தர்மம்

ஒரு குடும்பம் காசிக்குச் சென்று அங்கேயே தங்க நேரிடுகிறது. வேதம் ஓதுவதும் குழந்தைகளுக்கு தர்மத்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். தன் ஒரே மகளை நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள். மகள் வளர இவளுக்கு ஒரு திருமணத்தை செய்ய எண்ணுகிறார். மகளோ பிடிவாதமாக நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம் காசி விஸ்வநாதர் மீது ஆணை என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி ஒதுங்கி விடுகிறாள்.

தந்தை போதித்தவற்றை செயல்படுத்தினால் என்ன என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே பல ஊர்களில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும் உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க காலம் செல்லச் செல்ல இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார் என்று அறிந்து பலர் மருத்துவ உதவி கல்வி உதவி வேண்டும் என்று கேட்க இவளும் செய்து கொண்டே வருகிறாள். அந்தக் காசி மாநகரம் முழுவதும் இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து ஒரு கட்டத்தில் வறுமை இவளை சூழ்ந்து கொண்டது. இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க வேறு வழியில்லாமல் அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி இறைவா நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால் என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும் கடனை திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்று மனம் உருகி இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.

ஒரு நாள் ஒரு பழுத்த மகான் இவளைத் தேடி வருகிறார். மகளே கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார் அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும் என்று அந்த மகான் கூறுகிறார். எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும் துறவி கூறியதால் அன்று மாலை அந்த செல்வந்தர் இல்லத்திற்குச் செல்கிறாள்.

அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே பெண்ணே உனக்கு என்ன வேண்டும் எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய் என்று செல்வந்தன் கேட்க இவள் தயங்கி ஒரு துறவி தான் தன்னை இங்கு அனுப்பினார் என்றும் தனக்கு ஏற்பட்டுள்ள கடன் மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. நீங்கள் ஐந்து லட்சம் தந்தால் காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது பணி செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன் என்றாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். தர முடியாது என்றால் நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணி அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.

உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும் நீர்த்தடங்களை அமைப்பதும் கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி தர்மம் செய்தாய்? நீயே நடு வீதிக்கு வந்து விட்டாய். எப்படி உன்னால் என்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியும்? அடுத்ததாக நான் கடன் கொடுத்தால் அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது என்று அந்த செல்வந்தர் கேட்கிறார்.

இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி அய்யா நீங்கள் கூறுவது உண்மைதான். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள் என்று கேட்கிறாள். மன்னித்து விடு பெண்ணே அடமானம் இல்லாமல் நான் எதுவும் தருவதற்கு இல்லை என்று செல்வந்தர் கூற அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு அய்யா உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நான் ஆங்காங்கே பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட அடியேன் கட்டியது தான். இந்த நீரை தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இந்தத் திருக்குளத்திலே நாளை காலை சூரிய உதயத்தில் இருந்து யாரெல்லாம் நீர் பருகிறார்களோ அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன்.

ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல் வட்டிக்கு சமமான புண்ணியம் எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன் என்றாள். செல்வந்தர் பெண்ணே புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து புண்ணியம் என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்கிறார். அய்யா அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள் என்று அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி எம்பிரானே அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும் கடனிலிருந்து தப்பிக்க இந்த அபவாதத்தை செய்கிறேன். ஈசனே இந்த திருக்குளத்தின் அடியில் நீ இருக்க வேண்டும். எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து அசலும் வட்டியுமான புண்ணியம் இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும் ஈஸ்வரா என்று கூறி பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி அடியவர்களின் துணை கொண்டு அந்த சிவலிங்கத்தை தூக்கி திருக்குளத்தின் நடுவே இடுகிறாள்.

சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு அந்த செல்வந்தரைப் பார்த்து அய்யா நீரின் உள்ளே இருப்பது வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சிவபெருமான் தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ அப்பொழுதே இந்த சிவலிங்கம் மேலே வந்து மிதக்கும் என்று கூறுகிறாள். அம்மா சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே என்றார். இளம் பெண்ணோ நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும் என்றாள்.

