நாயாகப் பிறவி எடுப்பது ஏன்?

ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ராமரிடம் வந்து காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன் என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது. இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம் அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பினார். லட்சுமணன் குரைக்கும் நாயை நெருங்கி உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல் என்று கேட்டான். அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது ராமரை வரச் சொல்லுங்கள் எனக்கு நீதி வேண்டும் என்றது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன் நாய் சொன்னதை அப்படியே ராமரிடம் கூறினான். உடனே ராமர் வெளியே வந்தார். எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார். அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது. என்னை சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன் எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது. ராமர் கனிவான குரலில் வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன் என்று சன்யாசியை அழைத்து வர உத்தரவிட்டார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வந்து ராமரை வணங்கி நின்றார்.

ராமர் சன்யாசியிடம் நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள் என்று விசாரித்தார். அதற்கு சன்யாசி நான் பிட்சை வாங்கி வரும்போது இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட முயற்சி செய்தது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார். ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி இந்த நாய் ஐந்தறிவு படைத்த பிராணி. இதனால் தனக்கு தேவையான உணவே சமைக்கவோ உருவாக்குக் கொள்ளவோ தெரியாது. பார்க்கும் உணவே சாப்பிடவே தோன்றும் இது ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு உண்டான விதி. உங்களுக்கு பசி இருப்பது போல் இந்த நாயிற்கும் பசி எடுத்ததினால் உங்களது உணவை சாப்பிட முயற்சி செய்தது. இந்த நாயின் விதிப்படி இது தவறு அல்ல. பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு உண்டான தர்மம். நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டுமல்லாமல் நாயை கல்லால் அடித்து காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள். உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீங்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறினார். நாயின் பக்கம் திரும்பிய ராமர் இந்த சன்யாசி உனக்கு கெடுதல் செய்திருப்பதால் இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார். அதற்கு அந்த நாய் இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது.

ராமர் அதற்குச் சம்மதித்து அதற்கான ஆணையை பிறப்பித்தார். தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன் நின்றார்கள். அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். இது எப்படி தண்டனை ஆகும் என்று மக்கள் ராமரிடம் கேட்டார்கள். அனைத்தும் அறிந்த ராமர் நாயிடமே இதனை கேட்டு தெரிந்து கொள்வோம் என்று அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார். நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியே மக்கள் கேட்டார்கள். அதற்கு அந்த நாய் சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. சிவாலயம் மடம் கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள் பசு அந்தணர் அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள் அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள் அந்தணரின் உணவுப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள். சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால் இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன். இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த சன்யாசி சிவாலயப் பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை அடைவார். ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது. அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது.

கருத்து: சிவாலயம் மடம் அரசு நிர்வாகம் போன்ற பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. பசு அந்தணர் ஆதரவற்றோர் ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படகூடாது. அரசனை காண வரும் யாசகர்களை தடுக்கக்கூடாது. உண்மையான அந்தணர்களின் பொருளை அபகரிக்ககூடாது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாண்டியன் கொண்டை

அரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை. முக்கியத் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே வெளிவருவார். அரங்கனே தன் பக்தர்களில் ஒருவரானக் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி என்பவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொல்லி வாங்கியிருக்கிறார். அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி திருமலை திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டு பின்னர் அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை தான்யங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப்பெருமாளின் சந்நிதிக்குக்கு பல கைங்கரியங்களைச் செய்து வந்தார். காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்து வந்தார். ஒரு நாள் நந்தவனத்தில் வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு தீண்டியது.. அவர் சற்றும் அஞ்சாமல் பெருந்தேவித் தாயார் சந்நிதிக்குச் சென்று பல கீர்த்தனைகளைப் பாடி அங்கேயே மயங்கி விழுந்தார். பின்னர் தூங்கி எழுந்திருப்பவர் போல் எழுந்து பெருமாள் சந்நிதிக்கு சென்று பிரசாதங்கள் வாங்கிக் கொண்டார். கொடிய பாம்பின் விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை..

