சிவாலய வளாகத்துக்கு அருகே ஒரு நாய் எப்போதுமே சுற்றிக் கொண்டே இருக்கும். கோயிலை சுற்றி உள்ள வீடுகளில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்தது. அப்போது அந்த ஊரின் சிவாலயத்தில் 11 நாட்கள் தொடர் திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அந்த ஊரில் அனைவருமே தாங்கள் சாப்பிடும் உணவை இறைவனுக்கு படைத்து விட்டு சாப்பிட்டார்கள். இறைவனுக்கு படைத்தது என்பதால் கீழே போடக்கூடாது என்று மீதம் இல்லாமல் சாப்பிட்டார்கள். யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவில்லை. நாய்க்கு எச்சில் இலை உணவு கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயிலின் ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது. அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் செய்தார். ராமர் பூஜை பிரதிஷ்டை செய்த லிங்கம் உள்ள இராமேஸ்வரம் தல மகிமையை விளக்கமாக பேசினார். அனைத்தையும் அந்த நாயும் காது கொடுத்து கேட்டது. இராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் உள்ள சிறப்பை கேட்டதும் மக்கள் அனைவரும் திருவிழா முடிந்ததும் அக்கோயிலுக்கு செல்ல வேண்டும் புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். நாய் சிந்தித்தது. நாமும் இப்படியே எச்சில் இலையை பொறுக்கித் தின்றே காலத்தை கழித்து விடக் கூடாது. இராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தது. திருவிழா முடியும் வரை கோயிலின் அருகே இருந்து இவரது சொற்பொழிவுகள் அனைத்தையும் கேட்டு மேலும் இறைவனைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின் கிளம்பலாம் என்று நாய் முடிவு செய்து திருவிழா முடியும் நாளுக்காக காத்திருந்தது. கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை தினமும் கேட்டு நாளடைவில் அதற்கு இராமேஸ் வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது. சாப்பிடாமல் விரதம் இருந்ததால் வைராக்கியம் அதிகரித்தது. திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,
கோயிலில் திருவிழா முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள். நாயும் இராமேஸ்வரம் புறப்படத் தயாராகி நடை பயணத்தை தொடங்கியது. முதல் அடி எடுத்த வைத்தது. அப்போது ஒரு வீட்டின் பின் பக்கத்தில் இருந்து பொத் என்று ஒரு சத்தம் கேட்டது. நாய் திரும்பிப் பார்த்தது. எச்சில் இலையில் நிறைய உணவு இருந்தது. அதனைப் பார்த்ததும் பசியுடன் இருந்த நாயின் வாயில் எச்சில் ஊறியது. என்ன மணம் நல்ல கறி விருந்தாக இருக்கிறது என்று சாப்பிட்டது. நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால் இந்த கறி விருந்து கிடைத்திருக்காது என்று நினைத்து அடுத்த எந்த வீட்டில் இலை விழும் என்று பார்க்க தொடங்கி இராமேஸ்வரத்தை மறந்தது.
இந்த நாயின் மனம் போலத்தான் ஒரு மனிதனின் மனம். இந்த மனம் இருக்கிறதே மகிழ்ச்சியில் அனுபவிக்க எது கிடைத்தாலும் நன்றாக அனுபவித்து ஆட்டம் போடும். மகிழ்ச்சிக்கு எதுவும் கிடைக்காத பொழுது ரொம்ப அடக்கமாகவும் சுவாமி மீது பக்தி பண்ணுவது போலவும் நம்மை போல பக்திமான் யாரும் இல்லை என்னைப் போல் நல்லவன் யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும். ஆனால் பணம் சேர்க்க பொருள் சேர்க்க தவறு செய்யும் போதும் நாக்கு சுவை தேடி புலால் உண்ணவும் மது உண்ணவும் என்று வாய்ப்பு கிடைத்ததும் கோயிலாவது சாமியாவது புண்ணியமாவது அதுக்கெல்லாம் இன்னும் வயது இருக்கிறது. இப்பவே சாமியார் மாதிரி உத்திராட்சம் போட்டு திருநீறு பூசி காசி இராமேஸ்வரம்னு போகனுமா? வாழ்க்கையை இந்த வயதில்தான் அனுபவிக்க வேண்டும் என்று ஆட்டம் போட மனம் ஆரம்பித்து விடும். துக்கம் வந்தால் சாமி சாமி என்பதும் துக்கம் தொலைந்ததும் ஆட்டம் போடுவதும் மனிதனின் பிறவித் துன்பத்திற்கு மூல காரணமாகவே இருக்கிறது. இதனை அறியாத மனிதன் நான் எனது என்னுடையது என்று ஆட்டம் போட்டபடியே அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.