உண்மை ஞானம்

ஒரு குரு இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் .குருவுயும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக பார்க்க ஆரம்பித்தான்.

தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான். குருவின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையேகூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார்.

மறுநாள் அவனை அழைத்தார். இன்று அதிகாலையில் பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் குரு ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை நமது அரசரால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என்றார். கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன. இதோ உடனே விரைந்து செய்து முடிக்கிறேன் குருவே என்று சொல்லிவிட்டு தச்சு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான்.

தச்சு ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். தச்சு ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே, அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசரால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பலஅயல்நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் தச்சு ஆசாரி சூடாகி விட்டார். ஏன்டா இன்னிக்கு நீ பொழுது போக்க நான் தான் கிடைச்சேனா செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே நீ படிச்சவன்தானா என்றார்.

இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது. அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் என்றான். தச்சுஆசாரி அடேய் அறிவு கெட்டவனே என்னதான் படிச்சிருந்தாலும் விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயரம் மற்றும் அகலம் மட்டும்தான் என்றார். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா என்றார். எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. மனித அறிவு இவ்வளவுதானா இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் அவமானம் பொங்கியது .கூனிக் குறுகியபடியே குருவின் முன்னால் போய் நின்றான் .

குரு சிரித்துக் கொண்டே கேட்டார் என்னப்பா சவப்பெட்டி அடிச்சாச்சா அவன் பதில் சொன்னான் அடிச்சாச்சு என்னோட தலை கனத்துக்கு என்றான். குரு சொன்னார் என்னதான் படித்து பல பதக்கங்கள் பரிசுகள் வாங்கி இருந்தாலும் பெரிய பதவியில் இருந்தாலும் பெரிய பணக்காரராக இருந்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடனும் மனித நேயத்துடனும் நடப்பதே உண்மையான ஞானம் என்றார்.

கர்ம யோகம் என்றால் என்ன ? - வில்லங்க ...

சூர்தாசர் பக்தி

சூர்தாசர் பிறவியிலே கண்பார்வையை இழந்தவர். கண்பார்வை தெரியாததால் குடும்பம் இவரை ஒதுக்கி வைத்தது. ஒரு நாள் அவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தபோது தெரு வீதியில் கிருஷ்ண பஜனை பாடிக்கொண்டு சென்றனர் சிலர். அவர்கள் பாடிய பாடல்களை கேட்டு பரவசமடைந்த சூர்தாசர் அதில் ஒருவரை அழைத்து அய்யா நீங்கள் இப்பொழுது பாடிய பாடல்கள் யாரை பற்றியது மிகவும் நன்றாக இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு அவர் அய்யா இந்த பாடல்கள் கண்ணனை போற்றி பாடும் பாடல்கள் அவனது திருநாமம் சொல்லும் பாடல்கள் என்றார். உடனே சூர்தாசர் நீங்கள் போற்றி பாடிய கண்ணன் எப்படி இருப்பார் என்று கேட்டார். அதற்கு அவர் கண்ணன் சிறு குழந்தை கருநீல நிறம் உடையவன் அவன் புன்னகை முகத்தை பார்த்தால் பரவசம் அடையும் நம் மனது அவன் வசம் போய்விடும் கையில் புல்லாங்குழல் வைத்து இசையால் இந்த உலகத்தை இயங்க செய்பவன் என்று கண்ணனை வர்ணித்து விட்டு அவர் கிளம்பி விட்டார்.

இதை கேட்ட சூர்தாசர் கண்ணனை தன மனக்கண்ணில் பார்க்கலானார் அப்படியே கண்ணனை தன மனதில் நினைத்து பாடினார். பின் தன் வீட்டை விட்டு சென்று ஒரு ஆற்றங்கரையில் மரத்தின் அடியில் அமர்ந்து தினமும் கண்ணனின் வடிவத்தை எண்ணி பல பாடல்கள் பாடலானார். இவரது பாடல்களை கேட்க கூட்டம் கூடியது தினம் அவர் பாடல்களை கேட்கும் மக்கள் கூட்டம் அவர் பசியாற ஏதாவது உணவு பொருள் கொண்டு வந்து கொடுப்பர்கள். அதை அன்போடு ஏற்று கொண்டு சூர்தாசர் கண்ணனின் கீர்த்தனைகளை பாடி வந்தார். ஒரு நாள் துளசி தாசர் என்னும் ராம பக்தர் அங்கே விஜயம் செய்தார். இவர் கம்பரை போல் ராமாயணம் எழுதியவர். அதுவே துளசி ராமாயணம் என்று போற்றபட்டது. சூர்தாசர் இருக்கும் இடத்திற்கு வந்த துளசிதாசர் அவரது கீர்த்தனைகளை கேட்டு தன்னையே மறந்தார். பின் சூர்தாசர் பாடி முடிக்கும் வரை அமைதி காத்த துளசிதாசர் பின் சூர்தாசரை அழைத்து ஆற தழுவி இனி நாம் நண்பர்களா இருந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து கண்ணனின் கீர்த்தனைகளை பாடுவோம் என்றார். இதை சூர்தாசரும் ஏற்று கொண்டு துளசிதாசருடன் அவரது இல்லம் சென்றார்.

தினமும் கண்ணன் கோயிலுக்கு சென்று அவனது கீர்த்தனைகளை பாடி வந்தனர் இருவரும். ஒருநாள் இருவரும் கண்ணன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் எதிரில் ஊர் மக்கள் சில பேர் தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவரை தடுத்து நிறுத்திய துளசிதாசர் அய்யா ஏன் இந்த பதட்ட ஓட்டம் ஏதும் ஆபத்தா என்று கேட்டார். ஓடி வந்தவர் ஆம் அய்யா எதிரே ஒரு மதம் பிடித்த யானை ஒன்று எல்லோரையும் துரத்தி வருகிறது அதன் பிடியில் அகப்பட்டால் மிதித்தே கொன்று விடும் அதான் எல்லோரும் ஓடுகிறோம் நீங்களும் தகுந்த பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார். அப்போது சூர்தாசர் துளசிதாசரை பார்த்து அன்பரே யானை எப்படி இருக்கும் அதற்கு மதம் என்கிறாரே இவர் அப்படி என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு துளசிதாசர் யானை என்பது மிக பெரிய மிருகம் அதற்கு கோபம் என்கிற மதம் பிடித்துவிட்டால் பார்க்கும் யாவையும் மிதித்து அழித்தே விடும் அதான் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள். நம்முள் கண்ணன் இருக்கும்போது நமக்கு என்ன கவலை என்று கூறி கண்ணனை நினைத்து தியானித்து நின்றார் துளசிதாசர்.

மதம் கொண்ட யானை அவர் அருகே வந்து நின்றது. தியானத்தில் இருந்த துளசி தாசரை பார்த்தது பின் அப்படியே பணிந்து வணங்கி அவரை ஆசிர்வதித்து விட்டு வந்த வழியே சாந்தமாக சென்றது. இதை வியப்புடன் பார்த்த மக்கள் துளசிதாசரை வணங்கி நின்றனர். துளசிதாசர் தியானம் கலைந்து கண் திறந்து பார்த்தார். மக்கள் எல்லோரும் அவரை வணங்கி நடந்ததை கூறினார். அதை கேட்ட துளசிதாசர் எல்லாம் கண்ணன் செயல் அவனை வணங்குங்கள் என்று கூறிவிட்டு சூர்தாசரை தேடினார். சூர்தாசர் ஒரு கடையின் மறைவில் இரண்டு கைகளையும் தன் நெஞ்சில் வைத்து நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தார் துளசிதாசர். இப்பொழுது துளசி தாசருக்கு ஒரு சந்தேகம் வந்தது நம்மை போலவே சூர்தாசரும் ஒரு கிருஷ்ண பக்தர் தானே பின் ஏன் யானையை நினைத்து அவர் பயப்படவேண்டும் என்று நினைத்து சூர்தாசரை அழைத்து வந்து தன் சந்தேகத்தை கேட்டார். அதற்கு சூர்தாசர் துளசிதாசரே நீங்கள் மிக பெரிய கிருஷ்ண பக்தர் உங்கள் மனதில் இருக்கும் கண்ணனோ இளமை தேகம் பொருந்தியவன். அதனால் நீங்கள் தியானத்தில் இருந்த போது வந்த யானையை கண்ணன் விரட்டி விடுவான். ஆனால் கண்ணில்லாத குருடனான எனக்கு என் மனக்கண்ணில் உள்ள கண்ணனோ சிறு குழந்தை வடிவானவன் இதுவரை அவனது சிரித்த முகத்தை வைத்தே பல பாடல்கள் பாடியுள்ளேன். யானை மிக பெரிய மிருகம் என்று நீங்கள் சொன்னதால் என் மனதில் உள்ள கண்ணன் சிறு குழந்தையானவன் யானையை பார்த்து பயந்து அழுதுவிட்டால் நான் எப்படி கண்ணனை சமாதானம் செய்வது இதுவரை அவன் சிரித்த முகத்தை நினைத்தே பல பாடல்கள் பாடிய எனக்கு அவன் அழுத முகத்தை கண்டால் என்னால் தாள முடியாது அதனால்தான் என் இரு கைகளையும் என் நெஞ்சில் வைத்து யானையை அவன் பார்ப்பதை மறைத்து கொண்டேன். ஏதும் தவறு இருந்தால் மன்னியுங்கள் என்று பணிந்து நின்றார். இதை கேட்டதும் துளசிதாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. சூர்தாசரே உமது நட்பு கிடைத்தது நான் எத்தனையோ பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனால் கிடைத்திருக்க வேண்டும் மறுபிறப்பு என்று ஒன்று இருந்தாலும் நீங்களே எமது நண்பராக வரவேண்டும் என்று அவரை ஆற தழுவி கோயிலுக்கு அழைத்து சென்றார்.

