தீட்சை

அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும் என்ற ஆசை உண்டானது. தீட்சை பெற வேண்டுமானால் அதற்கு குரு ஒருவரை அனுகி மந்திரதீட்சை பெறுவது முற்றிலும் அவசியம் என்று சாஸ்திரங்கள் கூறுவதை அவன் அறிந்திருந்தான். தொலைதூத்தில் இருக்கும் அந்த பிரம்மஞானியிடம் சென்று மந்திரதீட்சை பெற முடிவு செய்தான். பிரம்ம ஞானியின் ஆஸ்ரமம் இருந்த மலைச்சாரலுக்கிடையே இருந்த குடிலுக்கு சென்றான். முதலில் அவரைப் பணிந்து வணங்கிக் கொண்டவன் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான். மன்னனை உற்று நோக்கிய பிரம்மஞானி இவன் மந்திரதீட்சை பெறும் போதிய மனப்பக்குவம் இல்லாதவனாத் தெரிகிறான். இவனுக்கு மந்திரதீட்சை கொடுக்கும் தகுதி இப்போது இல்லை என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார். எனவே அரசனிடம் அரசே நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை. அதற்கு சில மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு மந்திரதீட்சை தருவதற்கில்லை என்று கூறினார். அரசன் தனக்கு மந்திரதீட்சை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தனால் ஞானி தீட்சை தராததால் மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனைக்குத் திரும்பினான்.

தன் அமைச்சரிடம், எனக்கு பிரம்மஞானி மந்திர உபதேசம் தர மறுத்துவிட்டார். எப்படியும் நான் மந்திரதீட்சை பெற்றாக வேண்டும். அதற்கு வேறு என்ன வழி? கூறுங்கள் என்று கேட்டான். மன்னர் பெருமானே நமது நாட்டில் சாஸ்திரங்களை மிகவும் நன்கு கற்றறிந்த பெரிய சமஸ்கிருத பண்டிதர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் நீங்கள் தீட்சை பெற்றுக் கொள்ளலாமே என்றார். தாங்கள் விரும்பினால் உடனே அவரிடம் நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு நான் உரிய ஏற்பாடுகள் செய்கிறேன் என்றார் அமைச்சர். மன்னனும் அமைச்சர் சொன்னபடி மந்திர தீட்சை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்தான். அமைச்சர் பண்டிதருடன் தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகள் செய்தார். பண்டிதர் ஒரு நல்ல நாளில் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னனுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார்.
அவருக்கு அரசன் நிறைய வெகுமதிகள் வழங்கி அனுப்பி வைத்தான். அரசன் தந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட பண்டிதர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். இப்போது தனக்கு மந்திர தீட்சை கிடைத்துவிட்டது. தனக்கு தீட்சை தர மறுத்த பிரம்மஞானிக்கு இப்போது நான் பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தான். தன் வீரர்களை அழைத்தான். எனக்கு மந்திரதீட்சை தர மறுத்த பிரம்மஞானியைப் பிடித்து வர கட்டளையிட்டு அனுப்பினான்.

அரசன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள் பிரமஞானியை வீரர்கள். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசன் ஞானியை ஏளனத்துடன் பார்த்து உங்களிடம் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். எனக்கு உபதேசம் செய்ய மறுத்துவிட்டீர்களே இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? நான் என்ன மந்திரத்தை உங்களிடம் உபதேசம் பெற வேண்டும் என்று விரும்பினேனோ அதே மந்திரத்தை நான் இப்போது ஒரு பண்டிதரிடம் பெற்றுக்கொண்டேன் என்றான். பிரம்மஞானி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். மன்னன் தொடர்ந்தான். ஓம் நமச்சிவாய இது தானே மந்திரம் இந்த மந்திரத்தை தருவதற்குத் தானே நீங்கள் மறுத்தீர்கள்? இப்போது நான் விரும்பியபடி எனக்கு மந்திரதீட்சை கிடைத்து விட்டது என்றான் ஆணவமாக. அது கேட்ட பிரம்மஞானி அரசே இப்போது நான் சொல்வதுபோல் நீங்கள் சிறிது நேரம் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார். ஏதும் புரியாத அரசனும் அதையும் பார்க்கலாம் என சம்மதித்தான். பிரம்மஞானி அரசனிடம் அரசே நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தில் நான் சிறிது நேரம் அமர்வதற்கு என்னை அனுமதியுங்கள். அதே சமயம் நீங்கள் நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திற்கு வந்து சிறிது நேரம் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அரசன் பிரம்மஞானி நின்று கொண்டிருந்த இடத்தில் வந்து நின்று கொண்டான். ஞானியோ சென்று சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.

பிரம்மஞானி அரியணையில் அமர்ந்தவுடன் அவர் அரசனைச் சுட்டிக்காட்டி அருகில் இருந்த வீரர்களிடம் இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். இவ்விதம் பிரம்மஞானி கூறியதைக் கேட்டு அரசவையில் இருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டார்கள். வீரர்களுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாது அதிர்ச்சியாக அசையாது நின்றார்கள். இந்த நிலையில் பிரம்மஞானி தன்னைக் கைது செய்யும்படி கூறியதைக் கேட்டு கோபம் கொண்ட அரசன் அரியணையில் உட்கார்ந்திருந்த பிரம்மஞானியை வீரர்களுக்குச் சுட்டிக்காட்டி இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். இவ்விதம் அரசன் சொன்னவுடன் வீரர்கள் உடனே சென்று பிரம்மஞானியைக் கைது செய்தார்கள். அப்போது பிரம்மஞானி அரசனைப் பார்த்து சிரித்தபடியே கூறினார். அரசே இப்போது இங்கு நடந்த சம்பவத்தில் உங்கள் கேள்விக்கு உரிய பதில் இருக்கிறது. இதுதான் மெய்ஞ்ஞானி ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் பண்டிதர் ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் உள்ள வேறுபாடு என்றார்.

நான் உங்களைக் கைது செய்யும்படி இங்கிருந்த வீரர்களுக்குக் கட்டளை இட்டேன். ஆனால் என் கட்டளையை அவர்கள் நிறைவேற்றவில்லை. நான் அரசனுக்குரிய அரியணையிலிருந்துதான் உத்தரவு பிறப்பித்தேன் என்றாலும் என் உத்தரவை இங்கு யாரும் பொருட்படுத்தவில்லை நிறைவேற்றவில்லை. மாறாக நீங்கள் அரியணையில் அமராமல் அங்கு நின்றுகொண்டு என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தீர்கள். உடனே உங்கள் கட்டளையை வீரர்கள் நிறைவேற்றத் துணிந்தார்கள். எனவே நான் கூறிய அதே சொற்களை நீங்கள் சொன்னபோது தான் அதற்கு இங்கு பலன் ஏற்பட்டது. நீங்கள் கூறிய அதே சொற்களை நான் இங்கு சொன்னபோதிலும் அதற்கு மதிப்பில்லாமல் போனது. இது போல்தான் அரசே மந்திரோபதேசம் செய்யும்போது குருமார்கள் சீடர்களுக்கு வழங்கும் மந்திரம் ஒரே மந்திரமாக இருக்கலாம். ஆனால் மெய்ஞ்ஞானி ஒருவர் அந்த மந்திரத்தை மந்திர தீட்சையின்போது உரிய முறையில் வழங்கினால்தான் அந்த மந்திரம் உயிர் பெற்று தனக்கு உரிய உண்மையான உயர்ந்த பலனைத் தரும். இறையனுபூதி பெறாத ஒருவர் சாஸ்திரங்களை ஏராளமாகப் படித்தவராக இருக்கலாம். ஆனால்,அவர் ஞானிகள் சொல்லும் அதே மந்திரத்தை உபதேசம் செய்தாலும் அதற்குரிய உயர்ந்த பலன் இருக்காது. தகுதியானவர்கள் உபதேசம் செய்தால் தான் மந்திரம் பலிக்கும் மல மாசு நீங்கும் என்று கூறி முடித்தார்.

உண்மையையுணர்ந்த அரசன் ஞானியை கைது நிலையைத் தவிர்த்து தன் தவறுக்கு வருந்தி இனி திருத்தமாக இருந்து கொள்வதாக அறிவித்தான். தீ என்றால் மலம். ஷை என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழிப்பதே தீட்சையாகும். தீட்சைகள் பல வகைப்படும்.

பரிச தீட்சை: ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில் புருவ மத்தியிலும் தலை உச்சியிலும் நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும். உதாரணம் ஒரு பறவை முட்டையிட்டு அதன் மேல் உட்கார்ந்து அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது பரிச தீட்சையாகும்.

நயன தீட்சை: ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும். உதாரணம் ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை.

பாவானா தீட்சை: ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை. உதாரணம் ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.