முக்தி

நாரதர் மிகப்பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒரு நாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதர் அந்த வழியாகப் போவதைப் பார்த்ததும் நாரதரிடம் எங்கே செல்கிறீர்கள் என்றான். நான் சொர்கத்திற்குச் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால் ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான் அவன். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே எங்கே செல்கிறீர் என்று கேட்டான். நாரதரோ நான் சொர்கத்திற்குச் செல்கிறேன் என்றார். அப்படியானால் ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும் என்று அவனும் கேட்டுக்கொண்டான். நாரதர் சென்றுவிட்டார்.

சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன், நாரதரே என்னைப் பற்றி பகவானிடம் கேட்டீரா என்றான். ஆம் என்றார் நாரதர். பகவான் என்ன சொன்னார் என்று கேட்டான் அவன். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா எல்லாம் வீணாகிப் போனதே என்று கூறி புற்றை உடைத்து எழுந்து சென்றுவிட்டான். நாரதர் அடுத்த மனிதனிடம் சென்றார். பகவானிடம் கேட்டீரா நாரதரே என்றான் அவன். ஆம் கேட்டேன் அந்தப் புளியமரத்தைப் பார் அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான் என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே என்று கூறினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது மகனே இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது. அவனது விடா முயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது. அத்தனைப் பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. அந்த வைராக்கியமே அவனை முக்திக்கு அழைத்துச் சென்றது. தினம் கடவுளை வணங்குவேன் எத்தனை துயர் வந்தாலும் கடவுளை நாம ஜபம் செய்யாமல் இருக்க மாட்டேன். கோவிலுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன் என வைராக்கியத்தோடு ஆண்டவனிடம் சரண் அடைய வேண்டும்.

ராவணன் கேட்ட தட்சணை

ராமனின் பாதம் பட காத்திருந்த சேது பாலத்தை துவக்கி வைக்க சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், வேண்டியனவற்றை தயார் செய்ய பணித்தார். ராமனின் விருப்பமறிந்த ஜாம்பவான் இத்தகைய சேதுவை துவக்கி சிவ பூஜை செய்து வைக்க மிகச்சிறந்த பண்டிதர் அவசியம் என்றுரைத்தார். அப்படி யாரேனும் அருகே உள்ளனரா என்ற ராமனின் கேள்விக்கு ராவணன் ஒருவனே என்று தயக்கத்துடன் பதிலளித்தார் ஜாம்பவான். பதிலைக் கேட்ட ராமனின் பிறகென்ன நமது வேண்டுகோளுடன் அனுமனை அனுப்புங்கள். இப்பூஜையை சிறப்புற நடத்தி தர அப்பண்டிதரையே வேண்டி வரவழைத்து வாருங்கள் என்றார்.

விரோதியின் தேசத்தை அடையும் வழிக்கு அவனை வைத்தே பூஜையா? இது நடக்குமா!? அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் சுக்ரீவனும் அவனின் சேனைகளும் ராமனின் விருப்பமறிந்த வாயு மைந்தன் இமைப்பொழுதில் இலங்கை அரண்மனையில் நின்றார் அஞ்சனை மைந்தன். அரக்கர்கள் சூழ்ந்தனர், அரக்கர்களே சண்டையிட வரவில்லை. நான் சிவ பூஜை செய்து வைக்க உத்தமமான சிவ பக்தன் ராவணனை நாடி வந்துள்ளேன். தன் முன்னால் நிற்கும் அனுமனின் கோரிக்கையை கேட்டு வியந்தது ராவணனோடு அவனது சபையும் இது சூழ்ச்சி என்றனர் சபையோர். சூழ்ச்சியால் தங்களை வெல்ல இயலுமோ? தயை கூர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார் அனுமன். அச்சமும் ஆவேசமும் திகைப்பும் கூடி எழுந்து நின்று அனுமனை நோக்கி கூச்சலிட்டவர்களை கையமரச்செய்து இந்த வேள்வியை நடத்தித்தர ஒப்புக் கொண்டான் சிறந்த சிவ பக்தனான ராவணன்.

