்து அவருடன் சேர்ந்து தான் அவரும் உண்பார்.

ஒரு நாள் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தபடியால் பாலைவனத்தில் நீண்ட நேரம் யாரும் காணவில்லை. பெரியவர் ஒருவராவது வரட்டும் என்று உணவருந்தாமல் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரு பயணி களைத்துப் போய் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பெரியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனை மனமார வரவேற்று உபசரித்த பெரியவர் சொன்னார். வாருங்கள். கை கால் கழுவி விட்டு இறைவனைத் தொழுங்கள். உணவு தயாராக இருக்கிறது, இறைவனைத் தொழுவதா? நானா? என்றான் அவன். அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? நான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதில்லை. நான் இது வரை ஒரு முறை கூட இறைவனைத் தொழுததும் இல்லை, பெரியவர் வருத்தத்தோடு சொன்னார். நான் இங்கு வசிப்பதையும், இந்த வழியாகப் புனிதத் தலத்திற்குப் பயணிக்கும் இறை உணர்வாளர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதையும் இறை பணியாகவே செய்து வருகிறேன். அதனால் இறைவனைத் தொழாதவருக்கு நான் உணவு தருவதில்லை. அவன் உறுதியாகச் சொன்னான். இறைவனைத் தொழுதால் தான் உணவு கிடைக்கும் என்றால் எனக்கு தங்கள் உணவு தேவை இல்லை, அவர் எவ்வளவோ சொல்லியும் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரும் அவன் தொழாமல் உணவு பரிமாற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவன் பசியோடே அங்கிருந்து வெளியேறினான்.

பசியோடவே இருந்தாலும் இருப்பேனே தவிர இறைவனை வணங்க மாட்டேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தது அவருக்கு திகைப்பாக இருந்தது. அன்று முழுவதும் வேறு யாரும் அந்த வழியாக வரவுமில்லை. அவரும் உணவருந்தாமலேயே இரவு வரை காத்திருந்து விட்டு உறங்கச் சென்றார். இரவில் அவரது கனவில் இறைவன் குரல் ஒலித்தது. என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே, பெரியவருக்கு சுருக்கென்றது. கருணை மயமான இறைவன் தன்னை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எல்லோரையும் காத்து வருகிறார் என்று எண்ணி மறு நாளில் இருந்து அவர் இறைவனைத் தொழுதால் தான் உணவு என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார். வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இல்லை, அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது, அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட எல்லாம் வல்ல இறைவன் அருள் இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.