ஆதிசங்கரர் பலமுறை லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுத நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ரநாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும் சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். இரண்டு மூன்று முறை இவ்வாறு நடக்க ஏன் இப்படி? என்று சிஷ்யரிடம் கேட்டார் ஆதிசங்கரர். சிஷ்யர் தான் சுவடிகளை எடுக்கச் செல்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளைத் தந்ததாகவும் அதனைச் சரி பார்க்காமல் தான் கொண்டு வந்து தந்து விட்டதாகவும் கூறினார். இவ்வாறு இரண்டு மூன்று முறை விஷ்ணு சஹஸ்ரநாமச் சுவடிகளை அன்னையே சிறுமி ரூபத்தில் வந்து தந்ததாக அறிந்து கொண்ட சங்கரர் அதுவே அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தார். சௌந்தர்ய லஹரி பவானி ஸ்தோத்ரம் எனப் பல விதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரரால் லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் செய்ய இயலவில்லை.
பிற்காலத்தில் ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்ற வரும் சகல சாஸ்திரங்களில் பாண்டித்யம் கொண்டவருமான பாஸ்கர ராயர் என்பவரைக் கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் எழுதிக் கொண்டாள் அம்பிகை.
