பூரண சரணாகதி

ஒருவர் கடவுளுடைய மகிமை பிரார்த்தனையின் மகத்துவம் என்று தினமும் போதனை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் நதியை படகில் கடக்கும் போது படகு நீரில் மூழ்கி அதில் இருந்த பலரும் இறந்து விட்டார்கள். இவர் மட்டும் நதியின் நடுவே இருந்த ஒரு மரத்தின் கிளையை பிடித்துக் கொண்டு தண்ணீரில் மூழ்காமல் கடவுளே என்னை எப்படியாவது காப்பாற்றி விடு என்று பிரார்த்தனை செய்தார். அப்போது கடவுள் எதிரில் வந்து உன் பிரார்த்தனையை கேட்டு நான் வந்தேன் கவலைப்படாதே வா என் கையை பிடித்துக் கொள் என்றார். இந்த மனிதர் கிளையைப் பிடித்துக் கொண்டு நான் உன்னை பிரார்த்தனை செய்து கூப்பிட்டதற்காக நீ வந்திருக்கிறாய் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த மரக்கிளையை நான் விட்டால் தண்ணிரீல் அடித்துக் கொண்டு சென்று விடுவேன். ஆகையால் நான் இந்த கிளையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போதே என்னைக் காப்பாற்றி விடு. என் கையை மட்டும் கிளையில் இருந்து எடுக்கச் சொல்லாதே என்று சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர ஓடிப் போய் கடவுளை கட்டிக்கொண்டு அப்பா காப்பாற்றி விட்டாயே என்று சொல்லத் துணியவில்லை.

இதுதான் இந்த உலகத்தில் இன்று இருக்கும் பல பக்தர்களின் கதை. தன்னை இறைவனிடம் ஒப்புக்கு கொடுக்காமல் இருக்கிறார்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து முழுமையாக உன்னை கடவுளிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும்.

பரா முதல் குழந்தை வரை

பரா முதல் குழந்தை வரை

ஆதியிலிருந்தே இருக்கின்ற பரா எனும் அசையா சக்தியிலிருந்து
பரை எனும் அசையும் சக்தி தோன்றி
அந்த பராபரையிலிருந்து சிவம் தோன்றி
சிவத்தில் சக்தி தோன்றி
சக்தியில் நாதம் (ஒலி) தோன்றி
நாதத்தில் விந்து (ஒளி) தோன்றி
விந்துவில் சதாசிவம் தோன்றி
சதாசிவத்தில் மகேஸ்வரன் தோன்றி
மகேஸ்வரனில் ருத்திரன் தோன்றி
ருத்திரனில் விஷ்ணு தோன்றி
விஷ்ணுவில் பிரம்மா தோன்றி
பிரம்மாவில் ஆகாயம் தோன்றி
ஆகாயத்தில் வாயு தோன்றி
வாயுவில் அக்னி தோன்றி
அக்னியில் நீர் தோன்றி
நீரில் நிலம் தோன்றி
நிலத்தில் அன்னம் தோன்றி
அன்னத்தில் உயிர்சக்தி தோன்றி
உயிர்சக்தியில் உதிரம் தோன்றி
உதிரத்தில் மாமிசம் தோன்றி
மாமிசத்தில் மேதை (அறிவு) தோன்றி
மேதையில் அஸ்தி (எலும்பு) தோன்றி
அஸ்தியில் மச்சை (எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜை) தோன்றி
மச்சையில் சுக்கிலம் தோன்றி
சுக்கிலத்தில் சுரோணிதம் தோன்றியது.
சுக்கிலமானது சுரோணிதத்துடன் கலந்து ஜலமயமாகிப் பின்
ஏழாம் தினத்தில் குமிழியாகி
முப்பதாம் நாள் உதிரம் திரண்டு பிண்டமாகி
அறுபதாம் நாள் அப்பிண்டத்திற்கு சிரசு உண்டாகி
தொண்ணூறாம் நாள் பிண்டம் திரண்டு மூட்டு கை கால்கள் உண்டாகி
நூற்று இருபதாம் நாள் தண்டமாய் நரம்பு நாடி உண்டாகி
நூற்றி ஐம்பதாம் நாள் ஒன்பது துவாரங்களும் உண்டாகி
இருநூற்றுப் பத்தாம் நாள் பிராணன் உண்டாகிக் கருவை சூழ்ந்து புரளும்
இருநூற்று நாற்பதாம் நாள் மற்ற அவயங்கள் உண்டாகி
தாயுண்ட அன்ன சாரத்தை தொப்புள் வழியாக உண்டு பிள்ளையினுடைய உடல் வளர்ந்து தாயுடன் தோன்றி உயிருடன் ஆடும்.
இருநூற்றி எழுபதாம் நாள் தலை முதல் கால் வரை ரோமத் துவாரம் உண்டாகி அறிவுக் கண் திறந்து
முன்னூறாவது நாள் மலை மேலிருந்து தலைகீழாய் விழுவது போல் நிறைந்த பிண்டமாய் அபானனின் பலத்தினாலே பூமியில் பிறக்கும் குழந்தை.

