ஒரு சீடன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். குருவே இறைவனை அடைய நல்லதை செய் நல்லதை பார் நல்லதை கேள் என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள். இந்த உலகில் உள்ள அனைத்தையும் நம்முடைய நன்மைக்காகவே படைத்தார் என்றும் சொல்கிறீர்கள். அப்படி என்றால் நன்மை தீமை இரண்டையும் இறைவன்தான் படைத்திருக்க வேண்டும். இறைவன் படைத்த நல்லதை நாம் ஏற்பது போல் கெட்டதையும் ஏற்றால் என்ன? என்று கேட்டான். அதற்கு குரு சிரித்துக் கொண்டே அது அவரவர் விருப்பம் என்று சொல்லி விட்டு உணவிற்கு பின் பதில் சொல்வதாக சொல்லி அவனையும் அழைத்துச் சென்றார்.
சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பாலும் மற்றோரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணமும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான். குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார். பால் சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என கேட்டார். சீடன் விழித்தான். குரு தொடர்ந்தார் பால் போன்ற நல்லவை நாம் மகிழ்வாய் வாழ. அதனை அப்படியே ஏற்கலாம். சாணியை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல் தீயவைகளை விலக்கி புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை கற்க வேண்டும் என்று சீடனுக்கு விளக்கம் அளித்தார்.
