ஒரு ஏழை அன்றாட உணவிற்கே ஒன்றுமில்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருந்தான். அவன் பொய் பேச மாட்டான். சோம்பேறியும் அல்ல. முன் ஜென்ம பிரதிபலன் அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. ஒருநாள் தன் வாழ்வினை நொந்து நடந்து கொண்டிருந்தான். அவனுக்கருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் ஐயா எனக்கு சிறிய சந்தேகம் தீர்த்து அருள்வீராக என்று அவரை வணங்கி தாங்கள் ஏன் இப்படி சாம்பலை பூசிக்கொண்டிருக்கிறீர்கள் அதுவும் மேனி முழுதும்? என்றான்.
சிவனடியாரும் இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு அதன் அடையாளமே இது. நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய் விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்க வேண்டும். ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக் கூடாது என்பதை அறியவும். இன்னும் உயிருள்ளவரை இதுவே மகாலெட்சுமி அம்சம். இதையணிந்தால் செல்வம் பெருகும் என்பதற்காகவும் திருநீறு அணிகிறேன் என்றார். சுவாமி எங்கள் குல வழக்கத்தில் இதை அணிய மாட்டார்கள். நான் மிகவும் வறுமையில் வாடுகிறேன் நான் என்ன செய்யவேன் என்று சிவனடியாரிடம் புலம்பி அழுதான். சிவனடியாரும் சரியப்பா நீ அணியவில்லை என்றாலும் பரவாயில்லை அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும் என சொல்லி அங்கிருந்து கிளம்பினார். ஏழை சிந்தித்தான் நம் குல வழக்கப்படி பூச முடியாது. அப்படியெனில் நம் தெரு முனையில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசித்திட வேண்டும் என முடிவு செய்து அதிகாலை எழ வேண்டும் என்ற முனைப்பில் உறங்கினான். அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித் திருநீறு பூச்சை காண காத்திருந்தான். குயவர் அன்று சற்று இவனுக்கு முன்பாகவே கிளம்பிப் போய்விட்டார். இதனை அறிந்த அவன் நாம்தான் தாமதமாக எழுந்துவிட்டோமோ? என்று எண்ணி குயவன் மண்ணெடுக்கும் இடத்திற்கே போய் தரிசனம் செய்யலாம் என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்.
குயவர் அதிகாலை மண்ணை தோண்டிக் கொண்டிருக்கும் போது எதிர் பாராத விதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது. அந்த தங்கப்பானை புதையலைக்கண்டு அதிர்ச்சியும் சந்தோஷமுமாக இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் பார்த்தான். அப்போது ஏழை குயவனின் நெற்றியிலிருந்த திருநீற்றை தூரத்திலிருந்து பார்த்ததும் பார்த்துட்டேன் பார்த்துட்டேன் என ஆவலாய் கத்தினான். உடனே குயவன் உண்மையாகவே பார்த்து விட்டாயா என்று கேட்டான். ஆமாம் நிறைவாகக் கண்டுவிட்டேன் எனக் கூறினான். உடனே குயவன் அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைபிடித்து தூக்கு ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்வோம் எனக்கூறினான். அப்போது தான் புதையல் விஷயம் ஏழைக்கு புரிந்தது. அப்போது சிந்தித்தான் நெற்றியைப் பார்த்ததற்கே பாதி தங்கம் கிடைத்ததே இன்னும் நாம் பூசினால் என்னவெல்லாம் கிடைக்குமோ என்று தன் குல வேற்றுமையை தூரத் தள்ளி வைத்து உடல் முழுதும் திருநீற்றை பூசினான்.