பூஜை நடத்தி தர வந்த ராவணன் ராமரைப் பார்த்து சங்கு சக்கரங்கள் மட்டும் இவனது கரங்களில் இருந்தால் விஷ்ணுவாகத்தான் இவன் தோன்றுவான் என ராவணனும் எண்ணினர். பூஜை ஏற்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் பகிரவும் என்ற ராமனின் கோரிக்கைக்கு தசரத மைந்தா ஏற்பாடுகள் நேர்த்தியாக உள்ளது. ஆனால் துணைவியின்று கிரஹஸ்த்தன் செய்யும் எந்தக் காரியத்தையும் சாஸ்திரங்கள் அங்கீகரிப்பதில்லை என்று பதிலளித்தார் இலங்கேஸ்வரன். தாங்கள்தான் வேள்வியை சிறிதும் குறைவின்றி நடத்தி தர வேண்டும் என்றார் ராமன். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த ராவணன் பூஜைக்காக சீதாவை பூஜை முடியும் வரை உங்கள் இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் கூடாது. மேலும் பூஜை முடிந்த மறுகணமே சீதையை அழைத்து சென்று விடுவேன் என்ற நிபந்தனையுடன் வரவழைத்தார். இப்பூஜையை நடத்திக் கொடுத்தற்காக தட்சணையை தயைக்கூர்ந்து தெரியப்படுத்த வேண்டும் என்று கைக்கூப்பியவண்ணம் பண்டிதரான ராவணனிடம் வினவினார் ராமன். அதற்கு தணிந்த குரலில் ராம பிராணுக்கு மட்டுமே கேட்கும் படி ராவணன் பதில் அளித்தான். என்னை பண்டிதராய் மதித்து சிவ பூஜை செய்ததற்கு நன்றி மேலும் சிவ பூஜைக்கு நான் தட்சணை வாங்குவதில்லை. தட்சணை தராததால் பலன் கிட்டாது என்று நீ எண்ணக்கூடும். யுத்தத்தில் ஒருவேளை நான் தோல்வியுற்று என் உயிர் பிரிய நேர்ந்தால் அத்தருணத்தில் நீ என் அருகில் இருக்க வேண்டும். இது மட்டும்தான் நான் எதிர்பார்க்கும் தட்சணை என்றான் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த இலங்கேஸ்வரன். (மூலம்: வேதவியாசர் ராமாயணம்)

Image result for ராமன் செய்த சிவபூஜை

குபேரன்

செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. இந்தப் பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலை தூக்கியது. தன்னிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தையும் இறைவன் சிவபெருமானை அழைத்து வந்து காட்டி அதில் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணினான் குபேரன். தன் எண்ணத்தைச் செயல்படுத்திட கைலாயத்துக்குச் சென்று சிவபெருமான் பார்வதி தேவி ஆகியோரை வணங்கினான். அவர்களைத் தன் இல்லத்திற்கு ஒரு முறை வந்து விருந்து சாப்பிட்டுச் செல்லும்படி அழைத்தான். குபேரனது உள் நோக்கத்தைப் புரிந்துகொண்ட சிவபெருமான் என்னால் உடனடியாக அங்கு வர முடியாது. நீ வேண்டுமானால் என் மகன் கணபதியைத் தற்போது அழைத்துச் செல். அவனுக்கு விருந்தளித்துத் திருப்திபடுத்தி அனுப்பி வை. பின்னொரு நாளில் நானும் பார்வதியும் உன் இல்லத்திற்கு வந்து விருந்து சாப்பிடுகிறோம் என்றார்.