Image result for சூர்தாசர்

கங்கைகாசியில் குளித்தால் பாவம் போகுமா

பரமசிவனும் பார்வதி தேவியும் ஒரு நாள் காசிக்கு மேல் வான வீதியில் போகும்போது காசியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து குளிப்பதை பார்த்த பார்வதி தேவி பரமசிவனிடம் சுவாமி இங்கே பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து தினமும் பாவம் போகும்னு நம்பி குளிக்கிறாங்க. அப்படியிருக்க இவர்களில் நிறைய பேர் இறந்த பிறகு நரகத்துக்கு வருகின்றார்கள். இவங்க பாவமெல்லாம் போகவில்லையே ஏன் அப்படி என்று கேட்டார்.

அதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த பரமசிவன் தேவி இங்கே வந்து போறவங்க நிறைய பேர் உண்மையில் கங்கையில் குளிப்பது இல்லே. அவர்கள் தங்கறின் உடலை தண்ணியில நனைக்கிறார்கள் அவ்ளோ தான் இதனை உனக்கு விளக்குகிறேன் என்று கூறி பார்வதியை அழைத்துக்கொண்டு காசி படித்துறை அருகே வந்தார் பரமசிவன். இருவரும் ஒரு முதிய தம்பதி போன்ற வேடத்துக்கு மாறினார்கள். கங்கையில் நீராடிவிட்டு வரும் வழியில் உள்ள பாதை ஓரத்தில் உள்ள பெரிய சாக்கடை நீர் நிரம்பிய ஒரு குழியை காட்டிய பரமசிவன், தேவி நான் கீழே காணப்படும் அந்த படுகுழியில் விழுந்துவிடுகிறேன். நீ கூச்சல் போட்டு நான் சொல்வது போல சொல்லி எல்லோரையும் உதவிக்கு கூப்பிடு என்றார். பார்வதி தேவியும் அப்படியே காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என் கணவர் இந்த குழியில் விழுந்துவிட்டார் என்று அபயக்குரல் எழுப்பினார். வயதான மூதாட்டியின் கூக்குரலை கேட்டு அநேகர் ஓடி வந்தார்கள்.

என் கணவர் தள்ளாடியபடி நடந்து வரும்போது இந்த குழியில் விழுந்துவிட்டார். யாராவது இறங்கி சென்று அவரை காப்பாற்றுங்களேன் என்று அழுதபடி கேட்கிறார். என்ன இது இப்போ தானே கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தோம். போயும் போயும் இந்த சாக்கடை குழியில் இறங்குவதா என்று முகம் சுளித்தபடி பலர் சென்றுவிட்டனர். இன்னும் சிலர் இரக்கப்பட்டு வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றனர். ஓரிருவர் உதவ முன்வந்தனர். அவர்கள் குழியில் இறங்க முயற்சித்த போது பார்வதி அவர்களிடம் நில்லுங்கள் எனது கணவர் ஒரு யோகி பாபங்களே செய்யாதவர்கள் தான் என் கணவரை தொட்டு தூக்க வேண்டும். உங்களில் எவருக்கு உங்கள் ஜென்ம கணக்கில் பாவங்கள் இல்லையோ அவர்கள் மட்டுமே இறங்குங்கள் என்று கூறினார்.

