ஒரு முறை பகவான் ரமண மகரிஷியிடம் பலரும் ஆன்மிகம் சம்பந்தமான பல சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பகவானும் ஒவ்வொன்றாக விளக்கினார். சந்தேகம் தீர்ந்த மகிழ்ச்சியுடன் எல்லாரும் சென்றனர். ஆனால் ஒரே ஒரு பக்தர் மட்டும் தயங்கி அங்கேயே நின்று கொண்டிருந்தார். அவர் அதிகம் படிப்பறிவில்லாதவர். அதனால் மிகுந்த கவலையுடன் பகவானே ஒவ்வொருவரும் ஏதேதோ கேள்விகள் கேட்டனர். நீங்களும் சளைக்காமல் எல்லாருக்கும் பதில் சொன்னீர்கள். ஆனால் எனக்கு எதுவுமே தெரியாது. என்ன கேள்விகள் கேட்பது என்று கூட தெரியாது. என்னைப் போன்ற பாமரர்கள் ஞானம் பெறுவது எப்படி முக்தி அடைவது எப்படி? என்று கண்ணீர் மல்கக் கேட்டார்.
வாஞ்சையுடன் அந்தப் பக்தரைப் பார்த்த பகவான் ஏன் இப்படி நீயாக எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்கிறாய்?அவர்களுக்குப் பல விஷயங்களில் குழப்பங்கள் சந்தேகங்கள் இருந்தன. அதைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்டனர். நான் பதில் சொன்னேன். உனக்கு அந்த மாதிரி குழப்பங்கள் ஏதும் இல்லையே! தனக்கு ஒன்றுமே தெரியாது என்று உணர்வதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய ஞானம். இதை விட வேறென்ன வேண்டும்? எல்லாவற்றையும் ஈசன் பொறுப்பில் விட்டு விட்டு பற்றில்லாமல் உன் கடமைகளைச் செய்து வா. உனக்கு முக்தி கிடைக்கும் என்றார் பகவான். பக்தரும் மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு அகன்றார்.