ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அங்குள்ள அந்தணர்கள் ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்துவிடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை என்று முறையிட்டனர். இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார்.
கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது. அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும் எறும்புகளெல்லாம் அந்தச் சர்க்கரையை மொய்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் இறைவனை அடைய வேண்டும் என்ற உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமல் அங்கேயே இருந்து விடுவார்கள் என்று சிரித்தபடி சொன்னார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
ஓர் முனிவரிடம் மூன்று இளைஞர்கள் வந்தனர். முனிவரே உம் சீடராக எங்களை ஏற்க வேண்டும் என்றனர். ஆளுக்கொரு கிளியைக் கொடுத்த முனிவர் யாரும் இல்லாத இடத்திற்குச் சென்று இந்த பறவையைக் கொன்று விட்டு வாருங்கள் என உத்தரவிட்டார். முதல் இளைஞன் கிளியை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றான். ஆளே இல்லாத அந்த காட்டில் கிளியைக் கொன்று விட்டு முனிவரிடம் திரும்பினான். முனிவர் அவனிடம் உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அதனால் உன்னை சீடனாக ஏற்க முடியாது என அனுப்பி விட்டார். இரண்டாவது இளைஞனுக்கு கிளியின் மீது இரக்கம் உண்டானது. கொல்ல மனமின்றி அதைக் காட்டில் உயிரோடு பறக்கவிட்டான். அவனிடம் முனிவர் நீ இரக்கம் கொண்டவன். உனக்கு நல்ல குரு கிடைக்க என் ஆசிகள் என்று திருப்பி அனுப்பினார். மூன்றாவது இளைஞன் எங்கும் சுற்றித் திரிந்தான். எங்கும் இறைவன் நிறைந்து இருக்கிறார். அதனால் இறைவன் இல்லாத இடம் என்று ஒரு இடம் எங்குமில்லை. அதனால் இதைக் கொல்ல முடியாது என்று சொல்லி முனிவரிவிடம் கிளியை ஒப்படைத்தான். அவனைக் குரு சீடனாக ஏற்றுக் கொண்டார். பின் தன் யோகசக்தியால் மற்ற இரண்டு கிளிகளையும் வரவழைத்து அவைகளை சுயரூபத்திற்கு மாற்றினார். கந்தவர்களாக மாறிய கிளிகள் முனிவரை வணங்கிவிட்டு புறப்பட்டனர்.
கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்ற வயதான அந்தணர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு பிருஹத்தபா கூறும் கதையை கேட்க கிளம்பிவிடுவார். தனது வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் கதையை கேட்க தவறியதில்லை. அன்றாட பணிகளை முடிப்பது கதை கேட்பது உணவு தங்க இடம் கேட்டு வருபவர்களை உபசரிப்பது அவரது பணியாக இருந்தது. கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை. அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை.
ஒரு முறை வெகு தொலைவில் இருந்த இரண்டு யாத்திரிகர்கள் கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர். அருகில் இருந்த புண்ணிய தாமாவின் வீட்டிற்கு சென்று வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா என்று கேட்டனர். அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார். இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர். அப்போது அவர்கள் புண்ணியதாமாவிடம் நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா என்று கேட்டனர்.
அதற்கு புண்ணியதாமா நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது என்றார். ஒரு கணம் திகைத்த அந்த யாத்திரிகர்கள் மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும். இவர் அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு சமீபத்தில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம் என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணிய தாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது. இரு யாத்திரிகர்களும் கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர்.
கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது. அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர். ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை. எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே என்று புலம்பத் தொடங்கி விட்டனர். பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும் என்று மனமுருக வேண்டினர். அப்போது அவர்கள் முன் தோன்றிய கங்கா தேவி என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள். மிகவும் பாக்கியசாலியும் புண்ணியவானுமான புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள். இறைவனின் லீலைகள் கதை எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதே போல் இறைவனின் லீலைகள் கதையை தொடர்ந்து கேட்பவர்கள் படிப்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன். நீங்களானால் அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள். அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது என்று கூறி மறைந்து விட்டாள்.
தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக புண்ணியதாமாவிடம் சென்று நடந்தவற்றை கூறி அவரது காலில் விழுந்து தங்கள் தவறை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார். பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர்.
கருத்து
கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாது. இறைவனின் லீலைகளை கதையாக கேட்பது படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்ய முடியும். இறைவனின் லீலைகள் கதையாக எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதனை தொடர்ந்து கேட்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர்கள் ஆகிறார்கள். இறைவனின் லீலைகளை கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும். ஆயிரம் பிரம்மஹத்தி தோஷத்திற்கும் கூட பிராயச்சித்தம் என்பது உண்டு. ஆனால் பகவானின் பக்தனை நிந்திப்பவனுக்கு எந்த பிராயச்சித்தமும் இல்லை.
ஒருமுறை பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர் கங்கையில் நீராட சென்றார். அப்போது கங்கையில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் மாதா கங்கை என் பாவத்தினை போக்கி காத்தருள்க என்று கூறி நீராடினார்கள். இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. பாவம் செய்தவர்களின் பாவங்கள் விடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள் என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார். அந்நேரம் ஒரு பெண் அங்கு வந்து ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்டாள். முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார். இந்த நீர் ஓடி சென்று கடலில் கலக்கிறது. எனவே இந்த பாவங்கள் கடலை சென்று அடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் இந்த கங்கையில் நீராடுங்கள் என்று கூறினாள். முனிவர் அந்த பெண்ணை பார்த்து நீங்கள் சாதாரண பெண்ணாக தெரியவில்லை நீங்கள் யார் என்று கேட்க அதை நீங்கள் போக போக தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி அங்கிருந்து சென்று விட்டாள்.
முனிவர் தன் சந்தேகத்தை தீர்க்க சமுத்திரத்திற்கு செல்வோம் சென்று சமுத்திரத்தை நோக்கி செல்லலானார். அங்கே சென்ற முனிவர் சமுத்திர தேவனை தபம் செய்தார். சமுத்திர தேவனும் அவர் முன் தோன்றி தன் வணக்கத்தை தெரிவித்தார். முனிவர் சமுத்திரத்திற்கு வரும் பாவங்கள் எங்கு செல்கின்றன தன் சந்தேகத்தை அவரிடம் கேட்டார். இதற்கு சமுத்திர தேவன் முனிவரே கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்களால் ஆவியாக மாற்றி இழுத்து கொள்வதால் கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக்கொள்ளவில்லை என்று கூறி சமுத்திர பகவான் மறைந்தார்.
தன் சந்தேகம் தீராத முனிவர் தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சூரிய தேவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். சூரிய பகவானே கடலில் சேரும் பாவங்களை தன் ஒளிக்கதிர்களால் ஈர்த்துக்கொள்ளும் தங்களை அது பாதிப்பதில்லையா என்று கேட்டார். அதற்கு சூரிய பகவான் முனிவரே என் ஒளிக்கதிர்களால் ஆவியாக்கப்படும் பாவங்கள் என் உஷ்ணத்தால் என்னை நெருங்குவதில்லை. இவை மேகங்களாக வானிலே தங்கிவிடுகிறது. உடனே முனிவர் அப்படியென்றால் இந்த பாவங்களின் தாக்கம் என்ன ஆகிறது என்று கேட்க அதை நீங்கள் மேகத்திடமே கேட்டு அறிந்து கொள்ளலாம் என்று கூறி மறைந்தார் சூரிய தேவன்.
முனிவர் மேகத்தை வேண்டி தன் கேள்வியை எழுப்பினார். சூரியனின் ஒளிக்கதிகளால் ஈர்த்தெடுக்கப்பட்ட பாவங்கள் காரிருள் மேகங்களாக வானில் வலம் வருகின்றது. அதன் தாக்கம் அதிகரிக்கும் போது மழை பெய்விக்கப்படுகின்றது. மழையுடன் அந்த பாவங்கள் பூமிக்கே திரும்பவும் அனுப்பப்படுகின்றது. அதை பொறுமையின் தேவதையான பூமியும் ஏற்றுக்கொள்கிறாள். ஆகவே தங்கள் சந்தேகத்தை பூமாதேவியிடமே கேட்டறிந்து கொள்ளுங்கள் என்றது மேகம்.