குபேரனும் அதற்குச் சம்மதித்து சிவபெருமானிடம் விநாயகருக்குத் தேவையான உணவளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்புகிறேன் என்று வாக்களித்து விநாயகரைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான். விநாயகரைத் திருப்திப்படுத்தும்படியாகவும் குபேரனின் செல்வச் செழிப்பை அவர் அறிந்து கொள்ளும்படியாகவும் பல்வேறு வகையான உணவு வகைகள் ஆடம்பரமாகச் செய்யப்பட்டன. விநாயகர் விருந்துண்ணுவதற்காக வந்து அமர்ந்தார். உணவு வகைகள் ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டன. விநாயகரும் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வொன்றையும் விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். குபேரன் அவர் சாப்பிடுவதை ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

குபேரன் அச்சத்தின்படியே அவன் வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவு அனைத்தும் காலியாகி விட்டது. குபேரன் தன் வீட்டிற்கு அருகில் இருந்த அனைத்துக் கிராமங்களிலுமிருந்து உணவை வரவழைத்துக் கொடுத்தான். இருப்பினும் விநாயகரின் பசி அடங்கவில்லை. பசி அடங்காத விநாயகர் குபேரன் வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருட்களையெல்லாம் விழுங்க தொடங்கினார். இப்படியே போனால் வீட்டில் ஒன்றுமே மிஞ்சாது என்ற நிலை குபேரனுக்கு உண்டாயிற்று. குபேரன் எவ்வளவு முயன்றும் விநாயகரைத் தடுக்க முடியவில்லை. பதற்றமடைந்த குபேரன் ஈஸ்வரா அபயம் அபயம் என கைலாயத்திற்கு ஓடினான். சிவபெருமானிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். அப்போது சிவபெருமான் அவனிடம் குபேரா உம்மிடமிருக்கும் தான் ஒருவனே மிகப்பெரும் செல்வந்தன் என்கிற கர்வத்தை விட்டுவிட்டு விநாயகனுக்கு ஒரு கைப்பிடி சாதம் கொடு அவன் பசி அடங்கிவிடும் என்றார். தன் தவற்றை உணர்ந்த குபேரன் தன் கர்வத்தை விட்டுவிட்டு ஒரு பிடி சாதத்தை விநாயகருக்கு அளித்தான். அதைச் சாப்பிட்ட விநாயகரின் பசி அடங்கியது. குபேரனின் கர்வமும் காணாமல் போனது. இந்த கதையில் சில உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

  1. நம் செல்வ வளத்தை ஊரறிய செய்வதற்காக தெய்வங்களுக்கு பலவகை பதார்த்தங்களை படைத்தலை விட உள்ளன்போடும் தூயபக்தியோடும் ஒருபிடி சாதம் படைத்தாலும் அதுவே நிறைவானது.
  2. நாம் எப்போதும் நம்மிடம் இருக்கும் பொருள் மற்றும் அறிவு ஆகிய இரண்டையும் கொண்டு கர்வம் கொள்ளக் கூடாது. அவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்க வேண்டும்.
Image result for குபேரன் விநாயகர்

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை

காசியில் (வாரணாசி) பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர் ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

நிழல்

ஒரு குருவும் அவரது சீடர்களும் யாத்திரை சென்று கொண்டிருந்தனர் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி இளைப்பாறினர் அப்போது சீடர் ஒருவர் குருவிடம் குருவே தினமும் கோவிலுக்கு பூஜை செல்கின்றவர்கள் இறைவனை வழிபடாமல் கோயில் பக்கம் வராதவர்கள் யாருக்கு கடவுளின் அருள் அதிகமாக கிடைக்கும் என்று கேட்டான்.

