திருமூலர் காட்டும் லிங்கங்கள்

லிங்கம் என்பதற்கு மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.

  1. லிம் என்பது லயத்தையும் (ஒடுங்குதல்) கம் என்பது வெளிவருதலையும் குறிக்கும். பிரளய காலத்தில் பிரபஞ்சங்கள் அனைத்தும் எந்த இடத்தில் ஒடுங்கி பின்னர்ப் படைப்புக் காலத்தில் மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படுகிறது.
  2. லிங்கம் என்பது சித்தரித்தல் எனப் பொருள்படும். சிவபெருமான் படைப்பு முதலான ஐந்தொழில்களால் பிரபஞ்சத்தைச் சித்தரிப்பதால் சிவலிங்கம் எனப் பெயர் ஏற்பட்டது என்று வருணபத்தி எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.
  3. லிங்கம் ஒரு பொருளின் சிறப்பியல்பின் அடையாளத்தை உணர்த்தும். சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம் எனலாம்.

திரூமூலர் கூறும் லிங்க வகைகள்

  1. அண்ட லிங்கம்
  2. பிண்ட லிங்கம்
  3. சதாசிவ லிங்கம்
  4. ஆத்ம லிங்கம்
  5. ஞான லிங்கம்
  6. சிவ லிங்கம்

1.அண்ட லிங்கம்

அண்டம் என்றால் உலகம். லிங்கம் என்பது அடையாளம். அண்டலிங்கம் என்பது உலகமே சிவனது அடையாளம் என்பதே. உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் உற்பத்தி செய்தான். குண்டலினி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது. சிவசக்தியினாலேயே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப் பெறுகின்றன. (திருமந்திரம் 1713) இறைவனது திருவடிகள் கீழுலகமாகும். திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும். திருமேனி ஆகாயமாகும். இதுதான் சிவபெருமான் உலகமே உருவமாகக் கொண்ட திருக்கோலமாகும். (திருமந்திரம் 1724) நிலம் – ஆவுடையார், ஆகாயம் – இலிங்கம், கடல் – திருமஞ்சனமாலை, மேகம் – கங்கை நீர், நட்சத்திரங்கள் – ஆகாயலிங்கத்தின் மேலுள்ள மாலை, ஆடை – எட்டு திசைகள் என்று லிங்கத்தின் அடையாளமாகக் குறிப்பிடலாம். (திருமந்திரம் 1725)

2.பிண்ட இலிங்கம்

மனித உடலையே சிவலிங்க வடிவமாகக் காண்பது பிண்ட இலிங்கம். மக்களின் உடலமைப்பே சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், அருட்பெருங்கூத்து ஆகியவைகளாக அமைந்திருக்கின்றன.

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்து. (திருமந்திரம் 1726)

என்று திருமூலர் கூறுகின்றார். மக்கள் தலை – பாணம், இடைப்பட்ட உடல் – சக்தி பீடம், கால் முதல் அரை வரை – பிரமபீடம் எனக் கொண்டால் மானுட ராக்கை வடிவு சிவலிங்கமாகத் தோன்றும். பிண்டத்தைச் சிவலிங்கமாகக் காண்பது இவ்வுடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

3.சதாசிவ லிங்கம்

லிங்கத்தைச் சக்தியும் சிவமும் இணைந்த உருவமாகக் காண்பது. சிவனுக்கு இருதயம் – ஞானசக்தி, தலை – பராசக்தி, தலைமுடி – ஆதிசக்தி, கவசம் – இச்சா சக்தி, நேத்திரம் – கிரியா சக்தி, சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும். (திருமந்திரம் 1744) சதாசிவம் உருவமும் அருவமுமாக இருந்து உயிருக்கு உதவி செய்யும். (திருமந்திரம் 1734) சதாசிவ லிங்கம் சிவமும் சக்தியும் பிரிப்பற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது.

4.ஆத்ம லிங்கம்

அனைத்து உயிர்களையும் இறைவனாகக் காண்பது ஆத்ம லிங்கம் எனப்படுகிறது. இறைவன் உயிருக்குள் உயிராக இருக்கிறார். ஒளியும் ஒலியும் கலத்தலே ஆன்மலிங்கம் (திருமந்திரம் 1954) என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

5.ஞான லிங்கம்

உள்ளம், உரை, செயலைக் கடந்து நிற்கும் இறைவனின் நிலை உணர்தல். இது இறைவனின் சொரூப நிலையை உணர்த்தும். இதற்கு எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்தவுரைத்து முறைசொல்லின் ஞானமாம் (திருமந்திரம் 1770) என்று திருமூலர் ஞானத்திற்கு விளக்கம் தருகிறார்.

6.சிவலிங்கம்

அனைத்துமாக விளங்கும் சிவனை ஒரு அடையாளத்தின் இடமாக எழுந்தருளச் செய்து வணங்கும் முறையை உணர்த்துகிறது. உருவம் இல்லாத ஒன்றை உயிர்கள் மனத்தால் நினைத்து வழிபடுவது கடினம். பக்குவத்தை தேடும் உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து இறைவனை உணர ஓர் உருவம் தேவைப்படுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் சிவலிங்க உருவமாக எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மையை உணர்ந்து வழிபடாத மக்களின் இயல்பைத் திருமூலர்

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே. (திருமந்திரம் 1773)

என்று கூறுவதை நினைவில் கொண்டு இறைவனை லிங்க வடிவில் வழிபட்டு நற்பேறுகளைப் பெருவோம்.

No photo description available.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.