சூர்தாசர் பக்தி

சூர்தாசர் பிறவியிலே கண்பார்வையை இழந்தவர். கண்பார்வை தெரியாததால் குடும்பம் இவரை ஒதுக்கி வைத்தது. ஒரு நாள் அவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தபோது தெரு வீதியில் கிருஷ்ண பஜனை பாடிக்கொண்டு சென்றனர் சிலர். அவர்கள் பாடிய பாடல்களை கேட்டு பரவசமடைந்த சூர்தாசர் அதில் ஒருவரை அழைத்து அய்யா நீங்கள் இப்பொழுது பாடிய பாடல்கள் யாரை பற்றியது மிகவும் நன்றாக இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு அவர் அய்யா இந்த பாடல்கள் கண்ணனை போற்றி பாடும் பாடல்கள் அவனது திருநாமம் சொல்லும் பாடல்கள் என்றார். உடனே சூர்தாசர் நீங்கள் போற்றி பாடிய கண்ணன் எப்படி இருப்பார் என்று கேட்டார். அதற்கு அவர் கண்ணன் சிறு குழந்தை கருநீல நிறம் உடையவன் அவன் புன்னகை முகத்தை பார்த்தால் பரவசம் அடையும் நம் மனது அவன் வசம் போய்விடும் கையில் புல்லாங்குழல் வைத்து இசையால் இந்த உலகத்தை இயங்க செய்பவன் என்று கண்ணனை வர்ணித்து விட்டு அவர் கிளம்பி விட்டார்.

இதை கேட்ட சூர்தாசர் கண்ணனை தன மனக்கண்ணில் பார்க்கலானார் அப்படியே கண்ணனை தன மனதில் நினைத்து பாடினார். பின் தன் வீட்டை விட்டு சென்று ஒரு ஆற்றங்கரையில் மரத்தின் அடியில் அமர்ந்து தினமும் கண்ணனின் வடிவத்தை எண்ணி பல பாடல்கள் பாடலானார். இவரது பாடல்களை கேட்க கூட்டம் கூடியது தினம் அவர் பாடல்களை கேட்கும் மக்கள் கூட்டம் அவர் பசியாற ஏதாவது உணவு பொருள் கொண்டு வந்து கொடுப்பர்கள். அதை அன்போடு ஏற்று கொண்டு சூர்தாசர் கண்ணனின் கீர்த்தனைகளை பாடி வந்தார். ஒரு நாள் துளசி தாசர் என்னும் ராம பக்தர் அங்கே விஜயம் செய்தார். இவர் கம்பரை போல் ராமாயணம் எழுதியவர். அதுவே துளசி ராமாயணம் என்று போற்றபட்டது. சூர்தாசர் இருக்கும் இடத்திற்கு வந்த துளசிதாசர் அவரது கீர்த்தனைகளை கேட்டு தன்னையே மறந்தார். பின் சூர்தாசர் பாடி முடிக்கும் வரை அமைதி காத்த துளசிதாசர் பின் சூர்தாசரை அழைத்து ஆற தழுவி இனி நாம் நண்பர்களா இருந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து கண்ணனின் கீர்த்தனைகளை பாடுவோம் என்றார். இதை சூர்தாசரும் ஏற்று கொண்டு துளசிதாசருடன் அவரது இல்லம் சென்றார்.

தினமும் கண்ணன் கோயிலுக்கு சென்று அவனது கீர்த்தனைகளை பாடி வந்தனர் இருவரும். ஒருநாள் இருவரும் கண்ணன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் எதிரில் ஊர் மக்கள் சில பேர் தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவரை தடுத்து நிறுத்திய துளசிதாசர் அய்யா ஏன் இந்த பதட்ட ஓட்டம் ஏதும் ஆபத்தா என்று கேட்டார். ஓடி வந்தவர் ஆம் அய்யா எதிரே ஒரு மதம் பிடித்த யானை ஒன்று எல்லோரையும் துரத்தி வருகிறது அதன் பிடியில் அகப்பட்டால் மிதித்தே கொன்று விடும் அதான் எல்லோரும் ஓடுகிறோம் நீங்களும் தகுந்த பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார். அப்போது சூர்தாசர் துளசிதாசரை பார்த்து அன்பரே யானை எப்படி இருக்கும் அதற்கு மதம் என்கிறாரே இவர் அப்படி என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு துளசிதாசர் யானை என்பது மிக பெரிய மிருகம் அதற்கு கோபம் என்கிற மதம் பிடித்துவிட்டால் பார்க்கும் யாவையும் மிதித்து அழித்தே விடும் அதான் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள். நம்முள் கண்ணன் இருக்கும்போது நமக்கு என்ன கவலை என்று கூறி கண்ணனை நினைத்து தியானித்து நின்றார் துளசிதாசர்.

