நம: பார்வதி பதயே

சிவன் கோயில்களில் நம: பார்வதிபதயே என ஒருவர் சொல்ல ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வார்கள். இதன் பொருள் என்ன?

பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தந்தை. தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் அவருக்கு மகாதேவன் என்று பெயர்.

பூலோகத்தில் உமாதேவியிடம் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் இறைவனை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தார். இவர் ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷமத்தைக் கேட்டதும் உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாக அழிந்து விட்டது. அதாவது உலகத்தில் துயரமே இல்லாமல் போனது. என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும் உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும் என்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடினார். அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே என்றார் திருஞானசம்பந்தர். அரன் என்றால் சிவன். சிவ நாமம் உலகம் முழுவதும் சூழ துயர்கள் அனைத்தும் தீரும்.

நம: பார்வதீபதயே என்று ஒரு பெரியவர் சொல்ல உடனே அனைவரும் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரியே பக்தியோடு அம்மையப்பனைத் துதித்து ஹர ஹர மகாதேவா என்று சொன்னால் அனைத்து தீயவைகளும் அழிந்து போகும்.

Image result for நம: பார்வதி பதயே"

நம்பிக்கை

ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான். காலங்கள் கடந்தும் சிவனின் தரிசனம் கிடைக்கவில்லை. அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை.

கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான். சிவன் சிலையை தூக்கி பரண் மேல் வைத்து விட்டு புதிய விஷ்ணு சிலையை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி ஊதுவத்தி ஏற்றினான். நறுமணம் அறை முழுவதும் பரவியது. நறுமணத்தை உணர்ந்த அவன் பரண் மீது ஏறி சிவன் சிலையின் மூக்கை துணியால் கட்டினான். சிவன் அந்த நறுமணத்தை நுகரலாகாது என எண்ணி கட்டிய அடுத்த நொடி சிவன் அவன் கண்முன் தரிசனம் தந்தார்.

வியந்து போன அவன் சிவனிடம் கேட்டான். இத்தனை நாட்கள் உன்னை பூஜித்த போது காட்சியளிக்காத நீ இப்பொழுது காட்சி தருவது ஏன்? பக்தா இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் சிலையாக நினைத்தாய். இன்று தான் இந்த சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். உணர்ந்த அந்த நொடி நான் உன் கண் முன் வந்து விட்டேன் என இறைவன் பதிலளித்தார்.

Image result for சிவபக்தன்"

இறைவனின் மகிழ்ச்சி

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வாருமாறு கூறினார். வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன். நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி என்றார். திடுக்கிட்ட பண்ணையார் இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன் என்றார். இறைவன் எமக்கு வந்த ஒரு பழத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன் என்றார். விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா என்றார். அவன் ஆம் என்றான். பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார். உண்மையைச் சொல் இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன் எனறார். அவன் உண்மையைச் சொல்லி விடுகிறேன் வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான் நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன் மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன் என்றான். பண்ணையாருக்குப் புரிந்து விட்டது. கோயிலுக்குக் கொடுத்த 99 பழத்தை விட ஏழைக்குக் கொடுத்த ஒரு பழமே இறைவனைக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது.

பசியோடு இருப்பவரின் பசியை தீர்க்காமல் கோவிலுக்கு எவ்வளவு கொடுத்தாலும் இறைவனுக்கு மகிழ்ச்சி இல்லை.

அன்புக்கும் நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டவன் பெருமாள்

ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும்போது அக்பர் கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா? அதற்கு பீர்பால் அரசே அவருக்கு ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள் என்றார். அக்பர் இல்லை ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றி இருக்கலாமே? அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?

இதற்க்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார் அதை பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தோசம் பீர்பாலே பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று. ஒரிரு நாட்கள் சென்றன. அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டிவிட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார். பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிஞ்ச என்னால நம்பவே முடிலயே சொல்லும் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக.

பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரியனும் என்பதற்காக அப்படி செஞ்சேன் அரசே என்றார். அக்பர் பீர்பாலே என்ன விளையாடுறியா நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம். பீர்பால் அரசே மன்னித்துக்கொள்க நீங்க அன்று ஒரு நாள் உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்றணுமான்னு கேட்டிங்களே ஞாபகம் இருக்கா உங்களுக்கு? அக்பர் ஆமாம் அதுக்கும் இன்று நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் என்ன சம்மந்தம்? பீர்பால் அரசே கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிற்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே? எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து அப்படி இல்லை பீர்பால் என் பேரன் மேல் அளவு கடந்த பாசம் வச்சுருக்கேன்னு உனக்கு தெரியும். நீர் திடிர்னு தண்ணீர்ல அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார்.

பீர்பால் புன்னகையுடன் அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவளோ பாசம் இருக்கும் போது அண்ட சாகசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவளோ பாசம் இருக்கும் உயிர்கள் மேல். அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று. நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார். அக்பர் இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் உங்கள் கடவுள் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் நெகிழ்ச்சியாக

அன்புக்கும் நம்புபவர்களுக்கும் பகவான் கட்டுண்டவன் கூப்பிட்ட குரலுக்கு தானை வந்து உதவுவான்.

பாத நமஸ்காரம்

நாம் யார் காலிலோ விழுந்து வணங்குவது அல்ல பாத நமஸ்காரம். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற பாதத்தை பகவானுடைய தொண்டிற்கு உபயோகப்படுத்தினால் அதற்கு பாத நமஸ்காரம் செய்கிறாய் என்று அர்த்தம். சுவாமி காலில் விழுந்து சுவாமிக்கு என்ன ஆகணும்? உலகத்தில் சுவாமியின் பாதம் இல்லாத இடமே இல்லை. உலகம் பூரா சுவாமியின் கண், கைதான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சுவாமியின் திருப்பாதங்கள், எங்கு பார்த்தாலும் சுவாமியின் திருக்கரங்கள். சுவாமி கொடுத்திருக்கிற கண்களைக் கொண்டு அனைத்தையும் கடவுளைப் பார்க்க வேண்டும். காதுகளை வைத்துக் கொண்டு கேட்கும் அனைத்தையும் கடவுளுடைய வாசகங்களாகக் கேட்கவேண்டும். கால்களை வைத்துக்கொண்டு நிறைய கோவில்கள் பாத யாத்திரை செல்லவேண்டும். தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும். நம்முடைய பாதங்களை நாம் அவனுக்கு வழிபாடாக பயன்படுத்துகிற நன்றிக்கடன் இருக்கிறதே அதுதான் உண்மையான பாத நமஸ்காரம்.

சாமியாரும் குரங்கும் வாரியார் சொன்ன கதை

ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார். குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது. உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. திரும்பவும் தலையில் அடித்தார். அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது. நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை.

சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார். சாமியார் எதுவும் பேசவில்லை. சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார். சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது. காதைப் பிடித்து இழுத்தது. தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது. சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது. உடனே சாமியார் நண்பர் ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை அடி போடுங்கள் என்றார் நண்பர். உடனே சாமியார் பிரம்பை எடுத்துக் குரங்கின் தலையில் அடித்தார். அது போய் ஒரு மூலையில் அமைதியாக இருந்தது.

அப்போது சாமியார் சொன்னார் இந்தக் குரங்கைப் போலத் தான் மனித மனங்களும் நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று சும்மா விட்டு விடக் கூடாது. தேவாரம், திருவாசகம், தியானம், தவம், விரதங்கள் என்னும் பிரம்புகளால் மனதை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சற்று மனதிற்கு ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் என்றார்.

