- உயிர் காற்று (பிராணன்) – மூக்கின் வழியே நடைபெறும் சுவாசம்.
- மலக் காற்று (அபானன்) – கழிவுகளை கீழ்நோக்கி தள்ளும்.
- தொழிற் காற்று (வியானன்) – நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை கொண்டுசெல்லும்
- ஒலிக் காற்று (உதானன்) – இரைப்பையிலிருந்து உணவின் சாரத்தை வெளிப்படுத்தும்
- நிரவுக் காற்று (சமானன்) – சத்துக்களை உடல் முழுதும் சம அளவில் கொண்டு சேர்ப்பது.
- விழிக் காற்று (நாகன்) – பார்வைத் திறன் அளிப்பது உணர்ச்சிகளை தூண்டக் கூடியது
- இமைக் காற்று (கூர்மன்) – கண்ணீரை வரவழைத்தல் சிரித்தல் போன்றவைகளுக்கு காரணமாக உள்ளது.
- தும்மல் காற்று (கிருகன்) – நாவில் சுரப்பையும் பசி தும்மலுக்கு காரணம்
- கொட்டாவிக் காற்று (தேவதத்தன்) – கொட்டாவி விடுதல் விக்கலுக்குக் காரணம்
- வீங்கக் காற்று (தனஞ்செயன்) – நினைவற்ற நிலையில் உடலை வீங்கச் செய்தல் (பெருக்க குறைக்க) போன்றவைகளுக்குக் காரணம்
உடலில் இந்த தச வாயுக்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றன. இந்த பத்து வாயுக்களுடன் சில துணை வாயுக்களும் உடலில் செயலாற்றுகின்றன. அவை
முக்கியன் – உள் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.
வைரவன் – கபத்தை உருவாக்கும்.
அந்திரியாமி – பிராணனை உருவாக்குதல்.
பிரவஞ்சனை – பிராண வாயுவின் நண்பன் இக்காற்றின் துணையுடன் தான் சுவாசம் நடக்கிறது.
இந்த பத்து காற்றுகளும் ஒரு மனிதன் இறக்கும் போது என்ன செய்து கொண்டிருக்கும்? முதலில் இவ்வுடலை விட்டு பிரிவது உயிர்க் காற்றும் நிரவுக் காற்றும் மட்டுமே. இவைகள் பிரிந்தவுடன் மனிதன் இறந்து விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. மற்ற காற்றுகள் உயிரில்லாத அந்த சவ உடலில் இருந்து கொண்டிருக்கும். ஒருவர் இறந்து விட்டால் உயிர் சக்தி முழுவதும் உடனே உடலை விட்டுப் பிரிந்து விடுவதில்லை. இரண்டு வாயுக்கள் தவிர மற்ற 8 வாயுக்களும் இறந்த உடலில் 11 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை இருக்கும். அது வரை நமது சவ உடலில் முடியும் நகமும் வளரும். ஒரு சிறிய அளவில் உயிர் சக்தி இன்னும் செயல் பட்டுக் கொண்டிருப்பதை ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடலை விட்டு 8 காற்றுகளும் ஒவ்வொன்றாக மெதுவாகவே வெளியேறும். சவ உடலை விட்டு வெளியேறும் வரையில் சவ உடலை வீங்க வைப்பதும் கெட்டுக் போக வைப்பதும் நவ துவாரங்களில் நுரை நீர் வரச் செய்தல் உடம்பை துர் நாற்றம் எடுக்கச் செய்தல் ஆகிய வேலைகளைச் செய்கிறது. எப்போது இந்த வேலை முடிகிறதோ அது வரை சவ உடலில் இக்காற்றுகள் இருக்கும். இறுதியாக தனஞ்செயன் என்ற காற்று வெளியேறும். தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்.
வள்ளலார் இப்படி நடக்கக்கூடாது என்றுதான் இறந்த உடலை புதைக்க சொல்கிறார். புதைக்காமல் எரித்து விட்டால் முதலில் செல்லும் அந்த இரண்டு வாயுக்களைத் தவிற மற்ற வாயுக்களின் வேலையை செய்ய விடாமல் தடுப்பதுடன் அதனை நெருப்பின் வெப்பம் தாங்காமல் துன்பப்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றியது போலாகும். எரித்தல் நிகழ்வின் போது இறுதியாகச் செல்லக் கூடிய தனஞ்செயன் வாயு இடுகாட்டில் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்தப் பின்பு வெப்பம் தாங்காமல் டப் என்று சப்தத்துடன் வெடித்து வெளியேறும். இந்த தனஜய வாயுவின் உதவியுடன் பல ஞானிகள் யோகிகள் இறந்த நபரை மீண்டும் உயிருடன் வரச் செய்திருக்கிறார்கள்.
பல யோகிகள் ஞானிகள் உடலை விட்டு விட நினைக்கும் போது தங்களது யோக சாதனைகளால் தமது உடலில் உள்ள தனஞ்செயன் உட்பட அனைத்து வாயுக்களையும் முழுமையாக எடுத்துக் கொண்டு உடலை விட்டு விலகுவார்கள். தமது உடலில் எவ்வகையிலும் தாம் ஒட்டிக் கொண்டிருக்க விரும்பாமல் இப்படிச் செய்வார்கள். இதன் காரணமாகவே இவர்களது உடல் எத்தனை வருடங்களானாலும் கேட்டுப் போகாமல் இருக்கும்.
ஜீவ சமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்து வித வாயுக்களுமே வெளி வருவது இல்லை. காரணம் இவர்கள் விரும்பும் போது அல்லது உலக நன்மைக்காக இவர்கள் மீண்டும் இவ்வுலகில் அந்த உடலுடன் வெளி வருவார்கள். காற்றுடன் ஜீவ சமாதியில் இருப்பவர் யார் காற்றை எடுத்துக் கொண்டு உடலை விட்டுச் சென்ற ஞானிகள் யார் என்பதை சராசரி மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது.