ஸ்ரீ அனுமன் சாலிஸா.

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர் நீர் பெரிய ராமபக்தர். பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்கள் ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டுங்கள் என்றார். நான் மாயாஜாலக்காரன் அல்ல ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே என்று துளசிதாசர் சொல்ல கோபப்பட்ட அக்பர் அவரைச் சிறையில் அடைத்தார். எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம் என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர் தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார். இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும் திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.

படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை. அக்பரிடம் சென்ற சிலர் ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும் என்று ஆலோசனை அளித்தனர். அதையடுத்து துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே வானரப் படைகள் மாயமாய் மறைந்தன. துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ஸ்ரீ அனுமன் சாலிஸா.

ஹனுமான் சாலிஸா தமிழில்

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய்
ஸ்ரீ ஹனுமானே

ஜயஹனுமானே ஞானகடலே
உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
ராமதூதனே ஆற்றலின் வடிவமே
அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
மஹா வீரனே மாருதி தீரனே
ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
தங்க மேனியில் குண்டலம் மின்ன
பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
இடியும் கொடியும் கரங்களில் தவழ
சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
ராம சேவையே சுவாசமானவா
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
ராமனின் புகழை கேட்பது பரவசம்

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
ராமனின் பணியை முடித்த மாருதியே
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
நாரதர் சாரதை ஆதிசேஷனும்
எம குபேர திக்பாலரும் புலவரும்
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே உன் அருளாலே
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
கண் இமை போல காத்தே அருள்வாய்
உனது வல்லமை சொல்லத் தகுமோ
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும்

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
ராமனின் பாதமே உந்தன் இடமே
அடியவர் நிறைவே கற்பகத் தருவே
இறையனுபூதியை தந்திடும் திருவே
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் சேவையே

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே.

Image result for துளசிதாசர்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.