இல்லறம் அது நல்லறம்

முனிவரிடம் அவரது சீடர் இல்லறம் அது நல்லறம் என்று சொல்கிறார்கள். அது ஏன் என்று கேள்வி கேட்டார். விரைவில் அதற்கு பதில் கொடுப்பதாக முனிவர் கூறினார். அப்போது அவரிடன் வந்த ஒரு பறவை சுவாமி உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து சென்று அங்கே உள்ள ஒரு அழகான தீவை பார்க்க விரும்புகிறேன் நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றது. அதற்கு முனிவர் பறவையே உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஆகவே முயற்சி செய். ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் முனிவர். தலையசைத்து விட்டு பறந்தது பறவை.

இதனை கவனித்த சீடன் ஏன் சோர்வு வரும் போது திரும்ப வர வேண்டும் என்று கேள்வி கேட்டான். அதற்கு முனிவர் சீடனே முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்து விடுவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார். ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. சுவாமி கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன் சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால் கடலில் விழுந்திருப்பேன். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் என் முயற்சியை தொடர விரும்புகிறேன் என்றது பறவை. அதற்கு முனிவர் பறவையே இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன் திரும்பி வா என்றார் சாது. பதினைந்து நாட்கள் போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன. சுவாமி எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்து விட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள் என்றது பறவை.

முனிவர் கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார். பறவைகளே பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள் என்றார் முனிவர். பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு முனிவரிடம் வந்தன. சுவாமி உங்களின் வழிகாட்டுதலினால் ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் எனது துணையுடன் ஓய்வெடுத்தோம் என்றது பறவை.

பறவைகளே அருமை நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா? என்று கேட்டார் முனிவர். சுவாமி சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் யார் இதனை சுமந்து செல்வது என்று எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால் கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது காப்பாற்றுகிறது என்ற உண்மை புரிந்தது என்று முனிவருக்கு நன்றி சொல்லி விட்டு பறந்தது பறவை.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சீடனிடம் பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்கு காரணம் துணை. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய குச்சி என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது சண்டையைக் கொடுத்தது பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது. ஆனால் அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது. பறவைகளுக்கு குச்சியைப் போல மனிதர்களுக்கு இல்லறம் கருவியாகிறது.

சம்சார சாகரம் என்ற பிறவிக் கடலை கடக்க கடலில் குதிக்க வேண்டியதில்லை நீந்த வேண்டியதில்லை. துணையின் உதவியுடன் இல்லறம் என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம். குச்சியை சுமப்பதாக பறவைகளுக்கு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும் குச்சியே பறவைகளை சுமக்கிறது. இதைப் போல கணவனும் மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையில் இல்லறமே அவர்களை நல்லறமாக இருந்து வழி நடத்தி சம்சார சாகரம் என்ற பிறவிக் கடலை கடந்து இறைவனை அடைய உதவி செய்கிறது என்று சொல்லி முடித்தார்.

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரத்தைப்பற்றி காஞ்சி மஹா பெரியவர் சொன்னது. காயத்ரீ மந்திரமானது மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநு சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

ரிக் யஜுர் ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த சாரம் காயத்ரீ மகாமந்திரம். காயத்ரீ என்றால் எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்று பொருள். கானம் பண்ணவதென்றால் இங்கே பாடுவது என்று பொருளில்லை. அன்புடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் பய பக்தியுடனும் அன்புடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் காக்கும். அதனால் அந்தப் பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது காயத்ரீம் சந்தஸாம் மாதா என்று இருக்கிறது. சந்தஸ் என்றால் வேதம். வேத மந்திரங்களுக்கு எல்லாம் தாயார் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அட்சரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொரு அடியிலும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு திரிபதா காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது. காயத்ரீயில் சகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். வேத மந்திரங்களில் சித்தி உண்டாக காயத்ரீயை சரியாக ஜபம் செய்ய வேண்டும்.

தேகம்

தேங்காய் மட்டையோடு இருக்கும் போது அதை தேங்காய் என்ற பெயர் இருந்தது. தேங்காயிலிருந்து மட்டையைப் பிரித்து எடுத்தபின் அதற்கு தேங்காய் என்ற பெயர் நீங்கி மட்டை என்ற பெயர் வந்து விடுகிறது. அது இறுதியில் மண்ணொடு மண்ணாகி மட்டை என்ற பெயர் மண் என்றாகி விடுகிறது.