அனைவரும் நாங்கள் நிறைய பாவங்கள் செய்திருக்கிறோம். எங்கள் கணக்கில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது எங்களை மன்னித்து கொள்ளுங்கள் தாயே என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இப்படியே பொழுது கழிந்துகொண்டிருக்க காசியில் நீராடிவிட்டு வந்த எவராலும் உதவ முடியவில்லை. கடைசீயில் ஒரு இளைஞன் வந்தான். அவன் பார்வதி கூறியதை கேட்டபிறகும் துணிவுடன் இறங்கினான். நில்லுப்பா நான் சொன்னதை கேட்டாய் அல்லவா உன் கணக்கில் பாவமே இல்லையா என்று கேட்டார். ஆம் தாயே. நேற்றுவரை என் கணக்கில் அனேக பாவங்கள் இருந்தன. ஆனால் நான் தற்போது தான் கங்கையில் புனித நீராடிவிட்டு வருகிறானே. கங்கையில் நீராடினால் பாபங்கள் தொலையும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்படியிருக்க என் கணக்கில் பாவங்கள் இருக்காது என்றான். இறைவன் இறைவியை பார்த்து இப்போது புரிந்ததா தேவி கங்கையில் குளித்தவர்கள் ஏன் நரகத்திற்கு வருகின்றார்கள் என்று புன்முறுவல் செய்கிறார். இளைஞனின் பதிலால் மகிழ்ந்த இறைவனும் இறைவியும் அவனுக்கு தரிசனம் தந்து வாழ்த்திவிட்டு மறைந்தனர்.

கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

விளக்கம்

மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நா-லாறு மாதமாய் அதாவது பத்து மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் செய்து கொடுத்தான். தோண்டி கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்தான்? கண் மண் தெரியாமல் கூத்தாடினான் தோண்டியை போட்டும் உடைத்தான். ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வில்லை. தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி. ஜீவாத்மா இறைவனிடம் வேண்டி பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவளி சித்தர்

மந்திரத்தின் பலன்

செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்த அதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்தார்கள். அவர்கள் பெரியவாளிடம் தங்கள் அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களை எல்லாம் விடாமப் செய்து கொண்டு இருக்கோம். ஆனாஇந்த ஊர்ல பூஜை ஸ்ராத்தம் தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே ஒரே ஒருவர் தான் இருக்கிறார். அவரும் பண்ணி வெக்கும் போது அவர் சொல்ற மந்திரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை. அர்த்தம் தெரியாம பூஜை ஸ்ராத்தம் தர்ப்பணம் பண்றதை எங்கள் வீட்டு பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். பெரியவா தயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும் என்றார்கள்.

அதற்கு பெரியவா பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு என்று அவர் ஆரம்பித்த போது ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு போஸ்ட்மேன் வந்து சில கடிதங்களை கொடுத்து விட்டு சென்றார். பெரியவா அதிலிருந்து ஒரு லெட்டரை எடுத்தார். அதில் பின்கோடு என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி பின்கோடுன்னு போட்டிருக்கே அதோட அர்த்தம் தெரியுமா என்று கேட்டார். அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. கொண்டு வந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.

போஸ்டல் இன்டெக்ஸ் நம்பர் என்று அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டு பின்கோடுன்னு போட்டிருக்கற இடத்தில் சரியான நம்பரை எழுதிட்டா அது சரியா போய்சேர வேண்டிய இடத்துக்கு போய்விடும். அது மாதிரி பூஜை ஸ்ராத்தம் தர்ப்பணம் பண்ணி வெக்கற ப்ரோகிதருக்கு மந்திரங்களோட அர்த்தம் தெரியாவிட்டாலும் பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும் எந்த கர்மாவுக்கு எந்த மந்திரம் சொல்லணுமோ அதை சரியாக சொன்னால் அதுக்குண்டான பலனை அது குடுக்கும். அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். அதுனால இப்போ இருக்கற ப்ரோகிதரை நிறுத்தாம நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை சிரத்தையோட பண்ணிட்டு வாங்க ஒரு குறைவும் வராது கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.