சுய அனுபவமே உண்மையானது

ஸ்ரீ ரமண மகரிஷியின் குட்டி கதை

ஒரு இளம் சன்னியாசி ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கியிருந்து துறவறம் பற்றி அறிந்து கொள்ள முயன்று வந்தார். ஆனால் அந்த குருவோ எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வார். அவர் சொல்வதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்காது.
இதனால் மனம்வெறுத்த அந்த துறவி அங்கிருந்து வெளியேறமுடிவு செய்தார். அவர் வெளியேறும் முன்பாக அங்கு ஒரு நிகழ்வு நடந்தது. அதன் பிறகு அந்த துறவி அங்கிருந்து வெளியேறவேயில்லை.

அன்றைய தினம் மற்றொரு இளம் துறவி அந்த ஆசிரமத்திற்கு வந்தார். அங்கிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்த அவர் பல்வேறு ஆழமான கருத்துக்களை பேசினார். ஆன்மீகத்தின் பல கோணங்களை ஆராய்ந்து ஏறக்குறைய 2 மணிநேரம் பேசினார். அந்த ஆசிரமத்தின் குரு கண்களை மூடியவாறு அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சைக் கேட்ட இளம் துறவி குரு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவருடன் சென்று விட முடிவு செய்தார். அவரது பேச்சைக் கேட்ட அனைவரும் அவரைப் பாராட்டினார்கள்.

பேசி முடித்த அந்த புதிய துறவி அருகேயிருந்த குருவிடம் தனது பேச்சு எப்படி இருந்தது என்று சிறிது கர்வத்துடன் கேட்டார். கண் விழித்த அந்த குரு நீ எப்போது பேசினாய்? நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் 2 மணிநேரமாக நீ பேசாமல் அமர்ந்து கொண்டு தானே இருந்தாய் என்றார். அப்படியென்றால் இதுவரை பேசியது யார் என்று அந்த புதிய துறவி கேட்டார். சாஸ்திரங்கள் பேசின நீ படித்த புத்தகங்கள்
பேசின நீ உன் சுய அனுபவத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று குரு சொன்னார்.

இப்படித்தான் பலரும் தாங்கள் மற்றவரிடமிருந்து கேட்ட கற்ற விஷயங்களை பேசி வருகின்றனர். சுய அனுபவத்தைப் பேசுவதில்லை. சுய அனுபவமே உண்மையானது.

மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம்.

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில் வரும் மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம்.

த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்
உர்வாருகமிவ
பந்தனாத் ம்ருத்யோர்
முக்க்ஷீய மாம்ருதாத்.

இதில் உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய என்ற வரிகளின் அர்த்தம் வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவது போல என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும் என்பது அர்த்தம். எந்தப் பழமாயிருந்தாலும் பழுத்தவுடன் பட்டென்று தன் கொடி செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும். பூமியில் நிறைய பழங்கள் இருக்கின்றது. இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான விளக்கத்தை மஹா பெரியவா அற்புதமாக அளித்துள்ளார்.

மற்ற பழங்கள் போல் அல்லாமல் வெள்ளரிப் பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும். வெள்ளரிக்கொடி தரையோடு தரையாய்ப் படரும். அதனால் வெள்ளரிப் பழமும் தரையிலேயே பழுத்துக்கிடக்கும். அது பழுத்தவுடன் அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள் இலைகள் போன்றவை தானாகவே அந்தப் பழத்தை விட்டு விலகும். பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.

அதுபோல ஞானிகளுக்கு அவர்கள் பந்தம் பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில் அவர்கள் ஞானத்தை அடைந்துவிட்டால் இவர் பழுத்து விட்டார் என்று எப்படி வெள்ளரிக் கொடி தன் பழத்தை தானகவே விட்டு விலகுகிறதோ அது போல பந்தம் பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே விலகி விடும்.

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன். ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது. மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது. சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான். இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை. பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன் அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல் தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்?

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும் என்றான். சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான். அதே நாட்டில் நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலை நீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. அவள் அந்த அந்தணர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது என்றும் சொன்னாள். அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசக்கூடாது.

வன்னிமரம்

வன்னிமரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று தலபராணம் சொல்கிறது. எப்படி என்றால் அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது தங்கமாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது.

Image may contain: tree and outdoor