மகிழ்ச்சி

கடவுள் ஏன் அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்கவில்லை என்று சீடர் ஒருவர் குருவிடம் கேட்டான். அதற்கு குரு கடவுள் எல்லோரையும் ஒரு குறையும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் வைத்திருக்கிறார். இருப்பதை விட்டு இல்லாததை நினைத்துக்கொண்டு எண்ணம்தான் மக்களை குழப்பிக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் மக்களுக்கு நிம்மதி இல்லை என்றார். சீடருக்கு புரியவில்லை விழித்தான்.

குரு அங்கிருக்கும் பாதி தண்ணீர் இருக்கும் டம்ளரைக் காட்டி இது என்ன என்று கேட்டார். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்று சீடர் பதில் சொன்னான். உடனே குரு பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்பவன் நிறையைக் காண்கிறேன். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்பவன் குறையைக் காண்கிறான். வாழ்க்கை என்பது கண்ணாடி மாதிரி. மக்கள் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்களோ அதுதான் மக்களுடைய வாழ்க்கையாக பிரதிபலிக்கின்றது. இந்த வாழ்க்கையில் ஒன்றும் கிடையாது அனைத்தும் மாயை என விளக்கினார்.

கைத்தடி

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி நழுவிப் போய் விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று வருத்தப்பட்டான்.

நடந்தவைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த ஒரு துறவி அய்யா நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேன். இப்போது கைத்தடியை நழுவ விட்டதாக வருத்தப்படுகின்றீர்கள். உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. எங்கிருந்தோ ஒரு கைத்தடி கங்கையில் மிதந்து வந்தது. இப்போதும் அது எங்கோ மிதந்து போய்க்கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள். அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி அதை இழந்ததும் வருத்தப்படுகின்றீர்கள் என்றார்.

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

யார் துறவி – எது துறவு

மகாபெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள். ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும் இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க பக்தர்கள் தீர்மானித்திருந்தனர். இதுபற்றிய செய்தி பெரியவரை வந்தடைந்தது உடனே அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அந்த தேரத்தில் யார் துறவி – எது துறவு என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.

ஸ்தாபனத்திற்கு பலம் என்று ஒன்று அதிகமாகி விட்டால் அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவன் ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கிகள். அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட ஒரு இடம் இருக்க வேண்டாமென்று ஊர்ஊராக செல்லும் படி சாஸ்திரம் கூறியுள்ளது. ஆனாலும் சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை என்றுதான் கூற வேண்டும். தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது அவனது ஆன்ம தபோ பலத்தை விட பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக்கொள்ள வேண்டும். காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன்.

உத்தமமா மடத்தை பார்த்துக்கொள்வது அவன்தான் பணமல்ல. எனவே எப்போதும் செலவுக்கு மேலே பணம் சேராதபடியே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வாகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி மடத்தின் நிதியை அதிகரிக்க கூடாது என்று கருதுகிறேன். சுவாமி தடுத்து விட்டாரே என நீங்கள் யாரும் வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. மடத்திற்கு நெருக்கடி ஏற்படும்போது உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம் என்றார்.

அகத்தியரின் மின்சாரம் கண்டுபிடிப்பு

சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்

அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி இதற்கான விளக்கம். ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிரத்தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள் பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்,

மித்ரவருனசக்தியா அப்படி என்றால் என்ன?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்பூர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் மயிலின் கழுத்துப் பகுதி என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள். இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. மயிலின் கழுத்து நிறம் அது காப்பர் சல்ஃபேட் கண்டுபிடித்தாகிவிட்டது. அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது.

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் அகத்தியர் இட்ட பெயர் மித்ரவருண சக்தி. இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர். மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் குறிக்கும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

வர்ணங்கள் உண்மை விளக்கம்

பிறப்பால் வர்ணங்கள் இல்லை அவர்களின் செயலினால் மட்டுமே என்பதை மனு தர்மம் சொல்கிறது. பிறப்பால் அனைவரும் சமமே தர்ம செயல்களை செய்வதாலும் நற்குணங்களை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே ஒருவன் மேன்மையான நிலைக்கு உயர்கிறான் என்று பகவத்கீதை சொல்கிறது. நம்முடைய வேதத்தில் இருக்கும் சில சமஸ்கிருத மந்திரங்களுக்கு பொருள் தவறாக அனைவருக்கும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் விளக்கம்

வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை கடைபிடிப்பவனும் இதனை அடுத்தவருக்கு எடுத்துரைப்பவனுக்கும் மனம் வலிமையுடன் இருக்க வேண்டும். மனம் வலிமையடைந்தால் அவனது முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருக்கும். மனமானது நெற்றியின் நடுவே உள்ளது. மனதை வலிமையானதாக வைத்திருப்பவர்கள் அனைவரும் பிராமணன் ஆவார்கள்.

ராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்ரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடி மக்களை திறம்பட காத்திட முடியும். தோள் வலிமையுடன் இருப்பவர்கள் அனைவரும் சத்ரியன் ஆவார்கள்.

வைசியனானவன் வாணிபம் செய்பவன். பல ஊர்களுக்கு நடந்து செல்ல வேண்டும். பல நாட்கள் நடப்பதற்கு வலிமையான தொடை இருக்க வேண்டும். வலிமையான தொடைகளுடன் இருப்பவர்கள் அனைவரும் வைசியன் ஆவார்கள்.

சூத்திரனானவன் உடல் உழைப்பால் வேலை செய்பவர்கள் மற்றும் வயல்களில் வேலை செய்து இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற உணவு உற்பத்தி செய்து பாடுபட வேண்டும். விவசாயம் செய்ய அவனுக்கு சோர்வில்லாத வலிமையான பாதங்கள் வேண்டும். வலிமையான பாதங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் சூத்திரன் ஆவார்கள்.

பொய்யான விளக்கம்

பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான்
பிரம்மாவின் தோளில் இருந்து சத்திரியன் பிறந்தான்
பிரம்மாவின் தொடையில் இருந்து வைசியன் பிறந்தான்
பிரம்மாவின் பாதத்தில் இருந்து சூத்திரன் பிறந்தான்

ஆன்மீகம்

தியானம் செய்தால் எதிரில் கடவுள் வந்து நிற்பார் என்றெல்லாம் நினைக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்தால் உடல் வலிமையாவது போல தியானம் செய்தால் மனது வலிமை அடையும். நமது சிந்தனையில் தெளிவு பிறக்கும். மனது வலிமையடைந்தால் தீயவற்றின் பக்கம் மனம் செல்லாது. நல்ல பழக்க வழக்கங்களோடு நல்லதையே செய்து நல்லதையே பார்த்து நல்லதையே கேட்டு நல்லதையே பேசி தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதி வந்ததும் கடவுள் எதிரில் வந்து நிற்பார்.

ஆன்மீகம் என்பது தேடி அலைகிற விஷயம் இல்லை. தகுதி இருந்தால் தேடி வருகிற விஷயம்.

18 புராணங்கள்

வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்

18 புராணங்களின் பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு ஸ்லோகம் உள்ளது.

மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம் வசதுஷ்டயம் I
அனாபலிங்ககூஸ்கானி புராணானி ப்ருதக் ப்ருதக் II

இந்த ஸ்லோகத்தின் பொருள் :- இரண்டு ‘ம’, இரண்டு ‘ப’, மூன்று ‘ப்ர’, நான்கு ‘வ’ மற்றும் ‘அ’,’நா’.’ப’, ‘லிங்’, ‘க’, ‘கூ’,’ஸ்கா’ ஆகியவையே புராணங்களாகும்.

இரண்டு ‘ம’ என்பது மகாரத்தில் ஆரம்பிக்கும் மத்ஸ்ய மற்றும் மார்க்கண்டேய புராணத்தைக் குறிக்கும்.
இரண்டு ‘ப’ என்பது பகாரத்தில் ஆரம்பிக்கும் பவிஷ்ய மற்றும் பாகவத புராணத்தைக் குறிக்கும்.
மூன்று ‘ப்ர’ என்பது ப்ர-வில் ஆரம்பிக்கும் ப்ரஹ்ம, ப்ரஹ்மாண்ட மற்றும் ப்ரம்மவைவர்த புராணத்தைக் குறிக்கும்.
நான்கு ‘வ’ என்பது வகாரத்தில் ஆரம்பிக்கும் வராஹ, விஷ்ணு, வாயு, மற்றும் வாமன புராணத்தைக் குறிக்கும்.
‘அ’ என்பது அக்னி புராணத்தைக் குறிக்கும்.
நா’ என்பது நாரதீய புராணத்தைக் குறிக்கும்.
‘ப’ என்பது பத்ம புராணத்தைக் குறிக்கும்.
‘லிங்’ என்பது லிங்க புராணத்தைக் குறிக்கும்.
‘க’ என்பது கருட புராணத்தைக் குறிக்கும்.
‘கூ என்பது கூர்ம புராணத்தைக் குறிக்கும்.
‘ஸ்கா’ என்பது ஸ்கந்த புராணத்தைக் குறிக்கும்.

இப்படி 18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு சிறிய ஸ்லோகத்தை நினைவில் வைத்திருந்தால் போதும்.
காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.

தேவி பாகவதத்தில் முதல் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் இந்தக் குறிப்பு இடம் பெறுகிறது.

