மன்னரும் அவரது மந்திரியும் ஒரு நாள் மாறுவேடம் அணிந்து நகர் சோதனை செய்து வந்தனர். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த மன்னர் இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலேதும் செய்யத் தெரியாதா என்று கேட்டார். மந்திரியின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு மந்திரி அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும் இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் கேட்ட மந்திரி அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு மந்திரி சொன்னபடி ஜபம் செய்து வந்தான்.
அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான சக்தி ஏற்பட்டது. இதை அறிந்த மந்திரி அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவிரமாக ஜபம் செய்தார். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்பட்டு தினந்தோறும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் மந்திரியே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவுடன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக மந்திரிக்கு நன்றி தெரிவித்தான்.
மறுநாள் மந்திரி மன்னரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து மன்னர் மிக ஆச்சரியப்பட்டார். அரசரும் அவர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்கள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவர் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் மந்திரி. சக்கரவர்த்தி நம்பாமல் அந்த ஏழையின் இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவனும் நடந்ததைச் சொல்லி காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று மந்திரி விளக்கினார். காயத்திரி ஜபத்தினால் பட்ட மரம் தழைக்கும் வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் நிம்மதியும் மனச் சாந்தியும் பெறுவார்கள். சத்ருக்கள் (எதிரிகள்) நாசமடைவார்கள் பாபங்கள் நீங்கிப் பிறவித்துயர் நீங்கும். வேதசாரமான இந்த மஹா மந்திரம் நம் ரிஷிகளின் அருளினால் நமக்குக் கிடைத்தது
ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்
பொருள்: மூவுலகத்திலும் மிகப்பெரிய சக்தியாய் விளங்கும் அந்த பரம ஜோதியை நாம் தியானிக்கின்றோம். அந்த பரம சக்தி நமது இருளை நீக்கி புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பதே இந்த மந்திரத்தின் பொதுப்பொருள்.
அமெரிக்காவின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் ஒன்றிணைந்து உலக நாடுகள் பலவற்றில் உள்ள பல்வேறு மந்திரங்களை ஆய்விற்கு உட்படுத்தினர். அப்போது காயத்திரி மந்திரம் ஒலிக்கும்போது மட்டும் நொடிக்கு சுமார் 1,10,000 ஒலி அலைகளை எழுப்புவதை கண்டு அவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். தங்கள் ஆய்வின் முடிவில் காயத்திரி மந்திரமே அதிக ஓலி அலைகளை எழுப்பும் உலகின் தலை சிறந்த மந்திரம் என்பதை தெரிவித்தனர். இந்த ஆய்விற்கு பின்பு அமெரிக்காவின் பிரபல ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் தினமும் இரவு 7 மணிக்கு தொடர்ந்து 15 நிமிடங்கள் காயத்திரி மந்திரம் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.