ருத்ராட்சம்

முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் பிரம்மனிடம் வரம் பெற்று சர்வ வல்லமை படைத்தவனாக இருந்தான். அந்த கர்வத்தினால் அனைத்து தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் எம்மிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டோம். அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரே சக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் (தியானம் தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது மூன்று கண்களையும் அவர் பல ஆண்டுகள் மூடாமல் இருந்ததால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார்.

ருத்ராட்சத்தை பக்தியுடன் அணிபவர்களை சிவன் எப்பொழுதும் தன் கண் போலக் காப்பாற்றுவார். ருத்ராட்சம் அணிந்தால் மனமும் உடலும் தூய்மை அடைந்து நல்வழி நற்கதி முக்திக்கு வழிநடத்தும். ஆமாம் ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும் உணவு உண்ணும் போதும் தூங்கும் போதும் இல்லறத்தில் ஈடுபடும் போதும் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது. சிறுவர் சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். எல்லா காலத்திலும் எல்ல வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் அணிபவர்கள் மது அருந்துதல் புகை பிடித்தல் புலால் உண்ணுதல் போன்றவற்றை விட்டுவிட வேண்டும். ருத்ராட்சம் நீரில் மூழ்கினால் அது நல்ல ருத்ராட்சமாகும் மிதந்தால் அது போலி.

ருத்ராட்சம் பெண்கள் அணியக்கூடாது என ஒரு கருத்து பரவலாக உள்ளது அது உண்மையா? பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று அருணாசல புராணம் பாடல் எண் 330 விவரிக்கிறது.

உணவு

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்ற ஒரு வரி இலக்கிய பாடல்களில் உள்ளது இதற்கான விளக்கம்

காக்கை – இதனை பிரித்து படித்தால் கால் + கை. உள்ளங்கையில் கால் அளவு என்று பொருள்.
கறி சமைத்து – காய்கறி சமைத்து
கருவாடு மென்று – இதனை பிரித்து படித்தால் கரு + வாடும் + என்று . கரு என்றால் உடலின் கருவாகிய உயிர் வாடும் என்று பொருள்.
உண்பர் சைவர் – சைவர்கள் உண்பார்கள்

பொருள்: உடலின் கருவாகிய உயிர் வாடும் முன்பாக உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து சைவர்கள் உண்பார்கள்

கருத்து: சிவனை அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சைவர்கள் சிவனை தரிசிக்கும் வரை உடலில் உயிர் தங்க வேண்டுமென்பதற்காக உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து உண்பார்கள். இவ்வாறு உண்பதால் உடலில் நோய்கள் பெருகாது பற்றுகள் குறையும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒல்லியான தேகத்துடன் இருப்பதினால் முக்திக்கு வழிகாட்டியான யோகப்பயிற்சிகள் தவங்கள் எளியாக செய்ய முடியும்.

ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம் என்பது அவரவர்களால் அறியப்படுகிற ஒரு பொருள். இன்று வரை யாராலும் அதைப்பற்றி முழுவதுமாக சொல்ல முடியவில்லை. சொல்ல முடியாததன் காரணம் மனிதன் நூறு வருடங்கள் வாழ்கிறான் என்றால் ஆன்மாவின் தத்துவமோ கோடிக்கணக்கான வருடங்களாக இந்த உலகத்தில் வாழ்கிறது.

ஆத்ம ஞானத்ததைப் பற்றி கருத்துக்கள் சொல்வது குருடர்கள் யானையைத் தொட்டு தடவிப் பார்த்து தங்களது கருத்துக்களை சொல்வது மாதிரி தான் இருக்கும். யானையின் காலைத் தொட்டு பார்த்தவன் தூண் மாதிரி இருப்பதாகச் சொல்வான். அதன் காதை தொட்டு பார்த்தவன் முறம் மாதிரி இருப்பதாகச் சொல்வான். காதை தொட்டுப் பார்த்தவன் சொல்வதும் நிஜம்தான். காலை தொட்டுப் பார்த்தவன் சொல்வதும் நிஜம்தான். ஆனால் காதும் காலும் மட்டும் யானையாகாது. அவர்கள் கண்டது ஆத்ம ஞானத்தின் ஒரு பகுதி மட்டுமே.

சிவம்

மனிதனின் நாசி துவாரம் வழியாக பிராயாணாணம் பயிற்சி செய்து மேல் நோக்கி உச்சம் சென்று பின் மண்டையை சுற்றி வந்தால் அதன் வடிவமே சிவலிங்கம். சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில் அருவமாக ஒரு ஒளி தெரியும் அது தான் சிவம். குண்டலினி சக்தி என்றும் சொல்லலாம்.

அன்னதானம்

துர்வாச முனிவர் திருமுருகன் பூண்டியை வந்தடைந்து திருமுருகநாதருக்கு பூஜைகள் செய்தார். அங்கு பிதுர்க்கிரியை செய்வதற்கு சிறந்த இடம் என்பதை உணர்ந்தர். மறுதினம் தை அமாவாசை புண்ணியகாலமாக இருந்தது. எனவே தை அமாவாசை விடியற் காலையில் ஆலயத்திற்கு அருகே ஒரு பூந்தோட்டத்தில் சிவபூசை ஹோமம் செய்தார். அன்னத்தை நிவேதனம் செய்து பிதுர்களுக்கு மந்திர பூர்வமாக உணவு அளிக்கும் முன்பு காகத்திற்கு உணவு வைத்தார். அப்போது ஒரு காகம் வந்து மற்றைய காகங்களையும் கூவி அழைத்துச் சாப்பிட்டு தன் குஞ்சுக்கு கொடுக்க வாயில் உணவை அடக்கிக் கொண்டு தன் இருப்பிடம் சென்றது. செல்லும் வழியில் திருப்பிக்கொளியூர் என்னும் அவிநாசியிலுள்ள மற்றொரு காகம் அக்காகத்தை வந்து எதிர்த்து சோற்றைப் பறித்தது. அச்சோற்றில் சில பருக்கைகள் சிவவேடம் பூண்டவரின் பிட்சா பாத்திரத்தில் விழுந்தது. அதனை அறியாத அவர் அந்தச் சோற்றை உண்டு மகிழ்ந்தான்.

