ஒருவன் செல்வத்தின் மீது பற்று கொண்டு ஏராளமான செல்வத்தைச் சம்பாதித்தான். பல சொத்துக்களை வாங்கிக் குவித்தான். அவன் ஆசைப்பட்டதற்கு அதிகமாகவே அவனிடம் செல்வம் சேர்ந்து விட்டது. ஆனால் அவன் மனம் ஏனோ திருப்தியடையவே இல்லை. ஏதோ ஒரு வெறுமையை தனக்குள் அவன் உணர்ந்தான். அந்த வெறுமை உணர்வு அவன் மன அமைதியைக் கெடுப்பதாக உணர்ந்தான். இவ்வளவு செல்வங்கள் குவிந்தாலும் தன்னிடம் எல்லாம் இருந்தாலும் தன் மனதில் ஏதோ ஒன்று இல்லாதது போன்ற ஒரு வெறுமை உணர்வு ஏன் வந்தது? என்று தனக்குள் யோசித்தான். முடிவில் அவன் மனதில் அதற்கான காரணம் என்ன என்பது புலப்பட்டது. தன்னுடைய இந்த அமைதியற்ற வெறுமைக்குக் காரணம் செல்வத்தின் மீது தான் கொண்ட ஆசையினால் தான் என்ற முடிவுக்கு வந்தான். இனி அமைதியடைய என்ன செய்யலாம் என்று பல நாட்களாகச் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான். தான் அடைந்த இந்த செல்வத்தையெல்லாம் ஒரு துறவிடம் கொடுத்து விட்டு மன நிம்மதியை அடைந்திடலாம் என்று தீர்மானித்தான்.
தனது எல்லா ஆஸ்திகளையும் விற்று செல்வமாக்கி ஒரு மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டு பல இடங்களிலும் காடு மேடெல்லாம் அலைந்து ஒரு உண்மையானத் துறவியைக் கண்டு பிடித்தான். தான் கொண்டு வந்த மூட்டையை அவர் காலடியில் போட்டான். குருவே நான் கஷ்டப்பட்டு உண்டாக்கிய செல்வங்கள் அனைத்தும் இந்த மூட்டையில் இருக்கின்றன. இதை எடுத்துக் கொண்டு என்னை சீடனாக ஏற்று மன நிம்மதியை அடையும்படிக்கு அருளுங்கள் என்று பணிந்து நின்றான்.
குனிந்த தலையை நிமிர்த்தி பார்த்த போது துறவியைக் காணவில்லை. அவரோ இவன் கொண்டு வந்த மூட்டைத் தூக்கிக் கொண்டு வெகு தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தார். இவனைப் போய் உண்மையான நல்ல துறவி என்று எண்ணி ஏமாந்து விட்டோமே என்று துறவியைத் துரத்திக் கொண்டு ஓடினான். துறவியோ ஏற்கனவே தொலை தூரத்திற்குச் சென்று விட்டபடியினால் இவனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. முடிவில் கண்களை விட்டே மறைந்து விட்டார். இவனுக்கோ களைப்பு மேலிட்டது. தாகம் வாட்டியெடுத்தது. சரி அந்தத் துறவியின் குடிலுக்குப் போய் தண்ணீர் கிடைக்குமா என்று பார்ப்போம் என்று திரும்பி வந்தவன் திடுக்கிட்டான். அங்கு துறவி குடிலுக்கு முன் உள்ள மரத்தடியில் கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கிடந்தார். மூட்டை கீழே கிடந்தது. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது துறவி மெதுவாகக் கண்களைத் திறந்தார். அவனைப் பார்த்துக் கேட்டார். நீ இந்த செல்வத்தால் நிம்மதியே இல்லை இது வேண்டாம் என்று தானே என்னிடம் கொண்டு வந்துக் கொடுத்தாய். பிறகு ஏன் என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தாய்? அப்படியானால் இந்தச் செல்வத்தின் மீதுள்ள பற்று இன்னும் உனக்கு நீங்கவில்லை என்று தானே பொருள். எனவே உமது செல்வத்தை எண்ணி சரி பார்த்து எடுத்துசெல். உடமைப் பொருள் எதன் மீதும் பற்று கொள்ளாமல் இருப்பதே அமைதியடைவதற்கு ஒரே வழி என்றார். அவன் அவர் காலடியில் விழுந்து பற்று விட்டு பற்றில்லாமல் வாழ வழிகாட்டுங்கள் குருவே என்று அழுதான். அவர் அவனைத் தேற்றி ஞானம் பெற உபதேசித்தருளினார்.