திருவருட் பிரகாச வள்ளலாரை முத்துசாமி என்பவர் தன் திருணமத்திற்கு அழைத்திருந்தார். வள்ளற்பெருமான் திருமணத்திற்கு செல்லவில்லை. வள்ளற்பெருமான் வராததை எண்ணி வருத்தம் கொண்டார் முத்துசாமி அவர்கள். அவர் வருந்துவதை உணர்ந்த வள்ளற்பெருமான் தன்னுடைய மூன்று மனைவிகள் 8 பிள்ளைகள் படுத்தும் பாட்டால் திருமணத்திற்கு வர இயலவில்லை என்று குறிப்பிட்டு பாடல் வடிவில் ஒரு கடிதம் எழுதினார். அந்தப் பாடல்களே குடும்பக் கோரம். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட மிக உயர்ந்த உபதேசம் இது. தத்துவக் குடும்பத்தில் அகப்பட்டுத் தடுமாறும் கோர நிலையைக் கூறுவதால் இது குடும்பகோரம் எனப்பெயர் பெற்றது.
பாடலின் கருத்து:
குடும்பத் தலைவன் பெயர் – ஏழை அவனுக்கு மூன்று மனைவிகள்:
முதல் மனைவி – ஆணவம்
இரண்டாம் மனைவி – மாயை
மூன்றாம் மனைவி – கன்மம்.
முதல் மனைவியாகிய ஆணவத்திற்கு ஒரே மகன் – அவன் பெயர் அஞ்ஞானம். இரண்டாம் மனைவியாகிய மாயைக்கு நான்கு பிள்ளைகள் – 1. மனம் 2. புத்தி 3.சித்தம் 4.அகங்காரம். மூன்றாம் மனைவியாகிய கன்மத்திற்கு மூன்று பிள்ளைகள் – 1.சத்துவம் 2.இராசசம் 3.தாமசம்
மூன்று மனைவியரோடும் எட்டுப் பிள்ளைகளோடும் ஏழைத் தலைவன் வாழ்வதோ வாடகை வீட்டில். வாடகை வீடு ஒருவருக்கு சொந்தமானது இல்லை. வீடு மூன்று பேருக்கு சொந்தமானது. அந்த மூன்று பேர் 1.வாதம் 2.பித்தம் 3.சிலேத்துமம்.
வீட்டுக்காரர்கள் மூவரும் வீட்டிற்கு ஒவ்வொரு மாதமாக வாடகை வாங்குவது இல்லை. தினந்தோறும் வாடகையை வசூலிக்கின்றனர். வீடு – உடம்பு. வாடகை – உணவு.
இவ்வாறு துன்புறும் குடும்பத் தலைவனுக்கு எத்தனையோ வெளி விவகாரம் உள்விவகாரம் உள்ளது. அவை வேதாந்தம் பேச வருவோர்கள் சித்தாந்தம் பேச வருவோர்கள் இதிகாசம் கூற வருவோர்கள் இலக்கணம் இயம்ப வருவோர்கள் மத தூஷணம் செய்ய வருவோர்கள் விவகாரம் பேச வருவோர்கள் வீண் கதைகள் பேச வருவோர்கள் இப்படி எத்தனையோ வெளி விவகாரங்கள்.
மலங்கழித்தல் பல்துலக்குதல் ஆடை துவைத்தல் நீராடல் சிவ சின்னம் அணிதல் பூசனை யோகம் என எத்தனையோ உள் விவகாரங்கள். இத்தனை விவகாரங்களுக்கும் பகல் பொழுது சரியாகப் போகிறது.
இரவு வந்தது இனிப் பரத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும். பரத்தை யார்? நித்திரை. நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதும் சரியாய்ப் போகின்றது என்று வள்ளலாரின் குடும்ப கோரம் நிறைவு பெருகின்றது.
இவ்வாறு பாடல்களை அருளி இத்தடைகளால் திருமணத்திற்கு வரவில்லை என முத்துசாமி அவர்களுக்கு இக்குடும்ப கோரத்தை வள்ளலார் கொடுத்து அனுப்பினார். பெருமானிடமிருந்து குடும்பகோரக் கடிதத்தை முத்துசாமியிடம் கொண்டு சென்றவர் கொந்தமூர் வரதாசாரியார். முத்துசாமி இந்த அகவலை மனப்பாடம் செய்து வைத்திருந்தார். மனப்பாடமாக அவர் சொல்லக் கேட்டு அதனை மோசூர் கந்தசாமி அவர்கள் எழுதி வைத்தார். அது சித்தந்த சரபம் கலியாண சுந்தரனார் (அட்டாவதானம் பூவை கலியான சுந்தரனார்) பார்வையிட்டு காஞ்சி நாகலிங்கனார் நடத்தி வந்த தொழிற்கல்வி இதழில் 1914 ஜூலை ஒரு பாதியும் ஆகஸ்டு இதழில் மறுபாதியுமாக வெளிவந்தது. அனைத்து திருஅருட்பா பதிப்புகளிலும் குடும்ப கோரம் பிற்சேர்க்கை பகுதியில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் இதுவே மிக நீண்ட செய்யுள் கடிதம் ஆகும்.