சோற்றை இழந்த காகம் வேறிடம் சென்று அன்னம் தேடி தன் குஞ்சுக்கு கொண்டு வரும்போது ஒரு வேடன் தன் அம்பால் அக்காகத்தை அடித்தான். காகம் திருப்புக்கொளியூர் எல்லையில் விழுந்து இறந்தது. அப்போது அந்த காகம் தேவவுருவம் பெற்று தேவ விமானத்தில் திருக்கைலையை அடைந்தது. உமாதேவியரோடு சிவபெருமான் எழுந்தருளிய சந்நிதியின் முன் நின்று வணங்கி எழுந்து கை குவித்து நின்றது. சிவகணங்களுக்கு ஒரு காகத்திற்கு முக்தியா என்று ஆச்சரியமடைந்தனர். சிவபெருமான் புன்முறுவல் பூத்து காகம் தனது மூக்கினால் கொத்தி விழுந்த சில சோற்று பருக்கைகளை அன்னதானமாக ஒரு சிவனடியார் உண்டதனால் இக்காகம் இங்கு வந்தது என்று சிவகணங்களுக்கு கூறினார். காகத்திற்கு தீர்க்கத் துண்டன் என்ற பெயரிட்டுச் சிவகணங்களில் ஒன்றாக இருக்கச் செய்தார்.

குரோதம்

பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி சவால் விட்டான். பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின் தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன் பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு வளர்ந்து நின்றான். பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார். அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப் பிடுங்கி எறியத் தொடங்கினான். ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்லமுடியாதென்று உணர்ந்து கொண்டான். சகோதரன் கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.

அண்ணா இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள். நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன். என்று உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு வந்தார். கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை. இரண்டு கைகளையும் அகலவிரித்து அரக்கனைப் பார்த்து புன்னகை பூத்தார். அரக்கனின் உருவம் சாதாரண மனித வடிவை அடைந்தது. வா என் தோழனே என்று மீண்டும் கூப்பிட்டு அவன் அருகில் சென்றார். அரக்கனின் உருவம் சிறியதாகிக் கொண்டே சென்றது. அரக்கன் அருகில் சென்ற கிருஷ்ணன் அவனை அரவணைத்து தட்டிக்கொடுத்தார். இன்னும் சிறியவனாகிவிட்டான் அரக்கன். இதைப் பார்த்த பலராமனுக்கோ ஆச்சரியம். தம்பி எனக்கு இந்த விஷயம் புரியவேயில்லை. அவனை எப்படி இத்தனை சிறியனவனாக்கினாய்? என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர் இந்த அரக்கனின் பெயர் குரோதம். நீ கோபமாகும் போது அவனுக்கு அது உணவாகும். மற்றவனின் கோபத்தில் தன்னை வளர்த்துக் கொள்பவன் இவன். நீ உன்னுடைய கோபத்தைத் துறந்து விட்டு அன்பை அவனுக்கு ஊட்டினால் அவன் மிகவும் சிறியவனாகி விடுவான் என்று சொல்லி முடித்தார்.

வெறுப்பால் வெறுப்பை யாராலும் சமாதானப்படுத்தவே இயலாது. அன்பின் மூலமாக எல்லாவற்றையும் வெல்லமுடியும்.

OLYMPUS DIGITAL CAMERA

பாஞ்சஜன்யம்

பாஞ்சசன்யம் அல்லது பாஞ்சன்னிபம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்த ஒரு சங்கில் 4 சங்கங்கள் இருக்கும். மொத்தத்தில் ஐந்து சங்குகள் இருக்கும். இந்த சங்கு வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தது. சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்கை வாத்தியம். அதிலும் சுத்தமாக அட்சரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சஜன்யம் சங்கு மட்டும் தான். இந்த பாஞ்சஜன்யம் என்ற சங்கில் இருந்து எழக்கூடிய ஓம்கார நாதமானது அட்சரம் ஒரு துளியும் பிசகாத நாத பிரம்மமானது அதன் ஒலியைக் கேட்கும் அனைவரையும் தமது மூல இயல்பான ஆத்ம நிலையுடன் ஒரு கனம் ஒன்ற வைக்கும் விதமாக அவ்வொலி இருந்தது என்பதை மகான்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள். ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்கும். ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்கும். சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.

தலைச்சங்காடு சிவத் தலத்தில் கடுந்தவம் புரிந்து திருமால் பாஞ்சசன்ய சங்கினை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இந்த சங்கானது உலக உயிர்களை காப்பதற்காக திருமாலுக்கு சிவபெருமான் சங்கினை வழங்கிய காரணத்தினால் இத்தல இறைவன் சங்காரண்யேஸ்வரர் சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். கிருஷ்ணன் தன் கையில் பாஞ்சஜன்யம் சங்கை வைத்திருக்கிறார். சங்கு மகாலக்ஷ்மியின் அம்சமாக உள்ளது. கிருஷ்ணர் பயன்படுத்தியது பாஞ்சஜன்யம் சங்கு அது போல் அர்ஜுனன் தேவதத்தம் சங்கையும் பீமன் மகாசங்கம் சங்கையும் தர்மர் அனந்த விஜயம் சங்கையும் நகுலன் சுகோஷம் சங்கையும் சகாதேவன் மணிபுஷ்பகம் சங்கையும் பயன்படுத்தினர்.

படத்தில் உள்ள இந்த சங்கின் நுனியிலும் அடியிலும் விளிம்பிலும் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. சங்கின் நுனியில் ரத்தினங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளது. இந்த அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கு மைசூர் சமஸ்தான மன்னர்களால் மைசூர் சாமுண்டீஸ்வரி அன்னைக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.

புராண கதைகள்

நம்முடைய பெரியவர்கள் நமக்குப் புரியாத சில விஷயங்களைப் புரிய வைப்பதற்காக கதைகள் புராணங்கள் வாயிலாக பல உண்மைகளையும் கருத்துக்களைச் சொன்னார்கள். கதைகளைக் கேட்டு அதற்குள் இருக்கும் உண்மைகளையும் கருத்துக்களையும் புரிந்து கொள்ள வேண்டும். கதையில் இது சரி இது தவறு என்று விவாதித்துக் கொண்டு இருக்கக்கூடாது

மகாபாரத கதையில் சூதாடக் கூடாது. சூதாடுகிற புத்தி வந்தால் மனைவியை கூட அடகு வைக்கும் நிலை வரும் எனவே சூதாடக்கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ராமாயண கதையில் சாமவேதம் தெரிந்து பல கலைகளில் வல்லவனாக விளங்கி சிவனை கைலாயத்திலேயே போய் தரிசனம் செய்தாலும் ராவணன் பெண்ணாசையால் அழிந்து போனான். எனவே பெண்ணாசை கூடாது என்ற கருத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

அசுரர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்திருந்தும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் இவற்றினால் அழிந்தார்கள். அவர்கள் கடவுளிடம் வாங்கிய வரமும் பயனில்லாமல் போனது. எனவே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் எனவே இந்த குணங்களை அருகில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

புராணங்களில் ஒரு கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை உயர்த்திக் கொண்டு போய் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு போனவன் ஒரு சிறிய தவறு செய்து அதலபாதாளத்தில் விழுகிறான் என்று புரியாதவர்களுக்கும் புரிகிற வகையில் கதைகளாக சொல்லி சிறு தவறு கூட செய்ய எண்ணக்கூடாது என்று நம் பெரியவர்கள் சொன்னார்கள்.

அரிச்சந்திரன் கதையில் எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் உண்மையை பேச வேண்டும் என்று நமக்கு கதை வடிவில் சொன்னார்கள். ஆனால் இப்போது உண்மை பேசினால் அரிச்சந்திரன் மாதிரி வாழ்க்கையில் எப்போதும் சோகத்தை அனுபவிக்க வேண்டும் போலிருக்கிறது என்று எதிர்மறையாக நினைக்கிறார்கள். தங்களுக்கு எண்ணங்களுக்கு ஏற்றார் போல் கதையின் கருத்துக்களை மாற்றி தத்துவங்களை கருத்துக்களை விட்டுவிட்டு கதைகளை மாத்திரம் பிடித்துக் கொள்கிறார்கள்.