Image result for காஞ்சி பெரியவர்

இறைபக்தி

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அப்போது சிவனும் பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த பார்வதி ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் பார்வதி. அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை வேண்டாம் வா நம் வழியே போகலாம் என சொல்ல ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

வணக்கம் முனிவரே என வணங்கினர் அம்மையும் அப்பனும். முனிவர் நிமிர்ந்து பார்த்தார். எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும் என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார். சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள் வணக்கம் என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர். அம்மை குறிப்புக் காட்ட அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல முனிவர் சிரித்தார். வரமா உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். நான் தைக்கும் போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.
இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும் என்று அம்மை பணிவாய் கேட்கிறார். அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.
முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும் அப்பனும் சிரித்து விட்டு சென்றனர்.

தூய்மையான இறை நம்பிக்கையுடன் சரியாக நடந்துகொண்டால் அதன் விளைவும் சரியாக இருக்கும்.

Image result for sivsn parvathi

உருவ வழிபாடு

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் ஆல்வார் சமஸ்தானத்து அரசனைச் சந்தித்தார். சுவாமி எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. மண்ணையும் மரத்தையும் கல்லையும் கட்டையையும் ஏன் வணங்க வேண்டும் என்று ஏளனக் குரலில் கேட்டார் அங்கிருந்த திவான். இந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல் சுவரில் தொங்கிய ஒரு படத்தை எடுத்து வரும்படி திவானிடம் சொன்னார் விவேகானந்தர்.

படத்தைக் கொண்டு வந்த திவானிடம் இது யாருடைய படம் என்றார். அரசரின் படம் என்றார் திவான். அவரிடம் இந்தப் படத்தின் மேல் எச்சில் துப்புங்கள் என்றார் விவேகானந்தர். அரசரும் திவானும் அதிர்ந்தனர். இது அரசரின் படம்தானே அரசர் இல்லையே. எலும்பும் சதையும் ரத்தமும் இல்லாத வெறும் காகிதப் படத்தின் மீது ஏன் காறி உமிழத் தயங்குகிறீர்கள் இந்தப் படத்தில் அரசரை நீங்கள் தரிசிக்கிறீர்கள். ஆனால் இந்தப் படமே அரசர் இல்லை என்பதை அறிவீர்கள். ஆனாலும் அரசருக்கு உரிய மரியதையை கொடுப்பீர்கள்

மக்களும் அப்படித்தான் மண்ணிலும் கல்லிலும் வெவ்வேறு வடிவங்களில் அவர்கள் கடவுளைக் கண்டு வழிபடுகின்றனர் என்று விளக்கினார் சுவாமி விவேகானந்தர்.

கடவுள் என்ன செய்வார்

ஒரு கோயிலில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. ஆலயக் காப்பாளர் என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே நீ எப்படி உலகத்தைக் காப்பாய் என்று புலம்பி அழுதார்.

அப்போது அங்கே வந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார். நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது அமைதியாய் ஏற்றுக் கொண்ட தெய்வம் இன்னொருவன் எடுத்துக் கொண்டபோது அமைதியாய் விட்டுக் கொடுத்துவிட்டது. உயர்வாக அதை நினைக்கும் நீதான் காப்பாற்றியிருக்க வேண்டுமே தவிர எதையும் பெரிதாக எண்ணாத பரம்பொருள் அல்ல என்றார்.

Image result for ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

விபூதி

நீறில்லா நெற்றி பாழ் என்பது ஓளவை வாக்கு.

விபூதி என்றால் ஞானம் ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். பிறப்பு இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு என்றும் மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு என்றும் போற்றுகிறார் திருஞானசம்பந்தர் தனது திருநீற்றுப் பதிகத்தில்

சைவ சித்தாந்தம் கூறியபடி திருநீறு நான்கு வகைப்படும். அவை கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பன. கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவின் சாணத்தை பிரம்ம மந்திரம் சொல்லி சிவாக்னியில் எரித்து உருவாக்குவது கல்பத் திருநீறு. காடுகளில் மேயும் பசுக்களின் சாணங்களைக் கொண்டு எரித்து செய்வது அணுகல்பத் திருநீறு. தொழுவங்களிலிருந்து எடுத்த சாணத்தைத் தீயில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு. இதுவே நாம் பயன்படுத்தும் திருநீறு. தரையில் விழுந்து கிடக்கும் சாணங்களை எடுத்துத் தயாரிக்கும் திருநீறு அகல்பம். சாம்பலாகிவரும் திருநீறு மும்மலங்களையும் சாம்பலாக்கும் என்கிறது தேவாரம்.