ஒரு நாள் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகளின் கனவில் அரங்கன் உற்சவக் கோலத்தில் தோன்றித் தனக்குப் பாண்டிய மன்னனால் சமர்ப்பிக்கப்பட்ட பாண்டியன் கொண்டை பழசாகிப் பழுதடைந்து விட்டதாகவும் புதியது தேவை என்றும் கேட்டார். வேங்கடாத்ரி சுவாமி இருந்தது காஞ்சியில் அங்கே குடிகொண்டிருந்த வரதராஜரைப் பிரார்த்தித்துக் கொண்டு எந்தவிதமான அளவுகளும் இல்லாமல் அரங்கனின் பாண்டியன் கொண்டைக்கு மாதிரியாக ஒன்றைச் செய்தார். வேங்கடாத்ரி சுவாமிகள். அதை எடுத்துக் கொண்டு திருவரங்கம் அடைந்தார். அரங்கனைக் கண்ட வேங்கடாத்ரி சுவாமிகள் தன்னை மறந்து அரங்கன் மேலும் நம்பெருமாள் மேலும் பற்பல கீர்த்தனைகளைப் பாடினார். அவர் பாடிய நின்னுகோரியுன்னா ராரே என்ற பாடல் அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சுவாமிகள் கொண்டு சென்ற மாதிரிக் கிரீடம் நம்பெருமாளுக்கு வைத்துப் பார்த்தால் மிக அழகாகப் பொருந்திவிட்டது. கோயிலின் ஊழியர்களும் மற்றப் பெரியோர்களும் சுவாமிகளின் இந்தத் திறமையையும் அபூர்வமான ஞானத்தையும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஶ்ரீரங்கம் முழுதும் சுவாமிகளின் புகழ் பரவியது.

மாதிரிக் கொண்டை போல இப்போது அசலில் செய்ய வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். வேங்கடாத்ரி சுவாமி ஒரு சபதம் எடுத்துக் கொண்டார். பாண்டியன் கொண்டையைச் செய்ய அன்றாடம் குறைந்த பட்சமாகப் பத்து ரூபாய் தேவை. ஆகவே தினம் தினம் பத்து ரூபாய் கிடைக்கும் வரை தான் பட்டினியாக இருப்பது எனத் தீர்மானித்தார். சில நாட்கள் கிடைத்தது. பல நாட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது அவரின் முக்கியச் சீடர்கள் ஆன வெங்கடசாமி நாயுடு, புதுச்சேரி அப்பாசாமி நாயுடு ஆகியோர் பத்து ரூபாய்களைக் கொடுத்தார்கள். பணம் கிடைக்கக் கிடைக்க அரங்கனின் பாண்டியன் கொண்டைத் தயாரிப்பும் மெல்ல மெல்ல நடந்து வந்தது.

கொண்டையில் பதிக்க ஒரு அங்குல அளவில் சதுர வடிவிலான மரகதக் கல் ஒன்று தேவைப்பட்டது. வேங்கடாத்ரி சுவாமி மரகதப் பச்சைக்கல்லைப் பெறப் பல வழிகளிலும் முயன்றார். அப்போது அரங்கன் அவர் கனவில் மீண்டும் தோன்றி கல்கத்தாவில் உள்ள வைர வியாபாரி ஒருவரின் வீட்டில் வடக்கு மூலையில் உள்ள இரும்புப் பெட்டியில் கொண்டையில் பதிக்கத் தேவையான மரகதப் பச்சைக்கல் இருப்பதாகவும் அதை வேண்டிப் பெறுமாறும் அந்த வைர வியாபாரியின் பெயர் மாதவ சேட் என்றும் தெரிவித்தார். சுவாமியின் பக்தர்களின் ஒருவரான காசிதாஸ் செளகார் என்பவர் மாதவ சேட்டின் கல்கத்தா விலாசத்தைப் பெற்று மரகதப் பச்சையை அரங்கனுக்காகக் கேட்டுக் கடிதம் எழுதினார். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மாதவ சேட் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ந்தார். அரங்கனே தன் கொண்டையில் வைக்க மரகதக் கல்லைக் கேட்டிருக்கிறான். அதுவும் நம்மிடம் இது என்ன விந்தை என்று எண்ணி இரும்புப் பெட்டியைத் தலைகீழாகப் புரட்டிப் பார்த்த மாதவ சேட் தன் தந்தையால் வைக்கப்பட்ட மரகதக் கல்லைக் கண்டெடுத்துவிட்டார். அவருக்கோ அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கோ அந்த மரகதக்கல் இருந்தது அன்று வரை தெரியவில்லை. கல்லை உடனடியாக அனுப்பி வைத்த மாதவ சேட் கூடவே தன்னுடைய பங்காக ஆயிரம் ரூபாய் பணமும் அனுப்பி வைத்தார்.