அப்போது குரு இப்போது நீ இளைப்பாறிக் கொண்டிருக்கும் இந்த மரத்திற்கு ஏதாவது தண்ணீர் ஊற்றுகின்றயா என்று கேட்டார் இல்லை குருவே என்றான் சீடன் பின் எப்படி உனக்கு இந்த நிழல் கிடைத்தது என்று கேட்டார். நிழல் தருவது மரத்தின் இயல்புதானே. மரம் நிழல் கொடுப்பதற்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒருபோதும் மரம் பார்ப்பதில்லை. அது போலத்தான் கடவுளும் தன்னை வணங்குபவர் யார் வணங்காதவர் யார் என்றெல்லாம் கடவுள் பார்க்கமாட்டார். அதற்கு இந்த மரமே சாட்சி என்றார்.

Image result for குரு சீடன்

பக்தி

ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு முதிய செல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு பாலைவன வழியில் பயணித்துக் கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர், அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். புனிதத் தலத்தில் இறைவனைத் தொழுது விட்டுத் திரும்பிய பின் அவர் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். பாலைவனத்தில் ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி அந்த வழியாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு உண்ண உணவும் இளைப்பாறிச் செல்ல வசதியும் ஏற்படுத்தித் தர முடிவு செய்தார். அதையும் தானே அங்கு தங்கிச் செய்ய நினைத்த அவர் மகன்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுத் தன் செல்வத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பாலைவனத்தின் மத்தியில் அந்தப் பெரியவர் பெரிய கூடாரம் இட்டுக் கொண்டு அதில் சில வேலையாட்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அவர் இலவசமாக நீர் மற்றும் உணவும் இளைப்பாற வசதிகளும் தந்தார். ஆனால் வருபவர்கள் தொழுகை நடத்தி இறைவனை வணங்கிய பின்னரே அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார். பாலைவன வழியாக பயணித்த அனைவருக்கும் அவர் சேவை பெரிய உபகாரமாக இருந்தது. புனிதத் தலத்திற்குச் செல்லாமல் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் அவர் கூடாரத்திற்கு வந்து தொழுகை நடத்தி சாப்பிட்டு இளைப்பாறி விட்டுத் திருப்தியுடன் சென்றார்கள். அந்தப் பெரியவரும் அந்தப் பயணிகளுக்கு உதவ முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தார். பசியுடனும் களைப்புடனும் கூடாரத்திற்குள் நுழையும் மக்கள் திருப்தியுடனும், உற்சாகத்துடனும் கிளம்புவதைக் காணும் போது இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யும் சேவை போல் அவருக்கு நிறைவைத் தந்தது. அவரும் ஒரு ஆளிற்காவது உணவளிக்காமல் உணவருந்தியதில்லை. அவர் தொழுது முடித்தாலும் கூட யாத்திரீகர்களில் ஒருவராவது வந்து தொழுகை நடத்தி முடிக்கும் வரை காத்திருந்து அவருடன் சேர்ந்து தான் அவரும் உண்பார்.

ஒரு நாள் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தபடியால் பாலைவனத்தில் நீண்ட நேரம் யாரும் காணவில்லை. பெரியவர் ஒருவராவது வரட்டும் என்று உணவருந்தாமல் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரு பயணி களைத்துப் போய் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பெரியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனை மனமார வரவேற்று உபசரித்த பெரியவர் சொன்னார். வாருங்கள். கை கால் கழுவி விட்டு இறைவனைத் தொழுங்கள். உணவு தயாராக இருக்கிறது, இறைவனைத் தொழுவதா? நானா? என்றான் அவன். அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? நான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதில்லை. நான் இது வரை ஒரு முறை கூட இறைவனைத் தொழுததும் இல்லை, பெரியவர் வருத்தத்தோடு சொன்னார். நான் இங்கு வசிப்பதையும், இந்த வழியாகப் புனிதத் தலத்திற்குப் பயணிக்கும் இறை உணர்வாளர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதையும் இறை பணியாகவே செய்து வருகிறேன். அதனால் இறைவனைத் தொழாதவருக்கு நான் உணவு தருவதில்லை. அவன் உறுதியாகச் சொன்னான். இறைவனைத் தொழுதால் தான் உணவு கிடைக்கும் என்றால் எனக்கு தங்கள் உணவு தேவை இல்லை, அவர் எவ்வளவோ சொல்லியும் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரும் அவன் தொழாமல் உணவு பரிமாற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவன் பசியோடே அங்கிருந்து வெளியேறினான்.

