ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராவது நாள் என்று பொருள் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் மனம் என்ற ஒன்றும் சேர்ந்து மொத்தம் பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். உபவாசம் என்றால் என்ன என்பது பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் கதை ஒன்று உள்ளது.
பிருந்தாவனத்தில் இருந்த கோபியரில் சிலர் மோரும் தயிரும் வெண்ணையும் விற்க காலையிலேயே அக்கரைக்குச் சென்றனர். மாலை திரும்பியபொழுது யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்பெண்களோ யமுனையைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல வேண்டும்.
இவர்கள் வந்திருந்த பகுதியில் பாலம் ஏதும் இல்லை. பாலத்தை அடைய வேண்டுமென்றால் ஊரைச் சுற்றிக்கொண்டு போக வேண்டும். நேரமோ மாலைப் பொழுது. இருட்டிக்கொண்டு வருகிறது. திகைத்த அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கே வியாசர் தவத்தில் இருந்ததைக் கண்டார்கள். வியாசர் உதவக்கூடும் என்று நினைத்து அவரிடம் அபயம் கேட்டார்கள். அவரும் தவம் கலைந்து ஒரு நிபந்தனையுடன் உதவுவதாக வாக்களித்தார்.
கோபியர்களின் பானைகளில் மீதமுள்ள மோர், தயிர், வெண்ணை ஆகியவற்றைச் சாப்பிடக் கேட்டார். மழை காரணமாக ஒன்றும் விற்காததால் மொத்தத்தையும் அவர்கள் வியாசரிடம் கொடுத்தார்கள். அவர் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டார். உண்ட களைப்பு தீரக் கால் நீட்டிப் படுத்துவிட்டார். கோபியர் அவரை எழுப்பி உதவுகிறேன் என்று சொல்லி அனைத்தையும் சாப்பிட்டீர்களே குழந்தைகள் காத்திருப்பார்கள் தயவுசெய்து உதவுங்கள் என்றனர். வியாசரும் நதியின் அருகே சென்றார்.
யமுனையே நான் நித்திய உபவாசி என்றால் விலகி வழி விடு என்றார். கணப் பொழுதில் யமுனை ஆற்று நீர் விலகி வழிவிட்டது. பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் கோபியர் வாய் திறவாமல் அவரைப் பின் தொடர்ந்தனர். பாதுகாப்பாக யமுனையை கடந்ததும் அவரைப் பார்த்துக் கேட்டார்கள். முனிவராக இருந்தும் இப்படிப் பொய் சொல்லலாமா. எங்களிடம் இருந்ததையெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நித்திய உபவாசி என்பது உண்மையானால் என்று யமுனையிடம் கூறினீர்களே. அவளும் உண்மை அறியாமல் வெள்ளம் விலக்கி வழி தந்துவிட்டாளே என்றார்கள்.வியாசர் சிரித்தபடியே, உப என்ற சொல்லுக்கு அருகில் என்று பொருள். வாசம் என்றால் வசிப்பது இருப்பது என்று அர்த்தம். என் மனதார நான் நித்தியமும் கண்ணன் அருகிலேயே இருக்கிறேன். அதனால் நான் நித்திய உபவாசி என்றார்.
வைகுண்ட ஏகாதசியன்று உண்ணாமல், உறங்காமல், கிருஷ்ணரை எண்ணிக்கொண்டு கடைப்பிடிக்கும் விரதத்தை நாம் உபவாசம் என்று அழைக்கிறோம்.