கொண்டை தயாராகி வந்தது. ஆனால் திடீரென கொண்டையைச் செய்து வந்த பொற்கொல்லனுக்குப் பேராசை பிடித்து விட்டது. ஆகவே மாதவ சேட் அனுப்பிய விலை உயர்ந்த மரகதக் கல்லை ஒளித்துவிட்டு அதற்கு பதிலாகச் சாதாரணப் பச்சைக்கல் ஒன்றை வைத்து விட்டான். இப்போதும் அரங்கன் விடவில்லை. வேங்கடாத்ரி சுவாமியின் கனவில் தோன்றி பொற்கொல்லன் கல்லை ஒளித்த விபரத்தைத் தெரிவித்து விட்டார். தன் சீடர்களோடு பொற்கொல்லனைச் சந்திக்கச் சென்ற வேங்கடாத்ரி சுவாமியைக் கண்ட கொல்லன் முதலில் தனக்கு எதுவுமே தெரியாது என சாதித்தான். ஆனால் அப்பாசாமி நாயுடுவும் மற்றும் சிலரும் அவனை மிரட்டி விசாரிக்கவே கல்லை மாற்றியதை ஒப்புக் கொண்டு அதைத் திரும்பக் கொடுத்தான். உண்மையான மரகதக் கல் பதிக்கப்பட்டுப் பாண்டியன் கொண்டை தயாராகி அரங்கனுக்குச் சமர்ப்பிக்க எடுத்துச் செல்லப்பட்டது. தன் சீடர்களுடன் கொண்டையை ஊர்வலமாக எடுத்துச் சென்றார் வேங்கடாத்ரி சுவாமிகள். திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அல்லது பரமபத ஏகாதசி என அழைக்கப்படும் நாளில் ருத்ரோகாரி ஆண்டில் 1863 ஆம் ஆண்டில் அந்தப் பாண்டியன் கொண்டை அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப் பட்டது. இன்றளவும் அந்தப் பாண்டியன் கொண்டை முக்கிய தினங்களில் மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசி அன்றும் நம்பெருமாளை அலங்கரித்து வருகிறது.

மறைபொருள் இறைவன்

ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை வந்தது. அம்மா நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய். அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது எனக்குக் காட்டு எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா நீ தண்ணீரைக் காட்டு என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது. அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.

இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.

உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது. அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.

அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவில் நிரம்பி இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை. எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.

இறைவன் மனிதனை படைத்து அவனுக்குள் நல்ல குணங்களையும் விதைத்து அவனுள்ளே மறைப்பொருளாய் அங்கும் இங்கும் எங்கும் சிவமாய் இருக்கின்றார்.

கட உபநிஷதம்.

இறைவனைத் தவிர வேறு எதன்மூலம் கிடைக்கின்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிலையானதல்ல. சில புறக் காரணங்களின் வாயிலாகக் கிடைக்கின்ற அமைதியும் மகிழ்ச்சியும் அந்தக் காரணம் விலகியதும் குலைந்துவிடும். ஆனால் இறைவனைப் பெறுவதால் கிடைக்கின்ற அமைதி எதனாலும் குலையாது.

கட உபநிஷதம்.

மகாபாரதப் போர் தத்துவம்

மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அதில் இருக்கும் தத்துவம் உண்மை. அதை அனைவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள். ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள். எண்ணிக்கையில் பெரிதான கௌரவர்களை எதிர்த்து கிருஷ்ண பரமாத்மா என்னும் மனசாட்சியின் படி சத்தியத்தை கடைபிடித்து சத்தியத்தின் படி வாழ்க்கையை வாழ்ந்து ஐம்புலன்களால் போரிட தீமைகளை வெற்றி பெறலாம். கர்ணன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை மோகம். அவன் இந்திரியங்களின் ஒரு பகுதி. கூடவே பிறந்தவன். ஆனால் தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் அவனது விருப்பம் ஆசை போல ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி தவறு செய்வான். அவனையும் வெற்றி பெற்றால் இறைவனை அடையலாம்.

தானம்வேறு தர்மம்வேறு

சூரியபகவான் சிவ பெருமானிடம் கேட்டார். பரம்பொருளே பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்தவன் கர்ணன். தான் பெற்ற புண்ணியங்கள் அனைத்தையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது. என கேட்டார் சூரியபகவான்.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்த பின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஆனால் தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இது தான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன் தான். ஆனால் மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது என்றார்.