பயத்தை எதிர்த்து நில்

காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும் விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் காசியில் துர்க்கை கோயிலின் மதில்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக் கூட்டம் கீறிச்சிட்டு பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில குரங்குகள் அவர் மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தன. சில குரங்குகள் அவரைப் பிறாண்டின சில குரங்குகள் அவரைக் கடித்தன சில குரங்குகள் அவரது உடையைப் பிடித்திழுத்தன. இந்த இக்கட்டான நிலையில் விவேகானந்தர் குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தார். ஆனால் அவர் ஓடினாலும் குரங்குகள் பின்தொடர்ந்து அவரை விடாமல் துரத்தின. இந்தக் குரங்குகளிடமிருந்து தப்புவதற்கு வழியில்லை என்று அவர் நினைத்தார். விவேகானந்தர் ஓடிக்கொண்டிருப்பதையும் ஒரு குரங்குக் கூட்டம் அவரைத் துரத்துவதையும் சற்று தூரத்திலிருந்த சந்நியாசி ஒருவர் பார்த்தார்.

உடனே அவர் விவேகானந்தரைப் பார்த்து நில் குரங்குகளை எதிர்த்து நில் என்று உரத்த குரலில் கூவினார். அந்தச் சொற்கள் விவேகானந்தரின் காதுகளில் விழுந்தன. அவர் புதிய ஓர் ஊக்கம் பெற்றார். உடனே ஓடுவதை நிறுத்தி துணிவுடன் குரங்குகளை நோக்கித் திரும்பினார். இப்போது அவர் குரங்குளை நோக்கி முனைப்புடன் முன்னேறத் தொடங்கினார். அவர் உறுதியுடன் வீறுடன் குரங்குகளை எதிர்க்கும் நிலையில் இருந்தார். அவ்வளவுதான் அவரது தோற்றத்தைப் பார்த்து குரங்குக் கூட்டம் பயந்துவிட்டது இப்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இவர் நம்மைத் தாக்குவார் இவரிடமிருந்து இப்போது நாம் எப்படியும் தப்பிக்க வேண்டும் இவரிடமிருந்து நாம் தப்பித்தால் போதும் என்று குரங்குகள் நினைத்து அங்கிருந்து பின்வாங்கி மிகவும் வேகமாக வந்த வழியில் திரும்பி ஓட ஆரம்பித்தன. இந்த நிகழ்ச்சி விவேகானந்தரின் உள்ளத்தில் மிகவும் நன்றாகப் பதிந்துவிட்டது.

இதை அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நியூயார்க்கில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் கூறினார். அந்தச் சொற்பொழிவில் அவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினையைப் பற்றியும் இவ்விதம் குறிப்பிட்டார்: இது நம் வாழ்க்கை முழுவதற்கும் நல்ல ஒரு படிப்பினையாகும். பயத்தை எதிர்த்து நில் தைரியமாகப் பிரச்னைகளை எதிர்த்து நில் ஒருபோதும் அவற்றுக்கு பயந்து ஓடாதே இவற்றுக்கு நாம் பயந்து ஓடாமல் இருந்தால் அந்தக் குரங்குக்கூட்டம் போலவே துன்பங்களும் நம்மிடமிருந்து விலகி ஓடிவிடும். மனிதனைக் கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் இயற்கையின் வேகங்களையும் பிரச்னைகளையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒருபோதும் பணிந்துவிடக் கூடாது. கோழைகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. அச்சத்தை எதிர்த்து நில்லுங்கள் துன்பங்களை எதிர்த்து நில்லுங்கள் அறியாமையை எதிர்த்து நில்லுங்கள்.

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சி

ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் விளாதி மீரின் என்பவரின் ஆராய்ச்சியில் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கூறுகிறார். லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் தனக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒரு பொருள் தருவதாகவும் இருக்கிறது என்கிறார். குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால் அது மழை தரும் நெருப்புத் தரும் காற்று தரும் கேட்ட எல்லாம் தரும் என்றும் கூறுகிறார்.

சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரம் என்கிறார். டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியது. இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளம். அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறது. ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும் ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த கூட்டுறவோடும் செயல்படுகிது. சிவமூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர் மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்.

இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும் இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன் நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப்புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா ஐரோப்பா கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் கிராண்ட் கன்யான் என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் சிவம், விஷ்ணு, பிரம்மன் மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றன. ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும் அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட அல்லது உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து. இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியவாளின் சமையல் விளக்கம்

காஞ்சி பெரியவர் பக்தர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? அங்கிருந்த பக்தர்கள் சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம் அதுதான் வித்தியாசம் என்றார்கள். குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம் என்றார். இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னார்.

தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால் நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல் ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம். இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் தான் என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பங்கள் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது. இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை ஆனந்தம் அவைதான் பாயசம், மோர், பட்சணம், இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. உணவு அருந்துவதில் மோர்தான் கடைசி. அதன் பிறகு வேறு எதுவும் சாப்பிடுவது இல்லை. பரமாத்மாவைக் கலந்தபின் மேலே செல்ல ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்று பதில் சொன்னார் காஞ்சி பெரியவர்.

குழம்பு-குழப்பம்
தான்-அகங்காரம்
ரசம்-தெளிவு
பாயஸம்-இனிமை
மோர்-ஆனந்தம்