- சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டு அவை புண்ணியமும் பாவமுமாகும் ஆகும்.
ஒருவர் தான் செய்த தான தருமங்கள் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்ணியங்களை தானே அடுத்தவர்களிடம் எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும். ஒருவர் தான் செய்த பாவங்களை தானே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும். குறைய வேண்டியது பாவம் நிறைய வேண்டியது புண்ணியம். ஆகவே செய்த தானதர்மங்களை சொல்லக் கூடாது. பாவத்தைக் சொல்ல வேண்டும்.
- இறைவனுடைய கருணையையும் அன்பையும் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.
துன்பத்தில் துடிக்கிற உயிர்களிடம் அன்பு செய்து கருணையோடு அவற்றின் துன்பத்தை போக்குவதற்கான தன்னால் இயன்ற செயலை செய்தால் இறைவனும் அவர்களின் மேல் அன்பு செலுத்தி கருணையோடு இருப்பார். அன்பால் அன்பையும் கருணையால் கருணையையும் பெறலாம்.
- 1. மன அழுக்கு 2. வாயழுக்கு 3. மெய்யழுக்கு என்று அழுக்குகள் மூன்று வகைப்படும்
1 பொறாமை ஆசை கோபம் ஆகியவை மன அழுக்கு ஆகும். இந்த மன அழுக்கை தியானம் என்ற நீரால் கழுவி தூய்மை செய்யலாம்.
2 பொய் புறங்கூறல் அடுத்தவர் மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் பேசுதல் ஆகியவை வாயழுக்கு ஆகும். வாயால் இறைவனை போற்றித் துதித்துப் பாடி இந்த வாயழுக்கை சுத்தம் செய்து நீக்கலாம்.
3 மெய் என்றால் உடல் என்று பொருள். போதைப் பொருள்கள் உபயோகித்தல் கொலை புலால் உண்ணுதல் களவு ஆகிய இவை மெய்யழுக்கு ஆகும். இந்த மெய்யழுக்கை உடலால் இறைவனுக்கு உழவாரப்பணி செய்து அர்ச்சனை என்னும் நீரால் கழுவி சுத்தம் செய்யலாம்.