நார் தேங்காயோடு இருக்கும் போது அதற்கு தேங்காய் என்ற பெயர் இருந்தது. அதை தேங்காயிலிருந்து பிரித்தபின் அதற்கு தேங்காய் என்ற பெயர் போய் நார் என்ற பெயர் வந்து விடுகிறது. அது இறுதியில் மண்ணொடு மண்ணாகி நார் என்ற பெயர் மண் என்றாகி விடுகிறது.

ஓடு தேங்காயோடு இருக்கும் போது தேங்காய் என்ற பெயர் இருந்தது. உள்ளே உள்ள பருப்பில் இருந்து ஓட்டைப் பிரித்ததும் அதற்கு தேங்காய் என்ற பெயர் போய் தேங்காயோடு அல்லது சிரட்டை என்ற பெயர் வந்து விடுகிறது. அது இறுதியில் மண்ணொடு மண்ணாகி ஓடு என்ற பெயர் மண் என்றாகி விடுகிறது.

தேங்காயின் பருப்பைச் செக்கில் இட்டு ஆட்டியெடுத்தால் பருப்பின் கழிவுகளுக்கு சக்கை என்ற பெயரும் வந்து விடுகிறது. இந்த சக்கை இறுதியில் மண்ணொடு மண்ணாகி சக்கை என்ற பெயர் மண் என்றாகி விடுகிறது. தேங்காயில் இருந்து இத்தனை பொருட்கள் பிரிந்து இறுதியில் இருக்கும் நீர்ம பொருளுக்கு எண்ணெய் என்ற பெயர் வந்து விடுகிறது.

மண்ணிலிருந்து வந்த தென்னை மரத்தில் இருந்து வந்த தேங்காய் அதிலிருந்து பிரிந்த பொருட்கள் ஒவ்வொன்றாக மண்ணோடு மண்ணாகி விடுகிறது. இறுதியாக இருக்கும் அந்த எண்ணெயில் திரி போட்டு விளக்கேற்றினால் அந்த எண்ணெய் ஒளியாக மாறி ஆகாயத்தோடு கலந்து விடுகிறது.

இப்போது தேங்காய் எங்கே இருக்கிறது? தேங்காய் என்று எதைக் கூறுவது? தன்னை சுற்றியுள்ள பொருளை ஒவ்வொன்றாக பிரிக்க பிரிக்க இறுதியில் உள்ள எண்ணெய் என்ற பொருளும் பிரபஞ்சத்தில் கலந்து விட்டது. இப்போது தேங்காய் என்று எதைக் கூறுவது?

இதுபோல்தான் இந்தத் தேகம். இந்த தேகத்தை நான் என்று சொல்கிறோம். இந்த நான் என்றால் யார்? இந்த கையா? காலா? கண்ணா? முக்கா? உணர்வுகளா? மனமா? சிந்தனையா? உடம்பை மனதை இயக்கும் மூச்சுக் காற்றா? இவை அனைத்தும் சேர்ந்ததுதான் தேகம். இவை அனைத்தும் எப்படி ஒன்றாக இருக்கிறது. ஆசைகள் வினைகள் இவற்றை அனுபவிக்க இவை அனைத்தையும் இறைவன் ஒன்றாக்கி தேகம் என்ற பெயரில் இறைவன் கொடுத்திருக்கிறார். இந்த தேகத்தில் இவற்றை அனுபவிக்கும் போது தேகத்தோடு நிற்பது இன்பம் மற்றும் துன்பம். இறுதியில் அந்த தேகமும் அழிந்து அடுத்த தேகத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆசைகள் துன்பங்கள் இவற்றை அனுபவித்து இறுதியில் இறத்தல் மீண்டும் பிறத்தல் என்று ஒரு பிறவி சுழற்சியில் மாட்டி இந்த ஆன்மா சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த சுழற்சியில் இருந்து மீள என்ன வழி?

இந்த தேகத்தை சுற்றி இருக்கும் ஆசைகள் மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை மற்றும் வினைகள் இவை அனைத்தையும் பிரித்து விட்டால் இறுதியில் இருப்பது ஆன்மா மட்டுமே. அதுவும் நான் என்ற உணர்வு இல்லாத நிலையில் இறைவனோடு இரண்டறக் கலந்து விடுகிறது. பிறவி சுழற்சியில் இருந்து மீள இதுவே வழி. இந்த தேகத்திலிருந்து இவை அனைத்தையும் பிரிக்க என்ன செய்ய வேண்டும்?

