பக்தர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக இராமகிருஷ்ணர் சொன்ன குட்டி கதை.
ஒரு மனிதன் தனக்கு பணம் தேவைப்பட்ட போதெல்லாம் கடன் வாங்கிக் கொண்டிருந்தான். கடனை அடைக்கும் வகையில் அவன் தொழிலை வளர்க்கவில்லை. தேவைப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டேயிருந்தான். இதனால் கடன் அதிகமாகி விட்டது. கடன் கொடுத்தவர்கள் பலர் அடிக்கடி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள். அவனால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது. இதிலிருந்து எப்படித் தப்புவது என்று அந்த மனிதன் யோசனை செய்து ஒரு வழியைக் கண்டு பிடித்தான். அதன்படி பைத்தியம் பிடித்தவன் போல் பாசாங்கு செய்தான். உறவினர்கள் அவனுடைய பைத்தியத்தைத் தெளிவிப்பதற்காக வைத்தியர்களைக் கூட்டி வந்து காண்பித்தார்கள். வைத்தியர்கள் வந்து பார்த்து மருந்து கொடுத்துப் போனார்கள். மருந்து கொடுக்கக் கொடுக்க அவனுடைய பாசாங்கும் அதிகரித்தது. அந்த வைத்தியர் சரியில்லை இந்த வைத்தியர் சரியில்லை என்று உறவினர்கள் வேறு வேறு வைத்தியர்களைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.
இறுதியாக ஒரு வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் அனுபவம் நிறைந்தவர். சிறந்த அறிவாளி. அவர் அவன் கையைப் பிடித்துப் பார்த்தார். அவனுடைய செயல்களைக் கூர்ந்து கவனித்தார். இது உண்மையான பைத்தியம் அல்ல என்று தெரிந்து கொண்டார். பைத்தியக்காரனைத் தனியாக அழைத்துச் சென்றார். நீ செய்வது சரியல்ல. இப்பொழுது உன்னிடம் சில பைத்திய அறி குறிகள் தென்படுகின்றன. நீண்டநாள் இப்படியே பைத்தியம் போல் நடித்துக் கொண்டிருந்தால் உனக்கு உண்மையாகவே பைத்தியம் பிடித்துவிடும். எச்சரிக்கையாய் இரு என்று கூறினார். இதைக் கேட்ட அந்த மனிதன் பயந்து போய் அன்று முதல் பைத்தியக்காரனைப் போல் பாசாங்கு செய்வதை நிறுத்திவிட்டான்.
ஒரு மனிதன் தொடர்ந்து தான் எப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்கிறானோ அவன் அப்படியே ஆகி விடுகிறான். ஆகவே நல்லவனாக இருப்பதாகக் கொண்டால் அவன் நல்லவனாகவே ஆகி விட முடியும். பக்தி இருப்பதைப் போல் நடித்துக் கொண்டிருந்தால் பக்தி வந்துவிடும். தியானம் செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தால் இறுதியில் தியானம் கைகூடும்.
கீதை விளக்கத்தில் விவேகானந்தர் – நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய்.
