ஒருவர் கடவுளுடைய மகிமை பிரார்த்தனையின் மகத்துவம் என்று தினமும் போதனை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் நதியை படகில் கடக்கும் போது படகு நீரில் மூழ்கி அதில் இருந்த பலரும் இறந்து விட்டார்கள். இவர் மட்டும் நதியின் நடுவே இருந்த ஒரு மரத்தின் கிளையை பிடித்துக் கொண்டு தண்ணீரில் மூழ்காமல் கடவுளே என்னை எப்படியாவது காப்பாற்றி விடு என்று பிரார்த்தனை செய்தார். அப்போது கடவுள் எதிரில் வந்து உன் பிரார்த்தனையை கேட்டு நான் வந்தேன் கவலைப்படாதே வா என் கையை பிடித்துக் கொள் என்றார். இந்த மனிதர் கிளையைப் பிடித்துக் கொண்டு நான் உன்னை பிரார்த்தனை செய்து கூப்பிட்டதற்காக நீ வந்திருக்கிறாய் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த மரக்கிளையை நான் விட்டால் தண்ணிரீல் அடித்துக் கொண்டு சென்று விடுவேன். ஆகையால் நான் இந்த கிளையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போதே என்னைக் காப்பாற்றி விடு. என் கையை மட்டும் கிளையில் இருந்து எடுக்கச் சொல்லாதே என்று சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர ஓடிப் போய் கடவுளை கட்டிக்கொண்டு அப்பா காப்பாற்றி விட்டாயே என்று சொல்லத் துணியவில்லை.
இதுதான் இந்த உலகத்தில் இன்று இருக்கும் பல பக்தர்களின் கதை. தன்னை இறைவனிடம் ஒப்புக்கு கொடுக்காமல் இருக்கிறார்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து முழுமையாக உன்னை கடவுளிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும்.