செல்வந்தன் ஒருவன் தன் மாளிகையில் உறவுகளை எல்லாம் உதறிவிட்டு தாசிப் பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். அவ்வழியே வந்த ஞானி அவனை எதிரில் சந்தித்தார். ஞானி செல்வந்தரிடம் உனது மனைவி மக்கள் உறவுகள் அனைவரையும் விட்டு இங்கு ஏன் இருக்கிறாய் என கேட்டார் சுவாமி என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளமாக உள்ளது. உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை எனப் பெருமையடித்துக் கொண்டான்.
புன்சிரிப்போடு அதைக் கேட்ட ஞானி வா சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம் என்றார். கடுமையான வெயிலில் போக வேண்டுமா என தயங்கினாலும் ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான். சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன் ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்படவில்லை. ஞானி கேட்டார் என்ன தேடுகிறாய்? நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா எனப் பார்த்தேன். ஏன் உன் நிழல் உள்ளதே அதில் நீ ஒதுங்கிக்கலாமே? சுவாமி என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்? என்னப்பா இது நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை உன் செல்வங்களே உன்னைக் காப்பாற்றும் என்று சற்று முன்புதானே கூறினாய்? இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே? என்றார். ஏராளமான செல்வம் இருக்குன்னு கர்வத்தில் யாரையும் உதாசினபடுத்தாதே. இருக்கும் பொழதும் இறக்கும் பொழுதும் நம் நலம் விரும்பிகள் நாலு பேர் நிச்சயம் நமக்கு தேவை. வெறும் செல்வத்தால் மட்டும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. உறவுகளையும் நல்ல நட்புகளையும் மதித்து இணைத்து வாழ கற்றுக்கொள் என்றார். செல்வந்தன் உண்மையை உணர்ந்தான். மனைவி மக்களுடன் இணைந்தான்.