செல்வந்தர் யோசிக்கிறார். இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து பணம் தர மாட்டேன் என்றால் நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால் இவள் புண்ணியவதி என்பதை நானும் ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால் இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும் என்று எண்ணி அவள் கேட்ட தொகையைத் தருகிறார். அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார் யாருக்கு தர வேண்டுமோ அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு இறைவா உன்னை நம்பித்தான் இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே என்று வேண்டிக் கொண்டு நிம்மதியாக சிவனை நினைத்து உறங்கச் செல்கிறாள்.

செல்வந்தர் காலையில் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன? என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து விட்டு வீட்டில் அமர்ந்து கொண்டு குளக்கரையை பார்வையிட துவங்குகிறார். முதலில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று குளத்து நீரை அருந்தி விட்டு மறுபக்கம் செல்கிறது. அவ்வளவுதான். குபுகுபுவென தூப தீப சாம்பிராணி சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு உடுக்கை ஒலிக்க சிவலிங்கம் மேலே வந்து மிதக்கிறார். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி நிலைகுழைந்து விட்டார். ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால் அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால் என் செல்வம் அத்தனையும் வீண் என்பதை புரிந்து கொண்டு என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே செல்வம் தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள். என்று கூற ஊரே சென்று பார்த்தது. அதன் பிறகு தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு தானும் கடைசிவரை தர்மம் செய்து வாழ்ந்தார்.

This image has an empty alt attribute; its file name is Untitled-4-660x320.jpg

சுழலும் லிங்கம்

ஒருசமயம் அவ்வைப்பிராட்டி சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால் களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. அவ்வையிடம் வந்த பார்வதி அவ்வையே உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார். அம்பிகையிடம் தாயே என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள் அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன் என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது.

இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது. இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல இருக்கும் என்பது தான் அதிசயம். கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும். மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால் அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.

இல்லறம் நல்லறம்

செல்வந்தன் ஒருவன் தன் மாளிகையில் உறவுகளை எல்லாம் உதறிவிட்டு தாசிப் பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். அவ்வழியே வந்த ஞானி அவனை எதிரில் சந்தித்தார். ஞானி செல்வந்தரிடம் உனது மனைவி மக்கள் உறவுகள் அனைவரையும் விட்டு இங்கு ஏன் இருக்கிறாய் என கேட்டார் சுவாமி என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளமாக உள்ளது. உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை எனப் பெருமையடித்துக் கொண்டான்.

புன்சிரிப்போடு அதைக் கேட்ட ஞானி வா சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம் என்றார். கடுமையான வெயிலில் போக வேண்டுமா என தயங்கினாலும் ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான். சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன் ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்படவில்லை. ஞானி கேட்டார் என்ன தேடுகிறாய்? நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா எனப் பார்த்தேன். ஏன் உன் நிழல் உள்ளதே அதில் நீ ஒதுங்கிக்கலாமே? சுவாமி என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்? என்னப்பா இது நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை உன் செல்வங்களே உன்னைக் காப்பாற்றும் என்று சற்று முன்புதானே கூறினாய்? இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே? என்றார். ஏராளமான செல்வம் இருக்குன்னு கர்வத்தில் யாரையும் உதாசினபடுத்தாதே. இருக்கும் பொழதும் இறக்கும் பொழுதும் நம் நலம் விரும்பிகள் நாலு பேர் நிச்சயம் நமக்கு தேவை. வெறும் செல்வத்தால் மட்டும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. உறவுகளையும் நல்ல நட்புகளையும் மதித்து இணைத்து வாழ கற்றுக்கொள் என்றார். செல்வந்தன் உண்மையை உணர்ந்தான். மனைவி மக்களுடன் இணைந்தான்.

Image result for ஞானி செல்வந்தன்

முக்தி

நாரதர் மிகப்பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒரு நாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதர் அந்த வழியாகப் போவதைப் பார்த்ததும் நாரதரிடம் எங்கே செல்கிறீர்கள் என்றான். நான் சொர்கத்திற்குச் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால் ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான் அவன். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே எங்கே செல்கிறீர் என்று கேட்டான். நாரதரோ நான் சொர்கத்திற்குச் செல்கிறேன் என்றார். அப்படியானால் ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும் என்று அவனும் கேட்டுக்கொண்டான். நாரதர் சென்றுவிட்டார்.

சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன், நாரதரே என்னைப் பற்றி பகவானிடம் கேட்டீரா என்றான். ஆம் என்றார் நாரதர். பகவான் என்ன சொன்னார் என்று கேட்டான் அவன். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா எல்லாம் வீணாகிப் போனதே என்று கூறி புற்றை உடைத்து எழுந்து சென்றுவிட்டான். நாரதர் அடுத்த மனிதனிடம் சென்றார். பகவானிடம் கேட்டீரா நாரதரே என்றான் அவன். ஆம் கேட்டேன் அந்தப் புளியமரத்தைப் பார் அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான் என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே என்று கூறினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது மகனே இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது. அவனது விடா முயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது. அத்தனைப் பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. அந்த வைராக்கியமே அவனை முக்திக்கு அழைத்துச் சென்றது. தினம் கடவுளை வணங்குவேன் எத்தனை துயர் வந்தாலும் கடவுளை நாம ஜபம் செய்யாமல் இருக்க மாட்டேன். கோவிலுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன் என வைராக்கியத்தோடு ஆண்டவனிடம் சரண் அடைய வேண்டும்.

ராவணன் கேட்ட தட்சணை

ராமனின் பாதம் பட காத்திருந்த சேது பாலத்தை துவக்கி வைக்க சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், வேண்டியனவற்றை தயார் செய்ய பணித்தார். ராமனின் விருப்பமறிந்த ஜாம்பவான் இத்தகைய சேதுவை துவக்கி சிவ பூஜை செய்து வைக்க மிகச்சிறந்த பண்டிதர் அவசியம் என்றுரைத்தார். அப்படி யாரேனும் அருகே உள்ளனரா என்ற ராமனின் கேள்விக்கு ராவணன் ஒருவனே என்று தயக்கத்துடன் பதிலளித்தார் ஜாம்பவான். பதிலைக் கேட்ட ராமனின் பிறகென்ன நமது வேண்டுகோளுடன் அனுமனை அனுப்புங்கள். இப்பூஜையை சிறப்புற நடத்தி தர அப்பண்டிதரையே வேண்டி வரவழைத்து வாருங்கள் என்றார்.

விரோதியின் தேசத்தை அடையும் வழிக்கு அவனை வைத்தே பூஜையா? இது நடக்குமா!? அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் சுக்ரீவனும் அவனின் சேனைகளும் ராமனின் விருப்பமறிந்த வாயு மைந்தன் இமைப்பொழுதில் இலங்கை அரண்மனையில் நின்றார் அஞ்சனை மைந்தன். அரக்கர்கள் சூழ்ந்தனர், அரக்கர்களே சண்டையிட வரவில்லை. நான் சிவ பூஜை செய்து வைக்க உத்தமமான சிவ பக்தன் ராவணனை நாடி வந்துள்ளேன். தன் முன்னால் நிற்கும் அனுமனின் கோரிக்கையை கேட்டு வியந்தது ராவணனோடு அவனது சபையும் இது சூழ்ச்சி என்றனர் சபையோர். சூழ்ச்சியால் தங்களை வெல்ல இயலுமோ? தயை கூர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார் அனுமன். அச்சமும் ஆவேசமும் திகைப்பும் கூடி எழுந்து நின்று அனுமனை நோக்கி கூச்சலிட்டவர்களை கையமரச்செய்து இந்த வேள்வியை நடத்தித்தர ஒப்புக் கொண்டான் சிறந்த சிவ பக்தனான ராவணன்.

பூஜை நடத்தி தர வந்த ராவணன் ராமரைப் பார்த்து சங்கு சக்கரங்கள் மட்டும் இவனது கரங்களில் இருந்தால் விஷ்ணுவாகத்தான் இவன் தோன்றுவான் என ராவணனும் எண்ணினர். பூஜை ஏற்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் பகிரவும் என்ற ராமனின் கோரிக்கைக்கு தசரத மைந்தா ஏற்பாடுகள் நேர்த்தியாக உள்ளது. ஆனால் துணைவியின்று கிரஹஸ்த்தன் செய்யும் எந்தக் காரியத்தையும் சாஸ்திரங்கள் அங்கீகரிப்பதில்லை என்று பதிலளித்தார் இலங்கேஸ்வரன். தாங்கள்தான் வேள்வியை சிறிதும் குறைவின்றி நடத்தி தர வேண்டும் என்றார் ராமன். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த ராவணன் பூஜைக்காக சீதாவை பூஜை முடியும் வரை உங்கள் இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் கூடாது. மேலும் பூஜை முடிந்த மறுகணமே சீதையை அழைத்து சென்று விடுவேன் என்ற நிபந்தனையுடன் வரவழைத்தார். இப்பூஜையை நடத்திக் கொடுத்தற்காக தட்சணையை தயைக்கூர்ந்து தெரியப்படுத்த வேண்டும் என்று கைக்கூப்பியவண்ணம் பண்டிதரான ராவணனிடம் வினவினார் ராமன். அதற்கு தணிந்த குரலில் ராம பிராணுக்கு மட்டுமே கேட்கும் படி ராவணன் பதில் அளித்தான். என்னை பண்டிதராய் மதித்து சிவ பூஜை செய்ததற்கு நன்றி மேலும் சிவ பூஜைக்கு நான் தட்சணை வாங்குவதில்லை. தட்சணை தராததால் பலன் கிட்டாது என்று நீ எண்ணக்கூடும். யுத்தத்தில் ஒருவேளை நான் தோல்வியுற்று என் உயிர் பிரிய நேர்ந்தால் அத்தருணத்தில் நீ என் அருகில் இருக்க வேண்டும். இது மட்டும்தான் நான் எதிர்பார்க்கும் தட்சணை என்றான் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த இலங்கேஸ்வரன். (மூலம்: வேதவியாசர் ராமாயணம்)

