குரு அமர்ந்திருக்க அவர் முன் அமர்ந்திருந்தான் சீடன் விஸ்வநாத பிரம்மச்சாரி. சீடனது கண்கள் கலங்கி இருந்தன அவன் தன் கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேசினான். குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களுக்கு பணிவிடை செய்வதிலும் உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்கள் என்றான்.
அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கிய குரு அவனை தீர்க்கமாக பார்த்தார். விஸ்வநாதா சாஸ்திர ஞானத்தை மட்டும் தான் என்னால் உனக்கு வழங்க முடிந்தது. பிரம்ம ஞானத்தை வழங்க உனக்கு வேறு குரு ஒருவர் காத்திருக்கிர்றார். அந்த குரு காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக செல் சீடனே என்றார் குரு. பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி. காசியை அடைந்தான். அவன் அங்கு வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்தான். நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான். வழியில் தென்பட்ட தடாகம் ஒன்று கண்களுக்குத் தெரிய அதில் நீர் அருந்த குனிந்தான். அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அமைந்திருந்த கோயில் கோபுரம் நிழலாக நீரில் பிரதியாகத் தெரிந்தது. நிமிர்ந்து மேல் நோக்கி பார்த்தான். ஆலய கோபுரம் ஒன்று தெரிந்தது. நடு வனத்துக்குள் கோயிலா கோபுரத்தை வணங்கிவிட்டு ஆச்சரியத்துடன் அந்தக் கோயிலுக்குள் நுழைய அடியெடுத்து வைத்தான்.
கோயில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் வந்தது. வா விஸ்வநாதா உனக்காகத்தான் காத்திருக்கிறேன். உனது குரு என்னை பார்க்கத்தான் அனுப்பினார் என்று. தனது ஞான குருவை காணும் ஆவலில் கோயிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன். அங்கே அவன் கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது. பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார். இதைக் கண்ணுற்ற விசுவநாதனால் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. எனது குரு உங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். என கூறியவன் ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வையுங்கள என்றான். அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக் கொள்ளாமல் அவனை பார்த்து மேலும் கூறினார். நீ வேண்டுமானால் எனது கால்களை எடுத்து வேறு இடத்துப் பக்கம் திருப்பி வை. என்னால் கால்களை எடுக்க முடியாது என்றார். கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் அவரை நோக்கி வேகமாக வந்து அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்றி திருப்பி வைத்தான். காலை தூக்கி வைத்த இடத்தில் சிவ லிங்கம் தெரிய வெடுக்கென்று காலை மீண்டும் தூக்கி வேறொரு திசைக்கு மாற்றினான். அங்கும் அங்கும் சிவலிங்கம் காட்சி தெரிய காலை கீழே வைக்காது தூக்கிய வண்ணம் நின்றிருந்தான். கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தெழுகிறதே என செய்வதறியாது விழித்தான். பல இடங்களில் காலை மாற்றி மாற்றி தூக்கி வைத்தாலும் அனைத்து இடத்திலும் சிவலிங்கம் தோன்றுகிறதே என யோசித்தவன் தனது தலையில் அவரின் கால்களை வைத்து அழுத்தினான்.
அவனே சிவமானான்
அவனே சிவமானான்
அவனே சிவமானான்
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம்.