ஒரு நாள் சக்கரவர்த்தி அக்பர் வேட்டைக்காக ஒரு பரந்த வனத்திற்குள் சென்றார். அவருடன் மந்திரி பீர்பாலும் சென்றார். ஆனால் காட்டுக்குள் சென்றவர்களுக்கு வழி தவறிப் போனது. கொடும் வனம் அதைவிட கொடிய பசி இருவரையும் வாட்டி வதைத்தது. ஆனால் பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகில் மனதை பறிகொடுத்து விட்டார். உடனே ஒரு பெரியமரத்தின் கீழ் அமர்ந்து ராம ராம என்று ராம நாம ஜபத்தை ஜபிக்கத் தொடங்கினார். அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டு வாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்று கூற பீர்பாலோ அரசே என் வயிறோ உணவிற்கு ஏங்குகிறது. ஆனால் மனமோ ராம நாமத்திற்கு ஏங்குகிறது. அதனால் மன்னா இப்போது நான் உணவைப் போய் சேகரிக்கும் நிலையில் இல்லை என்று பதிலளித்தார்.
இதைக் கேட்டு சினம் கொண்ட அக்பர் தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட விரைந்து சென்ற சக்கரவர்த்தி அக்பரை அவ்வீட்டினர் மனம் மகிழ்ந்து வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரித்தனர்.
அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று காட்டில் மரத்தடியில் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தவருக்கு உணவு கொடுத்துவிட்டு ஏளனத்தோடு சொன்னார். பீர்பால் இப்போதாவது தெரிந்ததா நான் எடுத்த சரியான முடிவு தான் இன்று உங்களுக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக் கொண்டிருக்கும் ராமஜபம் உங்களுக்கு உணவு கொடுக்கவில்லை தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறினார். உணவைப் புசித்து முடித்து விட்டு அமைதியாக பீர்பால் அரசே உணவிற்காக மகாபெரிய சக்கரவர்த்தியான தாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது. ஆனால் என் பிரபு ராமரோ எனக்கு உணவை மாமன்னரான உங்கள் கையில் கொடுத்தனுப்பியுள்ளார். இது தான் ராம ஜபத்தின் மகிமை என்று கூற அக்பர் வாயடைத்துப் போய் நின்றார்.