இறைதூதர்

ஜென் குரு ஒருவர் இமயமலையில் இருந்தார். ஒருநாள் அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் ஒருவர் வந்திருந்தார். ஐயா நான் பிரசித்தி பெற்ற மடாலயம் ஒன்றின் தலைவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் வந்தவர்.

குரு மௌனம் கலைக்காமல் தலையசைத்தார்

தற்பொழுது என் மனம் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. தெளிவு பெறவே தங்களை நாடி வந்தேன் என்றார் வந்தவர்.

நான் என்ன செய்யவேண்டும்? என்று பணிவுடன் கேட்டார் குரு.

குருவே எங்கள் மடம் மிகவும் புராதனமானது. பழைமையும் கீர்த்தியும் பெற்றது. உலகெங்கிலும் பல நாடுகளிலுமிருந்து ஆர்வமுள்ள பல இளைஞர்கள் வருவார்கள். ஆலயம் முழுவதும் இறைவழிபாட்டு ஒலியால் நிறைந்திருக்கும். ஆனால் சில காலமாக நிலைமை மோசமாக உள்ளது. எங்கள் மடத்தை நாடி யாரும் வருவதில்லை. அங்கு இருப்பதோ சில பிட்ச்சுக்கள் தான். அவர்களும் ஏனோதானோவென்று தங்கள் கடமையைச் செய்கிறார்கள். இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்க்கு என்ன பரிகாரம் காண்பதென்று விளங்கவில்லை. நீங்கள் தான் ஒரு உபாயம் சொல்ல வேண்டும் என்று வேண்டினார் அந்த மடத்தலைவர்.

அவரது குரலில் தென்பட்ட ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் கண்ட குரு மெல்லக் கூறினார். அறியாமை என்ற வினைதான் காரணம்

அறியாமையா? என்று வியந்தார் வந்தவர்.

ஆம் உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் இருக்கிறார். நீங்கள் அவரை உணரவில்லை. அவரை அறிந்துகொண்டால் போதும் இந்தக் குறைகள் நீங்கிவிடும் என்று அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார் குரு.

குரு சொன்னதை சிந்தித்தபடியே புறப்பட்ட மடத்தலைவர் மடத்திற்கு வந்து அங்குள்ளவர்கள் அனைவரையும் அழைத்து குரு சொன்ன செய்தியை விளக்கிக் கூறினார். இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவநம்பிக்கையுடனும் அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். இவராயிருக்குமோ? இல்லை அவரையிருக்குமோ? என்று சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். யார் தேவதூதர் என்று கண்டுபிடிக்க தங்களால் முடியாது. அது இங்குள்ள யாராகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த அங்கிருந்த ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தனர். ஒருவேளை இவர் தேவதூதராக இருந்தால்? என்ற கேள்வியோடு.மற்றவர்களை பரிவோடு நடத்தினர். இதனால் சில நாட்களிலேயே அந்த மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று. அங்கு வந்தவர்கள் பலரும் அங்குள்ள நிலையைப் பற்றி மற்றவர்களிடம் கூறத்தொடங்கினர். மீண்டும் பல இடங்களில் இருந்து இறைப்பணிபுரிய அங்கு வர ஆரம்பித்தனர்.
இதனைக் கண்ட பிறகு தான் மடாலத்தின் தலைவருக்கு குரு சொன்னதன் பொருள் புரிந்தது. இறைத்தூதர் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் மற்றவருடன் பணிவுடனும் பரிவுடனும் பழகும்போது நாம் இறைத்தூதராகிவிடுகிறோம்.

கடவுள் என்பவர் எங்கும் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம்மைப் போல பிறரையும் நேசித்தால் இறைவனை உணர முடியும்.

Image result for ஜென் குரு"

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.