மனித உடலில் நெற்றி ஒரு முக்கியமான ஸ்தானம். புருவ மத்தியை வசியப்படுத்தி பல வகை சித்துகளை செய்ய முடியும் என்பது ஞானியர் வாக்கு. நெற்றியின் மையத்தைக் காப்பதற்கே விபூதி அணியப்படுகிறது. ஆக்ஞா விசுத்தி சக்கரங்களை பாதுகாத்து ஆன்ம ஒளியைப் பெருக்குவது விபூதி. பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டச் செய்யும் நெற்றியைச் சீர்படுத்தவும் சூரியக் கதிர்களின் சக்திகளை நெற்றி வழியாக உள்ளே செலுத்தவும் திருநீறு பயன்படுகிறது. விபூதி சிறந்த கிருமி நாசினி அதனால் பல நோய்களை வராமல் தடுக்க முடியும் விபூதியை ஜபம் மந்திரித்தல் யந்திரங்கள் மருத்துவம் எனப் பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்திய விதத்தை அகத்திய மாமுனி அகத்தியர் பரிபூரணம் என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.

வைகுண்ட ஏகாதசி

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராவது நாள் என்று பொருள் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் மனம் என்ற ஒன்றும் சேர்ந்து மொத்தம் பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். உபவாசம் என்றால் என்ன என்பது பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் கதை ஒன்று உள்ளது.

பிருந்தாவனத்தில் இருந்த கோபியரில் சிலர் மோரும் தயிரும் வெண்ணையும் விற்க காலையிலேயே அக்கரைக்குச் சென்றனர். மாலை திரும்பியபொழுது யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்பெண்களோ யமுனையைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல வேண்டும்.
இவர்கள் வந்திருந்த பகுதியில் பாலம் ஏதும் இல்லை. பாலத்தை அடைய வேண்டுமென்றால் ஊரைச் சுற்றிக்கொண்டு போக வேண்டும். நேரமோ மாலைப் பொழுது. இருட்டிக்கொண்டு வருகிறது. திகைத்த அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கே வியாசர் தவத்தில் இருந்ததைக் கண்டார்கள். வியாசர் உதவக்கூடும் என்று நினைத்து அவரிடம் அபயம் கேட்டார்கள். அவரும் தவம் கலைந்து ஒரு நிபந்தனையுடன் உதவுவதாக வாக்களித்தார்.

கோபியர்களின் பானைகளில் மீதமுள்ள மோர், தயிர், வெண்ணை ஆகியவற்றைச் சாப்பிடக் கேட்டார். மழை காரணமாக ஒன்றும் விற்காததால் மொத்தத்தையும் அவர்கள் வியாசரிடம் கொடுத்தார்கள். அவர் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டார். உண்ட களைப்பு தீரக் கால் நீட்டிப் படுத்துவிட்டார். கோபியர் அவரை எழுப்பி உதவுகிறேன் என்று சொல்லி அனைத்தையும் சாப்பிட்டீர்களே குழந்தைகள் காத்திருப்பார்கள் தயவுசெய்து உதவுங்கள் என்றனர். வியாசரும் நதியின் அருகே சென்றார்.

யமுனையே நான் நித்திய உபவாசி என்றால் விலகி வழி விடு என்றார். கணப் பொழுதில் யமுனை ஆற்று நீர் விலகி வழிவிட்டது. பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் கோபியர் வாய் திறவாமல் அவரைப் பின் தொடர்ந்தனர். பாதுகாப்பாக யமுனையை கடந்ததும் அவரைப் பார்த்துக் கேட்டார்கள். முனிவராக இருந்தும் இப்படிப் பொய் சொல்லலாமா. எங்களிடம் இருந்ததையெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நித்திய உபவாசி என்பது உண்மையானால் என்று யமுனையிடம் கூறினீர்களே. அவளும் உண்மை அறியாமல் வெள்ளம் விலக்கி வழி தந்துவிட்டாளே என்றார்கள்.வியாசர் சிரித்தபடியே, உப என்ற சொல்லுக்கு அருகில் என்று பொருள். வாசம் என்றால் வசிப்பது இருப்பது என்று அர்த்தம். என் மனதார நான் நித்தியமும் கண்ணன் அருகிலேயே இருக்கிறேன். அதனால் நான் நித்திய உபவாசி என்றார்.

வைகுண்ட ஏகாதசியன்று உண்ணாமல், உறங்காமல், கிருஷ்ணரை எண்ணிக்கொண்டு கடைப்பிடிக்கும் விரதத்தை நாம் உபவாசம் என்று அழைக்கிறோம்.