Image result for ராமன் செய்த சிவபூஜை

குபேரன்

செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. இந்தப் பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலை தூக்கியது. தன்னிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தையும் இறைவன் சிவபெருமானை அழைத்து வந்து காட்டி அதில் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணினான் குபேரன். தன் எண்ணத்தைச் செயல்படுத்திட கைலாயத்துக்குச் சென்று சிவபெருமான் பார்வதி தேவி ஆகியோரை வணங்கினான். அவர்களைத் தன் இல்லத்திற்கு ஒரு முறை வந்து விருந்து சாப்பிட்டுச் செல்லும்படி அழைத்தான். குபேரனது உள் நோக்கத்தைப் புரிந்துகொண்ட சிவபெருமான் என்னால் உடனடியாக அங்கு வர முடியாது. நீ வேண்டுமானால் என் மகன் கணபதியைத் தற்போது அழைத்துச் செல். அவனுக்கு விருந்தளித்துத் திருப்திபடுத்தி அனுப்பி வை. பின்னொரு நாளில் நானும் பார்வதியும் உன் இல்லத்திற்கு வந்து விருந்து சாப்பிடுகிறோம் என்றார்.

குபேரனும் அதற்குச் சம்மதித்து சிவபெருமானிடம் விநாயகருக்குத் தேவையான உணவளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்புகிறேன் என்று வாக்களித்து விநாயகரைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான். விநாயகரைத் திருப்திப்படுத்தும்படியாகவும் குபேரனின் செல்வச் செழிப்பை அவர் அறிந்து கொள்ளும்படியாகவும் பல்வேறு வகையான உணவு வகைகள் ஆடம்பரமாகச் செய்யப்பட்டன. விநாயகர் விருந்துண்ணுவதற்காக வந்து அமர்ந்தார். உணவு வகைகள் ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டன. விநாயகரும் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வொன்றையும் விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். குபேரன் அவர் சாப்பிடுவதை ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

குபேரன் அச்சத்தின்படியே அவன் வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவு அனைத்தும் காலியாகி விட்டது. குபேரன் தன் வீட்டிற்கு அருகில் இருந்த அனைத்துக் கிராமங்களிலுமிருந்து உணவை வரவழைத்துக் கொடுத்தான். இருப்பினும் விநாயகரின் பசி அடங்கவில்லை. பசி அடங்காத விநாயகர் குபேரன் வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருட்களையெல்லாம் விழுங்க தொடங்கினார். இப்படியே போனால் வீட்டில் ஒன்றுமே மிஞ்சாது என்ற நிலை குபேரனுக்கு உண்டாயிற்று. குபேரன் எவ்வளவு முயன்றும் விநாயகரைத் தடுக்க முடியவில்லை. பதற்றமடைந்த குபேரன் ஈஸ்வரா அபயம் அபயம் என கைலாயத்திற்கு ஓடினான். சிவபெருமானிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். அப்போது சிவபெருமான் அவனிடம் குபேரா உம்மிடமிருக்கும் தான் ஒருவனே மிகப்பெரும் செல்வந்தன் என்கிற கர்வத்தை விட்டுவிட்டு விநாயகனுக்கு ஒரு கைப்பிடி சாதம் கொடு அவன் பசி அடங்கிவிடும் என்றார். தன் தவற்றை உணர்ந்த குபேரன் தன் கர்வத்தை விட்டுவிட்டு ஒரு பிடி சாதத்தை விநாயகருக்கு அளித்தான். அதைச் சாப்பிட்ட விநாயகரின் பசி அடங்கியது. குபேரனின் கர்வமும் காணாமல் போனது. இந்த கதையில் சில உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