மதம் கொண்ட யானை அவர் அருகே வந்து நின்றது. தியானத்தில் இருந்த துளசி தாசரை பார்த்தது பின் அப்படியே பணிந்து வணங்கி அவரை ஆசிர்வதித்து விட்டு வந்த வழியே சாந்தமாக சென்றது. இதை வியப்புடன் பார்த்த மக்கள் துளசிதாசரை வணங்கி நின்றனர். துளசிதாசர் தியானம் கலைந்து கண் திறந்து பார்த்தார். மக்கள் எல்லோரும் அவரை வணங்கி நடந்ததை கூறினார். அதை கேட்ட துளசிதாசர் எல்லாம் கண்ணன் செயல் அவனை வணங்குங்கள் என்று கூறிவிட்டு சூர்தாசரை தேடினார். சூர்தாசர் ஒரு கடையின் மறைவில் இரண்டு கைகளையும் தன் நெஞ்சில் வைத்து நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தார் துளசிதாசர். இப்பொழுது துளசி தாசருக்கு ஒரு சந்தேகம் வந்தது நம்மை போலவே சூர்தாசரும் ஒரு கிருஷ்ண பக்தர் தானே பின் ஏன் யானையை நினைத்து அவர் பயப்படவேண்டும் என்று நினைத்து சூர்தாசரை அழைத்து வந்து தன் சந்தேகத்தை கேட்டார். அதற்கு சூர்தாசர் துளசிதாசரே நீங்கள் மிக பெரிய கிருஷ்ண பக்தர் உங்கள் மனதில் இருக்கும் கண்ணனோ இளமை தேகம் பொருந்தியவன். அதனால் நீங்கள் தியானத்தில் இருந்த போது வந்த யானையை கண்ணன் விரட்டி விடுவான். ஆனால் கண்ணில்லாத குருடனான எனக்கு என் மனக்கண்ணில் உள்ள கண்ணனோ சிறு குழந்தை வடிவானவன் இதுவரை அவனது சிரித்த முகத்தை வைத்தே பல பாடல்கள் பாடியுள்ளேன். யானை மிக பெரிய மிருகம் என்று நீங்கள் சொன்னதால் என் மனதில் உள்ள கண்ணன் சிறு குழந்தையானவன் யானையை பார்த்து பயந்து அழுதுவிட்டால் நான் எப்படி கண்ணனை சமாதானம் செய்வது இதுவரை அவன் சிரித்த முகத்தை நினைத்தே பல பாடல்கள் பாடிய எனக்கு அவன் அழுத முகத்தை கண்டால் என்னால் தாள முடியாது அதனால்தான் என் இரு கைகளையும் என் நெஞ்சில் வைத்து யானையை அவன் பார்ப்பதை மறைத்து கொண்டேன். ஏதும் தவறு இருந்தால் மன்னியுங்கள் என்று பணிந்து நின்றார். இதை கேட்டதும் துளசிதாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. சூர்தாசரே உமது நட்பு கிடைத்தது நான் எத்தனையோ பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனால் கிடைத்திருக்க வேண்டும் மறுபிறப்பு என்று ஒன்று இருந்தாலும் நீங்களே எமது நண்பராக வரவேண்டும் என்று அவரை ஆற தழுவி கோயிலுக்கு அழைத்து சென்றார்.

Image result for சூர்தாசர்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.