பசியோடவே இருந்தாலும் இருப்பேனே தவிர இறைவனை வணங்க மாட்டேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தது அவருக்கு திகைப்பாக இருந்தது. அன்று முழுவதும் வேறு யாரும் அந்த வழியாக வரவுமில்லை. அவரும் உணவருந்தாமலேயே இரவு வரை காத்திருந்து விட்டு உறங்கச் சென்றார். இரவில் அவரது கனவில் இறைவன் குரல் ஒலித்தது. என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே, பெரியவருக்கு சுருக்கென்றது. கருணை மயமான இறைவன் தன்னை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எல்லோரையும் காத்து வருகிறார் என்று எண்ணி மறு நாளில் இருந்து அவர் இறைவனைத் தொழுதால் தான் உணவு என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார். வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இல்லை, அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது, அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட எல்லாம் வல்ல இறைவன் அருள் இருக்கின்றது.

பசுவரட்டியிலும் கண்ணன்

பசுவரட்டியிலும் கண்ணன்

இரண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி தயாரித்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர். ஒருசமயம் ஒருத்தி தயார் செய்த வரட்டிகளை மற்றொருத்தி அவள் அறியாமல் எடுத்துக் கொண்டாள். இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கிருஷ்ண பக்தரான துக்காராம் அங்கு வந்தார். அவரிடம் திருட்டுக் கொடுத்தவள் முறையிட்டாள். சுவாமி நான் கஷ்டப்பட்டு தயாரித்த வரட்டிகளை இவள் திருடிக்கொண்டாள். என்னுடையதை வாங்கித் தாருங்கள் என்றாள். துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதின் அருகில் கொண்டு சென்றார். பின் ஒரு பகுதியை வலதுபுறமாகவும் ஒரு பகுதியை இடதுபுறமாகவும் வைத்தார். உங்களில் வரட்டி தட்டும்போது விட்டல விட்டல என சொன்னது யார்? என்றார். திருட்டுக் கொடுத்த பெண் நான் தான் அவ்வாறு சொன்னேன் என்றாள். அப்படியானால் வலதுபக்கம் இருப்பவை உன்னுடையவை. ஒரு தொழிலைச் செய்யும் போது கண்ணனின் திருநாமத்தை யார் உச்சரிக்கிறார்களோ அது காற்றில் பரவி அந்த இடம் முழுக்க எதிரொலிக்கும். அவ் வகையில் வரட்டிக்குள்ளும் கண்ணனின் திருநாமங்களில் ஒன்றான விட்டல என்பது ஒலித்தது என்றார். திருட்டுக் கொடுத்தவள் தன் பொருளைத் திரும்பப் பெற்றதுடன் கண்ணனின் அனுக்கிரகமும் தனக்கு கிடைத்ததற்காக நன்றியுடன் கண்ணீர் பெருக்கினாள்.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா?

சீடன் ஒருவன் குருவே இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? என்று சந்தேகம் கேட்டான். அப்போது ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான்.

குருநாதர் சீடனே பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா? எனக்கேட்டார்.

குழம்பிய சீடன் சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள்? எனக்கேட்டான்.

இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்?

கயிறை விட்டால் அது ஓடிவிடும்.

அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லைதானே?

குருவே பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன். என்றாலும் அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன்.

உன்னைப் போலத்தான் இறைவனும் மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது கேள்விக்குப் பதில் இதுதான் குரு சொல்ல இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்தான் சீடன்.