தன் பிரார்த்தனையை பூமாதேவியிடம் திருப்பினார். முனிவரின் பிரார்த்தனையில் மெச்சிய பூமாதேவி முனிவருக்கு அருளலானார்.
முனிவரே பொறுமைக்கு இலக்கணமாகிய எனக்கு மழை மூலம் என்னை நோக்கி வரும் பாவங்களை ஏற்றுக்கொள்வது என் கடமை. என்றாலும் நான் உட்கொண்ட பாவங்கள் என்னில் தங்குவதில்லை மழைநீர் வழியாக வரும் பாவங்கள் மீண்டும் கங்கைக்கே சென்றுவிடுகிறது என்றாள். முனிவரே இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா. இல்லை பூமி மாதா என்றார் முனிவர். நீங்கள் கங்கை கரைக்கே செல்லுங்கள். அங்கு நீங்கள் முதலில் கண்ட பெண்மணியை சந்தித்தால் முழு விளக்கவும் உங்களுக்கு கிடைக்கும் என்றாள் பூமி மாதா.
இதை கேட்ட முனிவர் மீண்டும் கங்கை கரைக்கே சென்றார். அங்கே அவர் முதலில் கண்ட பெண்மணியை காணலானார். இதை பார்த்த அப்பெண்மணி இப்போது உங்களுக்கு என்ன சந்தேகம் என்று கேட்க நீங்கள் வெறும் சாதாரண பெண்மணி இல்லை என்று நான் அறிகிறேன் தாங்கள் யார் என்பதை எனக்கு உணர்த்தியருளுங்கள் என்று முனிவர் கேட்க தன் சுயரூபத்தை காண்பித்து நான் தான் கங்காதேவி என்று முனிவருக்கு அருளினார். இதனால் மகிழ்ச்சியுற்ற முனிவர் மாதா மனிதர்கள் செய்யும் பாவங்கள் சுழன்று சுழன்று மீண்டும் கங்கையை வந்தடைகிறது. மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களை செய்து கங்கையில் கரைப்பதால் கங்காநதியில் பாவத்தின் பாரம் அதிகமாகி கொண்டே செல்லுமல்லவா என்று கேட்டார். முனிவரே இந்த சந்தேகம் ஒருமுறை எனக்கும் வந்தது அந்நேரம் நான் சிவபெருமானை வேண்டி என் சந்தேகத்தை முன் வைத்தேன். அதற்கு சிவபெருமான் தேவி கங்கையில் பாவம் செய்தவர்கள் மட்டுமே நீராடுவதில்லை. பூமியில் புண்ணியாத்மாக்களும் உண்டு என்பதை அறிந்து கொள்ளவும். அங்ஙனம் புண்ணியம் செய்தவர்கள் கங்கையில் நீராடும் போது கங்கையில் பெருகிவரும் பாவங்களின் ஒரு பாகம் அந்த புண்ணியாத்மாவின் புண்ணியத்திற்கேற்ப எரிந்து நாசமாகிறது என்றார். முனிவரே இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா என்று கங்காதேவி கேட்க ஆம் என்றார் முனிவர். அதனால் தான் தங்களை நீராடுமாறு கேட்டுக்கொண்டேன் என்று தேவி கூற. நிச்சயமாக செய்கிறேன் என்று கூறி முனிவர் நீராட சென்றார்.
மாணவன்- உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா?
ஆசிரியர்- ஆமாம்.
மாணவன்- அப்படியெனில் சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
ஆசிரியர்- உன்னிடம் சில கேள்விகள் கேட்கின்றேன் பதில் சொல். குளிர்நிலை என்று ஏதேனும் இருக்கிறதா?
மாணவன்- ஆமாம் இருக்கிறது.
ஆசிரியர்- குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். சரி தானே
மாணவன்- ஆமாம்
ஆசிரியர்- இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
மாணவன்- ஆம் இருக்கிறது.
ஆசிரியர்- மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் குளிரும் இருளும் எங்கும் உருவாகுவதில்லை. வெப்பம் இல்லாத இடத்தை குளிர் என்றும் ஒளி இல்லாத இடத்தை இருள் என்றும் அழைக்கின்றோம். அதே போல் சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் நம்பிக்கையின் பற்றாக்குறை. கடவுள் மீது எங்கு நம்பிக்கை இல்லையோ அன்பு இல்லையோ அந்த வெற்றிடமே சாத்தான் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு நாள் அக்பர் அரசவையில் இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா என்று அக்பர் பீர்பாலிடம் கேட்டார். அதற்கு பீர்பால் அரசே அவருக்கு ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் என்று பதில் அளித்தார். ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும் என்று கேள்வி கேட்டார். இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். அதை பார்த்ததும் அக்பருக்கு பீர்பால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைந்தார்.
ஒரிரு நாட்கள் சென்றன. அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டிவிட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார். பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிந்தாய். என்னால நம்பவே முடிலவில்லை. என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும் என்றார் கோபமாக. பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரியனும் என்பதற்காக அப்படி செய்தேன் அரசே என்றார். அக்பர் பீர்பாலே என்ன விளையாடுறியா நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம்
பீர்பால் அரசே என்னை மன்னியுங்கள். நீங்க அன்று ஒரு நாள் உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்றணுமான்னு கேட்டிங்களே. சிறிது யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிற்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து அப்படி இல்லை பீர்பால் என் பேரன் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கின்றேன். நீங்கள் திடிரென்று தண்ணீர்ல அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார்
பீர்பால் புன்னகையுடன் அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே ஒரு குழந்தை மீது இவ்வளவு அன்பு இருக்கும் போது அண்ட சாகசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு தன்னை நம்பும் உயிர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கும் ஆகையால் தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார். அக்பர் இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் உங்கள் கடவுள் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.
குழந்தையை அழும் போது தூங்க வைக்க இரண்டு வழிகள் உண்டு. ஒன்று அழு என்று விட்டு விட்டால் குழந்தை அழுது அழுது தானாகவே தூங்கிவிடும். இரண்டாவது தூளியில் போட்டு பாட்டுப் பாடி கொஞ்சி தூங்கவைப்பது.
தியானத்தில் அமரும் போது மனது எங்கெங்கோ எப்படி எப்படியோ அலைந்து அலைந்து எப்போது அடங்குமோ அப்போது தானே அடங்கட்டும் என்று விட்டு விட வேண்டும். அழுது அழுது ஓர் நேரத்தில் குழந்தை தூங்கிவிடும். அது போல் மனதில் அலையும் எண்ணங்கள் தானகவே ஒடுங்கி அடங்கி விடும். தியானம் செய்பவர்களின் வைராக்யத்தை பொறுத்து இதற்கு சில வாரங்களோ சில மாதங்களோ ஆகலாம்.
மந்திரம் ஜபம் தியானத்தில் லயித்து ஆடும் மனதை அடக்கி ஆழ்நிலைக்குக் கொண்டு செல்வது பாட்டுப்பாடி தூங்க வைப்பதற்குச் சமம்.
தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறவர்கள் ஒரு நிலைக்குப் போகிறபோது ஒரு தாமரை மலரில் அவர்களுடைய குருநாதர் உருவம் தெரியும். அதற்குப்பிறகு அவர்கள் தங்களையே பார்த்துக்கொள்ள முடியும். அதற்கு சாயா புருஷ லக்ஷணம் என்று பெயர். அந்த பாவனைகள் பெற்றவர்களுக்கு தியானத்தின் வழியாக ஞானம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம். தாங்களும் தெய்வ வடிவம்தான் என்பதைத் தாங்களாகவே புரிந்து கொள்வார்கள்.
மனித வாழ்வையும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் அதனில் பல விஷயங்களையும் அள்ளித் தருவது வேதாந்தம். வேதாந்தம் எனப்படும் தத்துவம் உபநிடதங்களின் சாரம். வேதங்களின் அந்தமாக விளங்கும் உபநிடதங்கள் இந்தப் பிரபஞ்சம் குறித்தும் அதன் ஆதாரம் குறித்தும் தேடலை மேற்கொள்கின்றன. இந்தத் தேடலில் பல்வேறு தத்துவங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆத்மா பிரம்மம் ஆகிய விஷயங்கள் பற்றியும் உபநிடதங்கள் ஆழமாகப் பேசுகின்றன. உபநிடதங்கள் நம் உடலைப் பலவாறாகப் பகுக்கின்றன. மனித உடலை ஐந்து கோசங்களாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி தைத்ரிய உபநிடதத்தில் வருகிறது. பஞ்ச கோசங்கள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கோசம் என்றால் உறை பஞ்ச என்றால் ஐந்து. அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகியவையே இந்த கோசங்கள்.
அன்னமய கோசம்
நம் ஸ்தூல உடல் அன்னம் அதாவது உணவால் தோன்றி உணவால் வளர்ந்து உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிறது. இதுவே அன்னமய கோசம் எனப்படுகிறது. உடலுக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை இது உணர்த்துகிறது.
பிராணமய கோசம்
காற்று உடலின் உள்ளும் வெளியிலும் இருக்கிறது. உடலுக்குள் இது மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான உள் உறுப்புகள் அவற்றின் இயக்கங்கள் ஆகியவை பிராணமய கோசம் என வகைப்படுத்தப்படுகின்றன.
மனோமய கோசம்
உணர்ச்சிகள் உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம் அதன் பல்வேறு அடுக்குகள் செயல்பாடுகள் ஆகியவை மனோமய கோசம் எனப்படும்.
விஞ்ஞானமய கோசம்
எது சரி எது தவறு எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது எது உண்மை எது பொய் எது நிலைக்காது எது நிலைக்கும் இது போன்ற தர்க்க ரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் மேற்கொள்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறை விஞ்ஞானமய கோசம் எனப்படும்.
ஆனந்தமய கோசம்
ஆனந்தமய கோசம் என்பது இந்த நான்கு அடுக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் நிலை. இந்த நிலையை உணர்வதும் அடைவதும் ஆன்மிகத்தின் லட்சியம் என்று சொல்லலாம்.
மனித வாழ்வு என்பது இவை ஐந்தையும் உள்ளடக்கியது. ஐந்தாவது கோசம் நம் புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணரவும் அறியவும் முடியும். ஒவ்வொருவரும் உடல் மனம் அறிவு இதில் ஏதேனும் ஒன்றுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு மாறாக இவை ஒவ்வொன்றும் ஒரே உடலின் ஒரே வாழ்வின் வெவ்வேறு அடுக்குகளாக இருப்பதை உணர்ந்தால் நம்மை நாமே அறிந்து கொள்ளலாம். தைத்ரிய உபநிடதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரம்மம் என்று முதலில் உணரப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிரணனே பிரம்மம், மனமே பிரம்மம், விஞ்ஞானமே பிரம்மம் என்று உணரப்படும். கடைசியில் ஆனந்தமே பிரம்மம் என உணரலாம்.
பருந்து ஒன்று வாயில் மீனைக் கொத்திக்கொண்டு பறந்தது. நூற்றுக்கணக்கான காகங்கள் கா கா என கரைந்தவாறு அதைச் சூழ்ந்து கொண்டு பருந்தை அமளி துமளி செய்தன. பருந்து எங்கு பறந்தாலும் காகங்களும் சுற்றிச் சுற்றி வந்தன. ஓர் கட்டத்தில் பருந்து தன் வாயில் இருந்த மீனை கீழே விட்டது. அவ்வளவு தான் காகங்கள் மீன் விழுந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து பருந்தை விட்டுவிட்டன. இதுவே ஆன்மீகம்
ஆசை மீன்கள் எதுவரை நம்மிடம் இருக்குமோ அதுவரை உலக விகாரங்களுடன் கவலை துன்பம் அமைதியின்மை ஆகியவையும் கூடவே நம்முடன் வரும். ஆசை மீன்களை விட்டுவிட்டால் அமைதி தானாக வரும்.