கேட்டு கொடுப்பது தானம்
கேட்காமல் அளிப்பது தர்மம்

Image result for சிவபெருமான் சூரிய பகவான்

கந்த சஷ்டி கவசம் வரலாறு

முருகப்பெருமான் புகழ்பாடும் கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர் மிகச்சிறந்த முருக அடியார் கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து எடுத்தாளப்பட்டு இருக்கிறது. சஷ்டி கவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

பாலதேவராய சுவாமிகளுக்கு ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியவர் முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார்.

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது. மனம் வாடாது. குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம். நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

முருகன் அருள்

ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது சின்னப்புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூர புரையோடிப் போனதால் அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது வலி தாங்கமுடியாது தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர்.

இந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும் இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு நினைத்தவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான். 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக ஏன் அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.

ஐயப்பனின் திருவாபரணம்

மகர சங்கராந்தி காலத்தில் தவக்கோலத்திலிருந்து ஐயப்பன் கண் விழிக்கிறார். அன்றைய நாளில் ஐயப்பன் ராஜ கோலத்தில் தரிசனம் கொடுக்கிறார். மணிகண்டன் அவதாரக் காலத்தில் தன் வளர்ப்புத் தந்தையிடம் ஆண்டு தோறும் தவக்கோலத்தில் இருக்கும் ஐயப்பன் அந்த ஒருநாளில் கண்விழித்து தன் பக்தர்களைப் பார்த்து அனுக்கிரகம் பண்ணுவேன் என்று வாக்களித்திருந்தார். பகவான் கண்விழிக்கும் அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் விசேஷமாக ஆராதனை செய்வார்கள். ஐயப்பன் ஜோதி ஸ்வரூபனாகக் காட்சி கொடுக்கும் நாள் மகர சங்கராந்தி அன்று ஐயப்பனுக்கு திருவாபரணங்களை அணிவித்து தீப ஆரத்தி காட்டியதும் ஐயப்பனின் மகர ஜோதி தரிசனத்தை பொன்னம்பலமேட்டில் காணலாம். இந்தத் திருவாபரணப் பெட்டி பந்தள அரண்மனையிலிருந்து பயணித்து வந்து சரியாக மகரஜோதி தினத்தன்று சபரிமலை வந்து சேரும். இந்த நாளில் ஐயப்பன் திருவாபரணங்கள் அணிந்து பூரண சொரூபனாகக் காட்சி கொடுப்பான்.

மகர சங்கராந்தி தினத்தன்று பந்தள ராஜனின் காணிக்கையான திருவாபரணம் மூன்று பெட்டிகளில் சபரிமலைக்கு எடுத்து வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். திருவாபரணம் எங்கு சென்றாலும் கருடன் அதன் மேலேயே பறந்து வருகிறது. ஐயப்பனின் சந்நிதானத்தைப் பெட்டி அடைந்ததும் கருடன் சந்நிதானத்தை மூன்றுமுறை வலம் வந்து பின் பறந்து மறையும். மூன்று பெட்டிகளில் ஒன்று ஆபரணப்பெட்டி இரண்டு வெள்ளிப்பெட்டி மூன்று கொடிப்பெட்டி. இதில் ஆபரணப்பெட்டியில் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.

முதல் திருவாபரணம் பெட்டியில் இருப்பவை

  1. திருமுக மண்டலம் எனப்படும் முக கவசம்.
  2. பூரணா புஷ்கலா தேவியருடைய உருவங்கள்.
  3. பெரிய வாள் மற்றும் சிறிய வாள்.

4 இரண்டு யானை உருவங்கள்.

  1. கடுவா எனப்படும் புலி உருவம்.
  2. வில்வமாலை.
  3. சரப்பொளி மாலை.
  4. நவரத்தின மாலை.
  5. வெள்ளிகட்டிய வலம்புரிச் சங்கு இந்த ஆபரணப் பெட்டியில் இருக்கும்.

இரண்டாவதாக இருக்கும் வெள்ளிப் பெட்டியில் தங்கக்குடம் மற்றும் பூஜா பாத்திரங்கள் இருக்கும்.

மூன்றாவது கொடிப்பெட்டியில் யானைப் பட்டம், தலப்பாற மலை, மலையின் கொடிகள் ஆகியன இருக்கும்.

ஆபரணப்பெட்டி தவிர்த்த இரண்டு பெட்டிகளும் மாளிகை புறத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எழுந்தளிப்பு என்னும் நிகழ்ச்சியில் யானைக்கு அந்தப் பட்டத்தை சாத்தி ஊர்வலங்கள் நடைபெறும். திருவாபரணப் பெட்டி சந்நிதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பகவானுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். அந்தக் காலத்தில் மகர சங்கராந்தி அன்று காலையில்தான் பந்தள அரண்மனையில் இருந்து இந்தப் பெட்டிகள் கிளம்புமாம். இந்தப் பெட்டிகளைச் சுமப்பவர்கள் பெட்டியைத் தலைமேல் ஏற்றிக்கொண்டதும் தேவதா ஆவேசம் கொண்டு ஓடிவந்து அந்த நாளின் மாலையிலேயே சந்நிதானம் வந்து சேருவார்கள். காலங்கள் மாறிவிட்டன. தற்போது சுமார் இரண்டரை நாள்கள் ஆகின்றன.

இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்கென்றே சில குடும்பங்கள் உள்ளனர். அவர்கள் தான் இவற்றைச் சுமப்பர். இதில் பகவானின் சாட்சியம் என்பது போல இந்தப் பெட்டிகள் வெளியே எடுத்து வந்ததும் பருந்து ஒன்று மேலே வரும். கருடனை தரிசனம் செய்த பின்புதான் தலையில் திருவாபரணப் பெட்டிகள் ஏற்றப்பட்டு யாத்திரை புறப்படும். திருவாபரணப் பெட்டியோடு ஒரு பல்லக்கும் பந்தள ராஜாவும் உடன் வருவார். இந்த யாத்திரை செல்லும் வழியெல்லாம் உள்ள மக்கள் பகவானை தரிசனம் செய்ய வீட்டுவாசல்களில் கோலமிட்டு பூக்கள் தூவி வரவேற்பார்கள். இப்படி சரணகோஷத்தின் நடுவே மிதந்துவரும் இந்தத் திருவாபரணப்பெட்டி, பம்பை, நீலிமலை வழியாக சந்நிதானத்தை மகரசங்கராந்தி அன்று அடையும். திருவாபரணத்தைச் சுமந்துசென்று 18 படிகளில் ஏறி சுவாமிக்கு அணிவிப்பார்கள். ஐயப்பன் அன்று ராஜ கோலத்தில் காட்சி கொடுப்பார். ஐயப்பன் தன் முக மண்டலத்தில் மீசையோடும் பூரணா புஷ்கலா சமேதராக அச்சன்கோயில் அரசராகக் காட்சி கொடுப்பார். யானை புலிகள் எல்லாம் முன்பாக இருக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு முன்பாக இரு வாள்களும் வைக்கப்பட்டு ஐயன் அருட்காட்சி தருவார். அந்தக் கோலத்தில் ஐயனுக்கு தீபாராதனை முடிந்ததும் மகரஜோதி தரிசனம் நடைபெறும். வாழ்வில் விலைமதிக்க முடியாத ஜோதிதரிசனம் திருவாபரண தரிசனம்.

சித்தர்களின் உடலை ஏன் எரிக்காமல் ஜீவ சமாதி செய்கிறார்கள்?

பெருமையற்றவர் உடல் எரிக்கப்பட்டு பெருமையுள்ளவர் உடல் புதைக்கப் படவேண்டும் என்று திரு மூலர் சொல்கிறார்.

ஞானியர் தங்கள் உடலையே கோவிலாக கொண்டு வாழ்பவர்கள். அந்த உடலுக்கு தீவைப்பது திருக்கோவிலுக்கே தீவைப்பதற்க்கு சமனாகும். அவ்வாறு செய்தால் மண்ணில் மழையின்றி கொடிய பஞ்சம் ஏற்படும். மன்னர் அரசாட்சியை இழக்க வேண்டி வரும். அத்துடன் ஞானியரின் உடல்கள் அடக்கம் செய்ய ஆட்கள் இல்லாது மண்ணில் கிடந்தது அழிந்தால் அந்த நாட்டின் அழகு எல்லாம் கெட்டு நாடு வீழ்ச்சியடைந்து பெருந்துன்பம் ஏற்படும் என்றும் இவர்கள் உடல் மண்ணில் அடக்கம் செய்வதால் நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் கிட்டும் என்றும் நாடுவளம் பெறுவதுடன் நாட்டு மக்களுக்கும் நல்லருள் கிடைக்கும் என்று சொல்கிறார் திருமூலர்

இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து வெவ்வேறு இடங்களில் நடமாடி மீண்டும் அடக்கமாகின்றார்கள். இதனால் இவர்களை அடக்கம் செய்தததாக சொல்லாமல் ஜீவ சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.