குரு பக்தி

திருப்பதியில் அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது மோர் விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி அந்த வழியாக சென்றாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று ஆசை தோன்றியது. ஆனால் குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர் விற்பவளைக் கூப்பிட்டால் பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால் மோர் ஆசையைத் துறந்து பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். சீடர்களின் கூட்டத்தை பார்த்ததும் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து மோர்க்காரப் பெண்மணி இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்து ராமானுஜருக்கு வணக்கத்தை செலுத்தினாள். ராமானுஜர் சீடர்களின் ஆசையை பார்த்து கண்ணசைக்க ஆசையில் இருந்த சீடர்களுக்கு மோர் பானையைப் பார்த்ததும் எனக்கு எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும் நிறைந்த மனத்துடன் ராமானுஜரை பார்த்தாள். குரு பக்தியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட காரணத்தால் மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள். ராமானுஜர் அந்தப் பெண்மணியைப் பார்த்து அம்மா நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன? என்று கேட்டார். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண் மோருக்கு பணம் வேண்டாம் சாமி. அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போறேன்? அதற்கு பதிலாக பெருமாள் இருக்கக் கூடிய பரமபதத்தை அடையணும் மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. மகிழ்ச்சியுடன் செல்வேன் என்றாள்.

ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஆசார நியமங்களோ சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள் மோட்சம் வேண்டும் என்கிற ஆசை தோன்றியது ஆச்சரியம். இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு கவலைப்படாதம்மா உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். மகழ்ச்சியுடன் சென்று வா என்றார். அந்தப் பெண்மணி விடவில்லை. உங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமி. ஆனா அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் அந்த வழியில் செல்கிறேன் என்றாள். ராமானுஜர் சிரித்தார். அம்மா நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சீடர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் ஏழுமலைக்குச் சொந்தக்காரன் ஒருவர் இருக்கிறார் அவரிடம் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவருக்குத் தான் உண்டு என்றார். இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற வழியாக இல்லை. சாமி மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும் மோட்சம் வேணும்னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் திறந்து எதுவும் பதில் சொல்லவில்லையே என்றாள்.

பெருமாளுக்கு நிறைய வேலை இருக்கும். அதனால் இதை ஒரு குறையா சொல்லிக் கொண்டு இருக்காதே. உன் மனதில் படுவதை நீ கேட்க வேண்டும் என்று நினைப்பதை அவரிடம் கேட்டுக் கொண்டே இரு. ஒருநாள் நிச்சயம் உனது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார் என்றார் ராமானுஜர். ராமானுஜரின் வார்த்தையை கேட்டதும் உங்களை நம்புகிறேன். உங்களது வார்த்தையை நம்பகிறேன். உங்களைப் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறிவிட்டு சாமி எனக்கு மோட்சம் தர வேண்டும் என்று சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செய்து நீங்கள் ஒரு ஓலை எழுதிக் கொடுங்கள் என்றாள். உங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்வார் என்று நம்புகிறேன் ஆகவே கொடுங்கள் என்று கேட்டாள். அவள் அபரிமிதமான நம்பிக்கையோடு கேட்பதால் அவள் கேட்பதை மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர் ஒரு சீடரிடம் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். அதைக் கேட்டதும் சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை என்றாலும் அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர். உண்மையாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா இல்லை அந்தப் பெண்மணியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா? என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து கவனிக்கலானார்கள். மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு ஓலையில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் திருமலை என்று குறிப்பிட்டுவிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டு அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலையில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். மோர் விற்பனை செய்யும் பெண்ணுக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய் என்று சிபாரிசு செய்து ஓலையில் எழுதப்பட்டிருந்தது. ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். பெண்மணியை மேலும் கீழும் பார்த்து இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள். ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின் முன்னால் நீட்டினர் அர்ச்சகர். உடனே தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். பிறகு உனக்கு மோட்சம் தந்தேன் என்று அந்தப் பெண்ணைப் பார்த்துப் பெருமாள் அசிரீரீயாக அருளினார். அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர்கள். மோர் விற்கும் பெண்மனியை தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டார்கள்.

தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.