  1. நம் செல்வ வளத்தை ஊரறிய செய்வதற்காக தெய்வங்களுக்கு பலவகை பதார்த்தங்களை படைத்தலை விட உள்ளன்போடும் தூயபக்தியோடும் ஒருபிடி சாதம் படைத்தாலும் அதுவே நிறைவானது.
  2. நாம் எப்போதும் நம்மிடம் இருக்கும் பொருள் மற்றும் அறிவு ஆகிய இரண்டையும் கொண்டு கர்வம் கொள்ளக் கூடாது. அவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்க வேண்டும்.
Image result for குபேரன் விநாயகர்

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை

காசியில் (வாரணாசி) பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர் ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

நிழல்

ஒரு குருவும் அவரது சீடர்களும் யாத்திரை சென்று கொண்டிருந்தனர் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி இளைப்பாறினர் அப்போது சீடர் ஒருவர் குருவிடம் குருவே தினமும் கோவிலுக்கு பூஜை செல்கின்றவர்கள் இறைவனை வழிபடாமல் கோயில் பக்கம் வராதவர்கள் யாருக்கு கடவுளின் அருள் அதிகமாக கிடைக்கும் என்று கேட்டான்.

அப்போது குரு இப்போது நீ இளைப்பாறிக் கொண்டிருக்கும் இந்த மரத்திற்கு ஏதாவது தண்ணீர் ஊற்றுகின்றயா என்று கேட்டார் இல்லை குருவே என்றான் சீடன் பின் எப்படி உனக்கு இந்த நிழல் கிடைத்தது என்று கேட்டார். நிழல் தருவது மரத்தின் இயல்புதானே. மரம் நிழல் கொடுப்பதற்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒருபோதும் மரம் பார்ப்பதில்லை. அது போலத்தான் கடவுளும் தன்னை வணங்குபவர் யார் வணங்காதவர் யார் என்றெல்லாம் கடவுள் பார்க்கமாட்டார். அதற்கு இந்த மரமே சாட்சி என்றார்.

Image result for குரு சீடன்

பக்தி

ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு முதிய செல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு பாலைவன வழியில் பயணித்துக் கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர், அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். புனிதத் தலத்தில் இறைவனைத் தொழுது விட்டுத் திரும்பிய பின் அவர் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். பாலைவனத்தில் ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி அந்த வழியாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு உண்ண உணவும் இளைப்பாறிச் செல்ல வசதியும் ஏற்படுத்தித் தர முடிவு செய்தார். அதையும் தானே அங்கு தங்கிச் செய்ய நினைத்த அவர் மகன்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுத் தன் செல்வத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பாலைவனத்தின் மத்தியில் அந்தப் பெரியவர் பெரிய கூடாரம் இட்டுக் கொண்டு அதில் சில வேலையாட்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அவர் இலவசமாக நீர் மற்றும் உணவும் இளைப்பாற வசதிகளும் தந்தார். ஆனால் வருபவர்கள் தொழுகை நடத்தி இறைவனை வணங்கிய பின்னரே அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார். பாலைவன வழியாக பயணித்த அனைவருக்கும் அவர் சேவை பெரிய உபகாரமாக இருந்தது. புனிதத் தலத்திற்குச் செல்லாமல் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் அவர் கூடாரத்திற்கு வந்து தொழுகை நடத்தி சாப்பிட்டு இளைப்பாறி விட்டுத் திருப்தியுடன் சென்றார்கள். அந்தப் பெரியவரும் அந்தப் பயணிகளுக்கு உதவ முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தார். பசியுடனும் களைப்புடனும் கூடாரத்திற்குள் நுழையும் மக்கள் திருப்தியுடனும், உற்சாகத்துடனும் கிளம்புவதைக் காணும் போது இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யும் சேவை போல் அவருக்கு நிறைவைத் தந்தது. அவரும் ஒரு ஆளிற்காவது உணவளிக்காமல் உணவருந்தியதில்லை. அவர் தொழுது முடித்தாலும் கூட யாத்திரீகர்களில் ஒருவராவது வந்து தொழுகை நடத்தி முடிக்கும் வரை காத்திருந்து அவருடன் சேர்ந்து தான் அவரும் உண்பார்.