கை கால் கண் காது மூக்கு போன்ற இந்த தேகத்தில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் நானல்ல. தேகத்திற்குள் ஓடிக் கொண்டு இருந்த சுவாசம் நானல்ல. அந்த சுவாசத்தில் கலந்து ஓடிக் கொண்டிருக்கிற உணர்வும் நானல்ல. மனமும் நானல்ல. நினைவும் நானல்ல. நினைவுக்குள் இருக்கும் அறிவு நானல்ல என்ற பாவனையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்பம் துன்பம் என்று எதனை அனுபவித்தாலும் அனைத்தும் இறைவன் செயலே என்ற சிந்தனையை வளர்த்துக் கொண்டே சென்றால் இந்த பாவனை நம்பிக்கையாக உணர்வாக மாறி தேகத்தில் உள்ள அனைத்தையும் பிரித்து விடும். இறுதியில் ஜோதி வடிவில் ஆத்மாவானது தனித்து நிற்கும். அதன் பெயர்தான் கடவுள். கட + உள் = கடவுள். இந்த உடம்பை கடந்து உள்ளே சென்றால் இருப்பது கடவுள். இந்த கடவுளை உணர்ந்து கொள்ள தேங்காய் எப்படி ஒவ்வொன்றாக விட்டு இறுதியில் எண்ணையாக மாறி தீபத்தில் எரிந்து பிரபஞ்சத்தோடு கலந்து விட்டதோ அதுபோல் நாமும் நமது தேகத்தை சுற்றி இருப்பவற்றை ஒவ்வொன்றாக விட இறுதியில் இருக்கும் இந்த ஜீவாத்மா அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் இருக்கும் அந்த பரமாதவாவோடு கலந்து விடும்.

பக்தியின் உச்சம் அன்பு

லட்சுமி அம்மாள் என்கின்ற எச்சம்மாள் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். வினையின் காரணமாக அவரது கணவர் அவரது மகன் மற்றும் இரண்டு மகள்கள் அடுத்தடுத்து இழந்த நிலையில் விதி அவளை ரமணரின் முன்னிலையில் அழைத்துச் சென்று நிறுத்தியது. எச்சம்மாள் விருபாக்ஷா குகையில் ரமணரின் முன் ஒரு மணி நேரம் நின்றாள். அந்த ஒரு மணி நேரத்தில் அவளுடைய வேதனைப்பட்ட இதயமும் அதிர்ச்சியடைந்த மனமும் மாறியது. அவளின் மனம் அமைதியின் உச்சத்திற்கு சென்றது. ரமண மகரிஷியுடனான இந்த சந்திப்பிற்குப் பிறகு எச்சம்மாள் 1907 இல் திருவண்ணாமலையில் குடியேறினார். தினமும் சுவாமியை தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு அவருக்கும் அவருடன் வசிப்பவர்களுக்கும் உணவு கொண்டு வரும் பணியை எச்சம்மாள் எடுத்துக் கொண்டாள்.

எச்சம்மாள் ஒரு முறை பகவானுடைய படத்துக்கு ஒரு லட்சம் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதாக சங்கல்பித்தார். எவ்வளவு தேடியும் 50000 இலைகள் மட்டுமே அவளுக்கு கிடைத்தன. கடும் கோடை வேறு எங்கும் இலைகள் கிடைக்கவில்லை. வில்வ இலைகள் கிடைக்க அருள்புரியுமாறு ரமணரிடம் முறையிட்டார். உடனே ரமணர் உன் உடம்பை கிள்ளி பூஜை பண்ணு என்றார் ரமணர். எச்சம்மாளுக்கு தூக்கி வாரிப் போட்டது. கிள்ளினால் வலிக்குமே என்றார். மரத்திலிருந்து இலையை கிள்ளினால் வலிக்காதா? என்றார் ரமணர். எச்சம்மாளுக்கு தன் தவறு புரிந்தது. பகவானே முன்னேயே சொல்லி இருந்தால் அந்த ஐம்பதாயிரம் இலைகளை கிள்ளி இருக்க மாட்டேனே? என்றார். உன் உடம்பை கிள்ளினால் வலிக்கும்ன்னு தெரியும். இலைகளை கிள்ளினா அதுக்கு வலிக்கும்ன்னு தெரியாதா? இதெல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா? என்றார் ரமணர்.

