ஆதிசங்கரர் பல ஊர்களுக்கு சென்று ஆங்காங்கே இருந்த கோவில்களில் இறைவனை தரிசித்து போற்றியவாறு கைலாயத்தை அடைகிறார். அங்கு ஈசன் உமையவள் தரிசனமும் கிடைக்கிறது. அப்போது ஈசன் 5 ஸ்படிக லிங்கங்களை ஆதிசங்கரருக்கு வழங்குகிறார். பஞ்சலிங்கங்கள் அனைத்துக்கும் சந்திரமெளலி என்று பெயர். அப்போது அன்னையவள் ஒரு சுவடுக் கட்டினைத் தன் சார்பாகத் தருகிறார். சுவடியில் இருந்தது தேவி குறித்த மந்திர சாஸ்திரங்கள். இவற்றைப் பெற்றுக் கொண்ட சங்கரர் கைலாயத்தை விட்டு வெளிவருகிறார். வெளியில் இருந்த அதிகார நந்தி ஆதிசங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டைப் பார்த்த உடன் கையிலையின் மிகப்பெரிய புதையலான மந்திர சாஸ்திரம் கையிலையை விட்டுப் போகிறதே என்று எண்ணி ஆதிசங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டை பிடித்து இழுக்கிறார். ஆனால் ஆதிசங்கரர் இதனை கவனிக்காமல் நகர்ந்து விடுகிறார். நந்திகேஸ்வரன் இழுத்ததால் சில சுவடிகள் மட்டுமே ஆதிசங்கரர் கையில் மீந்துவிட மற்றதெல்லாம் கைலாய வாயிலில் விழுந்து விடுகிறது. இந்த நிகழ்ச்சி மார்க்கண்டேய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஆதிசங்கரரிடம் கிடைத்த சுவடிகளில் உள்ள ஸ்லோகங்கள் எண்ணிக்கை முதல் 41. இதனை உணர்ந்த தேவி ஆதிசங்கரர் முன் பிரத்யஷமாகி மீதமுள்ள 59 ஸ்லோகங்களையும் புதிதாக இயற்ற ஆதிசங்கரரைப் பணிக்கிறார். உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல அவர் 59 ஸ்லோகங்களில் அன்னையின் ரூப லாவண்யத்தைப் பாடுகிறார். இவ்வாறாக பாடப்பட்ட 59 ஸ்லோகங்கள் சௌந்தர்ய லஹரி என்றும் கையிலையில் அன்னை தந்த சுவடியில் மிஞ்சிய 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும் பெயர் பெற்றது. ஆனாலும் மொத்தமாக செளந்தர்யலஹரி என்பது 41+59 சேர்ந்த 100 ஸ்லோகங்களே. முதல் 41 ஸ்லோகங்களில் மந்திர சாஸ்திரங்களும் குண்டலினி பற்றியும் ஸ்ரீவித்யா வழிபாட்டுத் தத்துவங்களும் விளக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 41 ஸ்துதிகள் யோக முறையில் சாதகம் செய்து அன்னையின் பாதத்தை சரணடைந்தால் மட்டுமே கிடைக்கப் பெறுவது ஆனந்தம் எனவே ஆனந்த பிரவாஹம் என்று பெயர் பெற்றது. இந்த 41 ஸ்லோகங்கள் யோக முறையில் சாதகம் செய்பவர்களுக்காகவும் பின் வந்த 59 ஸ்லோகங்கள் பக்தி மார்கத்தில் உள்ளவர்களுக்கு பயன் தரும் வகையிலும் உள்ளது.
செளந்தர்ய லஹரி என்ற பெயர் ஏன்?.
செளந்தர்யம் என்றால் அழகு. லஹரி என்றால் பிரவாஹம் அல்லது அலை என்றும் பொருள். உலகில் உள்ள அத்தனை அழகுகளும் எங்கிருந்து பிறந்ததோ அந்த பரம சக்தி உமையவள் உருவினை தலையிலிருந்து கால்வரை அங்கம் அங்கமாக வர்ணிக்கும் ஸ்துதி ஆகையால் செளந்தர்யலஹரி என்ற பெயர் பெற்றது.