குழந்தையை அழும் போது தூங்க வைக்க இரண்டு வழிகள் உண்டு. ஒன்று அழு என்று விட்டு விட்டால் குழந்தை அழுது அழுது தானாகவே தூங்கிவிடும். இரண்டாவது தூளியில் போட்டு பாட்டுப் பாடி கொஞ்சி தூங்கவைப்பது.
தியானத்தில் அமரும் போது மனது எங்கெங்கோ எப்படி எப்படியோ அலைந்து அலைந்து எப்போது அடங்குமோ அப்போது தானே அடங்கட்டும் என்று விட்டு விட வேண்டும். அழுது அழுது ஓர் நேரத்தில் குழந்தை தூங்கிவிடும். அது போல் மனதில் அலையும் எண்ணங்கள் தானகவே ஒடுங்கி அடங்கி விடும். தியானம் செய்பவர்களின் வைராக்யத்தை பொறுத்து இதற்கு சில வாரங்களோ சில மாதங்களோ ஆகலாம்.
மந்திரம் ஜபம் தியானத்தில் லயித்து ஆடும் மனதை அடக்கி ஆழ்நிலைக்குக் கொண்டு செல்வது பாட்டுப்பாடி தூங்க வைப்பதற்குச் சமம்.
தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறவர்கள் ஒரு நிலைக்குப் போகிறபோது ஒரு தாமரை மலரில் அவர்களுடைய குருநாதர் உருவம் தெரியும். அதற்குப்பிறகு அவர்கள் தங்களையே பார்த்துக்கொள்ள முடியும். அதற்கு சாயா புருஷ லக்ஷணம் என்று பெயர். அந்த பாவனைகள் பெற்றவர்களுக்கு தியானத்தின் வழியாக ஞானம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம். தாங்களும் தெய்வ வடிவம்தான் என்பதைத் தாங்களாகவே புரிந்து கொள்வார்கள்.