ஒரு நாள் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தபடியால் பாலைவனத்தில் நீண்ட நேரம் யாரும் காணவில்லை. பெரியவர் ஒருவராவது வரட்டும் என்று உணவருந்தாமல் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரு பயணி களைத்துப் போய் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பெரியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனை மனமார வரவேற்று உபசரித்த பெரியவர் சொன்னார். வாருங்கள். கை கால் கழுவி விட்டு இறைவனைத் தொழுங்கள். உணவு தயாராக இருக்கிறது, இறைவனைத் தொழுவதா? நானா? என்றான் அவன். அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? நான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதில்லை. நான் இது வரை ஒரு முறை கூட இறைவனைத் தொழுததும் இல்லை, பெரியவர் வருத்தத்தோடு சொன்னார். நான் இங்கு வசிப்பதையும், இந்த வழியாகப் புனிதத் தலத்திற்குப் பயணிக்கும் இறை உணர்வாளர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதையும் இறை பணியாகவே செய்து வருகிறேன். அதனால் இறைவனைத் தொழாதவருக்கு நான் உணவு தருவதில்லை. அவன் உறுதியாகச் சொன்னான். இறைவனைத் தொழுதால் தான் உணவு கிடைக்கும் என்றால் எனக்கு தங்கள் உணவு தேவை இல்லை, அவர் எவ்வளவோ சொல்லியும் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரும் அவன் தொழாமல் உணவு பரிமாற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவன் பசியோடே அங்கிருந்து வெளியேறினான்.

பசியோடவே இருந்தாலும் இருப்பேனே தவிர இறைவனை வணங்க மாட்டேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தது அவருக்கு திகைப்பாக இருந்தது. அன்று முழுவதும் வேறு யாரும் அந்த வழியாக வரவுமில்லை. அவரும் உணவருந்தாமலேயே இரவு வரை காத்திருந்து விட்டு உறங்கச் சென்றார். இரவில் அவரது கனவில் இறைவன் குரல் ஒலித்தது. என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே, பெரியவருக்கு சுருக்கென்றது. கருணை மயமான இறைவன் தன்னை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எல்லோரையும் காத்து வருகிறார் என்று எண்ணி மறு நாளில் இருந்து அவர் இறைவனைத் தொழுதால் தான் உணவு என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார். வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இல்லை, அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது, அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட எல்லாம் வல்ல இறைவன் அருள் இருக்கின்றது.

பசுவரட்டியிலும் கண்ணன்

பசுவரட்டியிலும் கண்ணன்

இரண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி தயாரித்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர். ஒருசமயம் ஒருத்தி தயார் செய்த வரட்டிகளை மற்றொருத்தி அவள் அறியாமல் எடுத்துக் கொண்டாள். இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கிருஷ்ண பக்தரான துக்காராம் அங்கு வந்தார். அவரிடம் திருட்டுக் கொடுத்தவள் முறையிட்டாள். சுவாமி நான் கஷ்டப்பட்டு தயாரித்த வரட்டிகளை இவள் திருடிக்கொண்டாள். என்னுடையதை வாங்கித் தாருங்கள் என்றாள். துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதின் அருகில் கொண்டு சென்றார். பின் ஒரு பகுதியை வலதுபுறமாகவும் ஒரு பகுதியை இடதுபுறமாகவும் வைத்தார். உங்களில் வரட்டி தட்டும்போது விட்டல விட்டல என சொன்னது யார்? என்றார். திருட்டுக் கொடுத்த பெண் நான் தான் அவ்வாறு சொன்னேன் என்றாள். அப்படியானால் வலதுபக்கம் இருப்பவை உன்னுடையவை. ஒரு தொழிலைச் செய்யும் போது கண்ணனின் திருநாமத்தை யார் உச்சரிக்கிறார்களோ அது காற்றில் பரவி அந்த இடம் முழுக்க எதிரொலிக்கும். அவ் வகையில் வரட்டிக்குள்ளும் கண்ணனின் திருநாமங்களில் ஒன்றான விட்டல என்பது ஒலித்தது என்றார். திருட்டுக் கொடுத்தவள் தன் பொருளைத் திரும்பப் பெற்றதுடன் கண்ணனின் அனுக்கிரகமும் தனக்கு கிடைத்ததற்காக நன்றியுடன் கண்ணீர் பெருக்கினாள்.