பூஜை என்பது இலைகளைக் கிள்ளியும் பூக்களைப் போட்டும் மாலைகளை அணிவித்தும் நைவேத்தியம் செய்தும் படைப்பதல்ல. இதெல்லாம் கண் தெரியாதவனுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல உதவும் கம்பு போல இறைவனின் அருகில் செல்ல உதவும். ஆனால் பக்தியில் முழுமையடைய வேண்டுமானால் எதிரே இருக்கும் இறைவன் அனைத்து உயிர்களுக்கும் இருக்கின்றான் என்று உணர்வதும் தனக்குள்ளேயே இருக்கின்றான் என்று உணர்வதும்தான் அந்த உணர்வில் அன்பை வெளிப்படுத்துவதே பக்தியின் உச்சம்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. திருமந்திரம் பாடல் எண்: 270

இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள்

ஒரு சமயம் இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள் பிராமணர் அல்லாத ஒருவருக்கு ஈமக் கடன்களைச் செய்தார். அதனால் அவ்வூரில் இருந்த பிராமணர்களும் அவரது உறவினர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர். இதைக் கேட்ட இராமானுஜர் குரு காரணம் இல்லாமல் எதனையும் செய்ய மாட்டார். ஆகவே அந்த காரணத்தை தெரிந்து கொள்ள அவர் இல்லம் சென்றார். இராமானுஜர் வந்த காரணத்தை அறிந்து கொண்ட குரு பெரிய நம்பிகள் அதற்கான காரணத்தை கூறினார்.

பிராமணர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட முறைப்படி பிராமணன் ஒருவன் பிராமணன் அல்லாதவனுக்கு ஈமக் கடன்கள் செய்வது என்பது பொருத்தமற்ற செயல் தான். இதனை பிராமணர்கள் வகுத்த விதிகள் ஏற்றுக் கொண்டாலும் அதனை அற நூல்கள் ஏற்றுக் கொள்ளாது. அறம் என்பது என்ன என்று தெரியுமா? சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு தர்மத்திற்குக்கு ஏற்ப நடந்து கொண்டார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். சத்ரிய குலத்தில் பிறந்த தர்மர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது? மதம் ஏது? என்னால் ஈமக் கடன்கள் செய்து தீயில் இடப்பட்டவன் என்னை விட பக்தியில் பல மடங்கு சிறந்தவன். அவனுக்கு இறுதிக் கடன் செய்து நான் பெரிய பேற்றினை பெற்றுள்ளேன் என்றார். பெரிய நம்பிகளின் பதிலைக் கேட்டு இராமானுஜர் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று அவரை விழுந்து வணங்கினார்.

தலையில் குட்டிக் கொள்தல்

விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகஸ்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து காவிரிநதி பெருக்கெடுத்து ஓடுமாறு செய்தார். பின் காக்கை வடிவம் நீங்கி சிறுவனாய் மாறி அவரது முன்னே நின்றார். சிறுவனது தலையில் குட்டுவதற்காக அவனைத் துரத்திச் சென்றார் அகஸ்தியர். அகத்தியர் அருகில் வந்ததும் விநாயகர் தமது உண்மை வடிவில் காட்சியளித்தார். குட்டுவதற்கு ஓங்கிய கையால் தம் நெற்றியில் குட்டிக் கொண்டு வினாயகரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் அகஸ்தியர். உங்களது முன்னர் நெற்றியில் குட்டிக் கொண்டு வழிபடும் மெய்யன்பர்களின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று அகஸ்தியர் வேண்டினார். விநாயகப் பெருமானும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார். அதன்படி கோயிலில் வினாயகர் முன்பு தனது தலையில் குட்டிக் கொண்டு வினாயகரின் அருளை பக்தர்கள் பெறுகிறார்கள்.

தலையில் குட்டிக் கொள்ளும் இடத்தில் முன் தலையின் இரு புறங்களிலும் டெம்போரல் லோப் உள்ளது. இது தலையின் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. டெம்போரல் லோப் என்பது மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள ஒரு ஜோடி பகுதி. காதுகளுக்கு அருகில் உங்கள் மண்டை ஓட்டின் உள்ளே இருக்கும் இந்த பகுதிகள் உணர்ச்சிகளை நிர்வகித்தல், புலன்களில் இருந்து தகவல்களை செயலாக்குதல், நினைவுகளை சேமித்து மீட்டெடுப்பது மற்றும் மொழியை புரிந்து கொள்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த இடத்தில் தான் ஞாபக சக்தியைத் தூண்டும் நாடிகள் அமைந்துள்ளன. இந்த இடத்தில் குட்டிக் கொள்வதால் இந்த நாடிகள் தூண்டி விடப்படுகின்றன. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் உள் எழுச்சியும் உண்டாகிறது. இதனை மனதில் கொண்டு முன் காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தலையில் குட்டி தண்டணை கொடுத்தார்கள்.

இந்த வினாயகர் இருக்கும் இடம் குன்றக்குடி குடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.

விதுரர் நீதி

மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாக இருந்தவர் விதுரர். திருதராட்டிரன் பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவியில் இல்லாமல் இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தார். விதுரர் மகா நீதிமான். தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். ஒரு முறை திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து மனிதனுக்கு ஆயுள் 100 வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும் முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர் 6 கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை குறைகின்றன என்றார். திருதராஷ்டிரர் அந்த வாள்கள் என்ன என்று கேட்டார். விதுரர் சொல்ல ஆரம்பித்தார்.

  1. அதிக கர்வம் கொள்ளுதல்

நானே கெட்டிக்காரன் எனக்கே அனைத்தும் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நான் செல்வந்தன் நான் கொடையாளி நான் நல்லவன் பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவன் தானாகவே அழித்து போவார்கள். கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் தன் விஷயத்தில் முதலில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் நல்ல குணங்களைப் பார்க்க வேண்டும்.

  1. அதிகம் பேசுதல்

கடுமையில்லாததும் உண்மையானதும் அன்பானதும் நன்மையைக் கொடுக்கின்ற வார்த்தை எதுவோ அது வாக்கினால் செய்யப்படும் தவம். உண்மையில்லாத அன்பில்லாத நன்மையை கொடுக்காத எந்த வார்த்தைகளாக இருந்தாலும் அந்த வார்த்தையை பேசும் சுழ்நிலை அமைந்தால் பேசாமல் இருக்க வேண்டும்.

  1. தியாக மனப்பான்மை இல்லாமை

சுகமானவைகள் அனைத்தையும் நான் மட்டும்தான் அனுபவிக்க வேண்டும். எனது குடும்பம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல. பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.

  1. கோபம்

கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் வெற்றியாளன். அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன் தர்மம் எது அதர்மம் எது என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும் யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். 

  1. சுய நலம்

சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். சுயநலத்தோடு இருப்பவர்கள் தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.

  1. நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது

தாயை அடுத்து நண்பனுக்கு என்று வரும் போது உயிரைக் கொடுப்பது நட்பு மட்டுமே. உலகில் அதுபோல் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த 6 கருத்துகளையும் சரியாக யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக நூறாண்டை நிறைவு செய்வான் என்று விதுரர் சொல்லி முடித்தார்.

மேலும் விதுரர் சொன்ன சில நீதிக் கருத்து

இந்த 3 சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

1.பசி வயிற்றை கிள்ளும் போது.
2.தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3.போதையில் இருக்கும் போது.

இந்த 3 சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

1.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2.மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3.மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த 3 விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

1.நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2.நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3.நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள். 

இந்த 3 பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

1.ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2.நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3.நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது. ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது. இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.

சங்கரர் ஜெயந்தி

காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை பூஜையெல்லாம் முடித்தும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தும் சற்று ஓய்வில் இருந்த நேரம். மடத்தில் அவருக்கு நெருங்கிய அன்பர்கள் சிலர் மட்டுமே மகா பெரியவருடன் அப்போது இருந்தனர். ஒருவர் காஞ்சி தவ முனிவரிடம் கேட்டார். தங்களுக்கு சிறிய வயதில் பிடித்த பண்டிகை எது? தீபாவளியா? தைப்பொங்கலா? கார்த்திகை தீபமா? கோகுலாஷ்டமியா? ஆருத்ரா தரிசனமா? எது என்று சொல்லுங்கள் என்றார்.

மகா பெரியவர் இது எதையும் குறிப்பிடாமல் எனக்குப் பிடித்த பண்டிகை சங்கர ஜெயந்தி என்றார். சூழ்ந்த பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சங்கர ஜெயந்தியில் அப்படி என்ன விசேஷமான பண்டங்கள் விருந்து? என வியந்தனர். அவர் சொன்னார் ஆதி சங்கரர் மட்டும் அவதாரம் செய்யாவிட்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகள்தான் ஏது? நமது சனாதன தர்மத்திற்கு புத்துயிர் அளித்த சங்கரர் ஜெயந்தி எனக்குப் பிடித்த பண்டிகை என்றார்.

ஆதிசங்கரர் சாதாரண மனிதனுக்கு நான்கு விஷயங்களைச் சொன்னார் .

1. பகவானுடைய நாமத்தை ஜபி. பகவத் கீதையைப் படி
2. பகவானுடைய விஷயத்தையே மனதில் சிந்தனை செய். வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காதே.
3. நீ யாரிடமாவது நட்புடன் பழக வேண்டும் என்றால் நல்ல மனிதர்களிடம் நட்புடன் இரு.
4. முடிந்த அளவு இன்னொருவனுக்கு தானம் செய். நீ இப்படி தானம் செய்ய வேண்டும் அப்படி தானம் செய்ய வேண்டும் என்று நாம் யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை. நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டும். இதை நாம் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களை நம் வாழ்க்கையில் நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வந்தால் இது மிகவும் உத்தமம் ஆகும். வாழ்க்கை திருப்தியாக வாழ்வதற்கு இதுதான் வழி.

மகா பெரியவர் மூன்றாவதாக சொல்லப்பட்ட உபதேசத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். யார் நல்ல மனிதர்கள் என்று பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாகத்தான் தோன்றுகிறது. பின்பு அவர்களுடன் கொஞ்ச நாட்கள் பழகிய பின்பு தான் அவர்களுடைய குணம் தெரிந்து விடுகிறது. முதலில் தெரியவே இல்லை என்று சொல்லலாம். நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கேட்டால் முக்கியமாக ஒரு உதவியை பெற்று விட்டு பதில் உதவி அவனுக்கு செய்யக் கூடாது என்கிற எண்ணம் உள்ளவர்கள் நல்லவர்கள். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும். ஆனால் இதற்கு ராமாயணத்தில் ராமர் விளக்கம் சொல்கிறார்.

ராமாயணத்தில் ராமருடைய மனைவி சீதா தேவியை ராவணன் அபகரித்துக் கொண்டு போனான். அந்த சமயத்தில் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது அனுமார். சீதை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவ்வளவு பெரிய சமுத்திரத்தைத் தாண்டி சீதை எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளோடு பேசி ராவணனுக்கு புத்திமதி சொல்லி சீதையிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவந்து ராமருக்கு கொடுத்து இறுதி போரில் ராமர் வெற்றி பெற்று சீதையை பெறுவதற்கு மகா பெரிய உதவி செய்தவர் அனுமார்.

அனுமாருக்கு ராமர் ஒரு வார்த்தை சொன்னார். நீ எனக்கு செய்த உதவியை நீ மறந்துவிடு. நீ திரும்ப ஒரு உதவியை என்னிடமிருந்து எதிர் பார்க்காதே. ஏன் திரும்ப உன்னிடமிருந்து ஒரு உதவியை எதிர் பார்க்கக் கூடாதா? இது என்ன அநியாயம்? என்று கேட்கலாம். காரணம் சொல்கிறார் ராமர். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனுடைய உதவி எப்பொழுது தேவைப்படும்? நாம் ஏதாவது ஒரு துன்பத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். துன்பத்தில் இல்லை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று துன்பத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு துன்பம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். நான் உதவி செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் உனக்கு ஒரு துன்பம் வரட்டும் என்று நீயே எதிர்பார்க்கிறாய் என்றுதானே அர்த்தம். இதை எதற்காக எதிர் பார்க்கிறாய்? நீ மகிழ்ச்சியுடன் நன்றாக இருக்க வேண்டியவன். ஆகவே இதுபோல் எதிர்பார்க்காதே என்று ராமர் அனுமாரிடம் சொன்னார்.

எதிர்பார்ப்பு இல்லாத காரணமில்லாத பக்தியை எவன் ஒருவன் இறைவனிடம் வைக்கிறானோ அவனே உண்மையான பக்தன். அது அநேகம் பேருக்கு புரியாமல் இருக்கலாம். பகவானை பூஜை செய்வது பகவானைப் பற்றி சிந்திப்பது என்பது இன்னொருவன் பாரக்க வேண்டும் என்பதற்காக எவன் செய்கிறானோ அது பக்தி இல்லை. இது என் கடமையை செய்கிறேன் என்கிற திருப்தியுடன் செய்பவனே உண்மையான பக்தன். இதுபோல் பக்தி செலுத்தி இறைவனுடைய நட்பை வைத்துக் கொள்ள வேண்டும். உலகியல் ரீதியாக பார்த்தால் அருகில் இருப்பவருடைய குணம் வருவதற்கு வாய்ப்புள்ளது. விடுமுறை என்றால் சினிமாவிற்கு செல்லும் நண்பனுடைய நட்பு கிடைத்தால் சினிமாவிற்கே கூப்பிடுவான். கோயிலுக்கு செல்லும் நண்பனின் நட்பு கிடைத்தால் கோயிலுக்கே கூப்பிடுவான். நல்ல சிந்தனையோடு இருப்பவர்களின் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் எல்லோருக்கும் மகா உபதேசங்களை அருளி சனாதன தர்மத்தைக் காப்பாற்றி இந்த உலகத்தை காப்பாற்றியவர் மகா புருஷர் ஆதிசங்கரர். அப்பேர்ப்பட்ட சங்கரரிடம் நாம் எல்லோரும் என்றைக்கும் பக்திமான்களாக இருக்க வேண்டும். அவருக்கு சகல மனிதர்களும் கடமைப் பட்டு உள்ளது. அவர்களுக்கு நாம் என்றைக்கும் சிஷ்யர்களாக இருக்க வேண்டும். ஆகையால்தான் சங்கர ஜெயந்தியை பெரிய வைபவமாக கொண்டாடுகிறோம். அந்த ஆதிசங்கரருடைய கடாட்சத்துடன் எல்லோரும் அவர் காட்டிய நல்ல மார்க்கத்தில் சென்று இறைவனை அடையட்டும் என்று பிரார்த்திக்கிறேன். என்று மகா பெரியவர் நிறைவு செய்தார்.

ஜீவன் முக்தி விதேக முக்தி

ரமண மகரிஷியிடம் பானர்ஜி எனும் பக்தர் ஒரு கேள்வி கேட்டார். ஜீவன் முக்திக்கும் விதேக முக்திக்கும் வித்தியாசம் என்ன?

ரமண மகரிஷிகள்: வித்தியாசம் ஒன்றுமில்லை. உடலுடன் இருக்கும் ஞானி ஜீவன் முக்தன். உடலை விடும்போது அவன் விதேக முக்தி அடைகிறான் என்று சொல்லலாம். ஆனால் இந்த வித்தியாசம் காண்பவருக்குத்தான் இருக்கும். ஞானிக்கு அல்ல. உடல் விடுவதற்கு முன்னும் பின்னும் ஞானியானவர் ஒரு நிலையிலேயே இருக்கிறான். நாம் ஞானியை மனித உருவமாக அல்லது அந்த உருவில் இருப்பவனாகப் பார்க்கிறோம். ஆனால் ஞானி தன்னை ஆன்மா ஒன்றேயான சத்வஸ்து. உள்ளும் புறமும் வியாபித்து எந்த உருவாலும் வடிவாலும் பந்தப்படாதவன் என்பதை அறிகிறான். பின்வரும் பாடலை பகவான் மேற்கோள் காட்டினார்.

தான்இருந்தும் தானாகத் தன்னைத்தான் நான்எவன்
யான்இருக்கும் ஸ்தானம் எதுவெனக்கேட் பானுக்கு
யான்எவன் எவ்விடம் யானுளன் என்றமது
பானனை யீடு பகர். – ஏகான்ம பஞ்சகம்

பொருள்: மது அருந்தியவனுக்குத் தன்மேல் ஆடை உள்ளதா இல்லையா என்ற உணர்வில்லாதது போல் ஞானிக்கு உடலின் உணர்வே இருக்காது. அது இருந்தாலும் விழுந்து விட்டாலும் வித்தியாசம் ஒன்றுமில்லை.

அரோகரா என்ற சொல்லின் பொருள்

ஹர ஹரோ ஹரா என்ற மந்திரத்தின் சுருக்கமே அரோகரா ஆகும். அரன் என்றால் காப்பவன். ஹர என்றால் நீக்குபவன். அரோகம் என்றால் நோயில்லாமல். அரோகரா என்றால் இறைவனே நோய் நொடிகளை நீக்கி துன்பங்களில் இருந்து காத்து நற்கதி அருள்வாயாக என்பதாகும்.