குரு பக்தி

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றை தேடி நீராட சென்றனர். ஆற்றை கண்டுபிடித்து நீராடினர் இருவரும் பின் குரு சூரியனை வணங்கினார். அப்பொழுது சூரிய பகவான் அசிரிரியாக தோன்றி வேத குருவே வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்று கொண்டேன். ஆனால் இன்று சூரியன் ஆகிய நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் என்று கூறி அசரீரி மறைந்தது. குருவும் சூரியனை வணங்கி விட்டு சீடனை கவலையோடு பார்த்தார். பின் இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே இருக்கும் சிவன் கோயிலை நோக்கி நடக்க துவங்கினர். கோயில் வந்ததும் இறைவனை இருவரும் வணங்கினர். பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர். சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர்ந்தனர்.

சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை. சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார். அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்த படி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது. இதை பார்த்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது. குரு ராஜநாகத்தைப் பார்த்து நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன் என்று தடுத்தார். இப்பொழுது ராஜநாகம் பேசியது. வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் உள்ள ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா என்று முறை இட்டது. உடனே குரு அப்படி என்றால் என் சீடனின் கழுத்தில் உள்ள ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை. சரி சற்று பொறு நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய். என்று கூறி ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர். தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி படுத்தபடியே சிறிதும் அசையாமல் இருந்தான்.

சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார் ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது. குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார். சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர். அப்பொழுது சீடன் தன் கழுத்தில் மருந்து பற்று போட்டு இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல் குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா என்று கேட்டான். குரு புன்னகையுடன் சீடனே நீ சற்று முன் உறங்கும்போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய் உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா என்று புன்னகையுடன் கேட்டார். சீடன் குருவே என் கழுத்தில் எதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன். பின் இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால் எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை என்று கூறி பணிந்து நின்றான். குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார். ஞானகுருவை முழு நம்பிக்கையுடன் ஏற்று கொண்டால் வாழ்வில் எப்போதும் நல்லதே நடக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.