ஆயுள்

சிலர் நான் 80 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இனி என்ன வேண்டும் என்பார்கள். அது ஒரு பெருமை என்றார் பகவான் ரமணர் புன் சிரிப்புடன் ஒரு கதை இருக்கிறது என்றார். ஒரு முறை பிரம்மாவுக்கு தானே சிரஞ்சீவி என்று கர்வம் ஏற்பட்டது. அவர் வைகுண்டத்துக்கு சென்று மஹா விஷ்ணுவிடம் நான் எவ்வளவு பெரியவன் சிரஞ்சீவி பார்த்தாயா என்றார். அதற்கு விஷ்ணு இல்லை அப்பனே உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள். என்றாராம். அதெப்படி? எல்லாரையும் படைப்பவன் நானாச்சே? என்னை விட வயதானவர்கள் யார் இருக்கிறார்கள்? என்றார். சரி வா காட்டுகிறேன் என்று மஹாவிஷ்ணு அழைத்துக்கொண்டு போனார். ஒரு இடத்தில் லோமசர் என்று ஒரு மஹரிஷி காணப்பட்டார், அவரிடம் மஹாவிஷ்ணு ஐயா தங்கள் வயதென்ன? இன்னும் எவ்வளவு காலம் இருப்பீர்கள்? என்று கேட்டார். அவர் அப்பனே என் வயதை கேட்டாயா? சொல்கிறேன். கேள். கிருத யுகம், துவாபர யுகம், த்ரேதாயுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர் (43 லட்சத்து 21000 மனித வருடங்கள்). அது போல 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது. இப்படி ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்து விட்டதென்றால் என் உடம்பில் இருந்து ஒரு ரோமம் உதிரும். இப்படி ஒவ்வொரு பிரம்ம கல்பத்துக்கு ஒரு ரோமம் உதிர்ந்தது போக இன்னும் எத்தனையோ ரோமங்கள் உடம்பில் இருக்கின்றன. என்றைக்கு இவை எல்லாமே உதிர்ந்துவிடுமோ அன்று என் ஆயுள் முடியும் என்றார். பிரம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. அதுவும் போதாதென்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அஷ்டாவக்கிர முனியின் இருப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். அவரது சரீரத்தில் 8 கோணல்கள் இருக்கும். அவர் ஒரு லோமச முனிவர் இறந்தால் என் ஒரு கோணல் நேராகும். இப்படியே எட்டு லோமச முனிவர்களின் ஆயுளில் என் எட்டு கோணல்களும் நேரானதும் என் ஆயுசு முடியும் என்றார். இதைக்கேட்டதும் பிரம்மாவின் கர்வம் கப்பென்று அடங்கியது. சரியான ஞானம் ஏற்பட்டால் இந்த சரீரம் யாருக்கு வேண்டும்? சதா சர்வ காலமும் நிர்மலமாக இருக்கும் தனக்கு இந்த சரீர சுமை எதற்கு? என்றார் பகவான்.

Related image

சித்தி

ஒரு யோகி தன் குருவிடம் சென்று நான் பதினான்கு வருடங்கள் காட்டில் தனியாக இருந்து தவம் செய்து நீரின் மேல் நடக்கும் சித்தியை அடைந்திருக்கிறேன் என்றான். அதைக் கேட்ட குருவானவர் அவனைப் பார்த்து மகனே பதினான்கு வருடங்களையும் வீணாக்கி விட்டாயே ஒன்றரையணா கொடுத்தால் ஓடக்காரன் உன்னை நீரின் மேல் கொண்டு போய் அக்கரை சேர்ப்பானே நீ அடைந்த சித்தி ஒன்றரையணா மதிப்புத் தான் என்றார் திருவடியை அடைய வழி சித்தி அடையும் ஆசையைக் கொண்டு யாரும் காசை வீணாக்க வேண்டாம். இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்ற நோக்குடன் உண்மையான பக்தி செய்யுங்கள். அற்புதங்களைக் காட்டி மக்களைக் கவர நினைக்கும் யோகிகளிடம் செல்ல வேண்டாம் என்பது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமொழி.