ஒரு சமயம் இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள் பிராமணர் அல்லாத ஒருவருக்கு ஈமக் கடன்களைச் செய்தார். அதனால் அவ்வூரில் இருந்த பிராமணர்களும் அவரது உறவினர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர். இதைக் கேட்ட இராமானுஜர் குரு காரணம் இல்லாமல் எதனையும் செய்ய மாட்டார். ஆகவே அந்த காரணத்தை தெரிந்து கொள்ள அவர் இல்லம் சென்றார். இராமானுஜர் வந்த காரணத்தை அறிந்து கொண்ட குரு பெரிய நம்பிகள் அதற்கான காரணத்தை கூறினார்.
பிராமணர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட முறைப்படி பிராமணன் ஒருவன் பிராமணன் அல்லாதவனுக்கு ஈமக் கடன்கள் செய்வது என்பது பொருத்தமற்ற செயல் தான். இதனை பிராமணர்கள் வகுத்த விதிகள் ஏற்றுக் கொண்டாலும் அதனை அற நூல்கள் ஏற்றுக் கொள்ளாது. அறம் என்பது என்ன என்று தெரியுமா? சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு தர்மத்திற்குக்கு ஏற்ப நடந்து கொண்டார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். சத்ரிய குலத்தில் பிறந்த தர்மர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது? மதம் ஏது? என்னால் ஈமக் கடன்கள் செய்து தீயில் இடப்பட்டவன் என்னை விட பக்தியில் பல மடங்கு சிறந்தவன். அவனுக்கு இறுதிக் கடன் செய்து நான் பெரிய பேற்றினை பெற்றுள்ளேன் என்றார். பெரிய நம்பிகளின் பதிலைக் கேட்டு இராமானுஜர் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று அவரை விழுந்து வணங்கினார்.
விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகஸ்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து காவிரிநதி பெருக்கெடுத்து ஓடுமாறு செய்தார். பின் காக்கை வடிவம் நீங்கி சிறுவனாய் மாறி அவரது முன்னே நின்றார். சிறுவனது தலையில் குட்டுவதற்காக அவனைத் துரத்திச் சென்றார் அகஸ்தியர். அகத்தியர் அருகில் வந்ததும் விநாயகர் தமது உண்மை வடிவில் காட்சியளித்தார். குட்டுவதற்கு ஓங்கிய கையால் தம் நெற்றியில் குட்டிக் கொண்டு வினாயகரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் அகஸ்தியர். உங்களது முன்னர் நெற்றியில் குட்டிக் கொண்டு வழிபடும் மெய்யன்பர்களின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று அகஸ்தியர் வேண்டினார். விநாயகப் பெருமானும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார். அதன்படி கோயிலில் வினாயகர் முன்பு தனது தலையில் குட்டிக் கொண்டு வினாயகரின் அருளை பக்தர்கள் பெறுகிறார்கள்.
தலையில் குட்டிக் கொள்ளும் இடத்தில் முன் தலையின் இரு புறங்களிலும் டெம்போரல் லோப் உள்ளது. இது தலையின் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. டெம்போரல் லோப் என்பது மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள ஒரு ஜோடி பகுதி. காதுகளுக்கு அருகில் உங்கள் மண்டை ஓட்டின் உள்ளே இருக்கும் இந்த பகுதிகள் உணர்ச்சிகளை நிர்வகித்தல், புலன்களில் இருந்து தகவல்களை செயலாக்குதல், நினைவுகளை சேமித்து மீட்டெடுப்பது மற்றும் மொழியை புரிந்து கொள்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த இடத்தில் தான் ஞாபக சக்தியைத் தூண்டும் நாடிகள் அமைந்துள்ளன. இந்த இடத்தில் குட்டிக் கொள்வதால் இந்த நாடிகள் தூண்டி விடப்படுகின்றன. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் உள் எழுச்சியும் உண்டாகிறது. இதனை மனதில் கொண்டு முன் காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தலையில் குட்டி தண்டணை கொடுத்தார்கள்.
இந்த வினாயகர் இருக்கும் இடம் குன்றக்குடி குடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.
மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாக இருந்தவர் விதுரர். திருதராட்டிரன் பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவியில் இல்லாமல் இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தார். விதுரர் மகா நீதிமான். தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். ஒரு முறை திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து மனிதனுக்கு ஆயுள் 100 வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும் முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர் 6 கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை குறைகின்றன என்றார். திருதராஷ்டிரர் அந்த வாள்கள் என்ன என்று கேட்டார். விதுரர் சொல்ல ஆரம்பித்தார்.
அதிக கர்வம் கொள்ளுதல்
நானே கெட்டிக்காரன் எனக்கே அனைத்தும் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நான் செல்வந்தன் நான் கொடையாளி நான் நல்லவன் பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவன் தானாகவே அழித்து போவார்கள். கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் தன் விஷயத்தில் முதலில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் நல்ல குணங்களைப் பார்க்க வேண்டும்.
அதிகம் பேசுதல்
கடுமையில்லாததும் உண்மையானதும் அன்பானதும் நன்மையைக் கொடுக்கின்ற வார்த்தை எதுவோ அது வாக்கினால் செய்யப்படும் தவம். உண்மையில்லாத அன்பில்லாத நன்மையை கொடுக்காத எந்த வார்த்தைகளாக இருந்தாலும் அந்த வார்த்தையை பேசும் சுழ்நிலை அமைந்தால் பேசாமல் இருக்க வேண்டும்.
தியாக மனப்பான்மை இல்லாமை
சுகமானவைகள் அனைத்தையும் நான் மட்டும்தான் அனுபவிக்க வேண்டும். எனது குடும்பம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல. பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.
கோபம்
கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் வெற்றியாளன். அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன் தர்மம் எது அதர்மம் எது என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும் யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சுய நலம்
சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். சுயநலத்தோடு இருப்பவர்கள் தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.
நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது
தாயை அடுத்து நண்பனுக்கு என்று வரும் போது உயிரைக் கொடுப்பது நட்பு மட்டுமே. உலகில் அதுபோல் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது.
இந்த 6 கருத்துகளையும் சரியாக யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக நூறாண்டை நிறைவு செய்வான் என்று விதுரர் சொல்லி முடித்தார்.
மேலும் விதுரர் சொன்ன சில நீதிக் கருத்து
இந்த 3 சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1.பசி வயிற்றை கிள்ளும் போது. 2.தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3.போதையில் இருக்கும் போது.
இந்த 3 சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது. 2.மிகவும் துக்கத்தில் இருக்கும் போது. 3.மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த 3 விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1.நம்மைப் பற்றி உணராதவர்கள். 2.நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள். 3.நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த 3 பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1.ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள். 2.நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள். 3.நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது. ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது. இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.
காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை பூஜையெல்லாம் முடித்தும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தும் சற்று ஓய்வில் இருந்த நேரம். மடத்தில் அவருக்கு நெருங்கிய அன்பர்கள் சிலர் மட்டுமே மகா பெரியவருடன் அப்போது இருந்தனர். ஒருவர் காஞ்சி தவ முனிவரிடம் கேட்டார். தங்களுக்கு சிறிய வயதில் பிடித்த பண்டிகை எது? தீபாவளியா? தைப்பொங்கலா? கார்த்திகை தீபமா? கோகுலாஷ்டமியா? ஆருத்ரா தரிசனமா? எது என்று சொல்லுங்கள் என்றார்.
மகா பெரியவர் இது எதையும் குறிப்பிடாமல் எனக்குப் பிடித்த பண்டிகை சங்கர ஜெயந்தி என்றார். சூழ்ந்த பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சங்கர ஜெயந்தியில் அப்படி என்ன விசேஷமான பண்டங்கள் விருந்து? என வியந்தனர். அவர் சொன்னார் ஆதி சங்கரர் மட்டும் அவதாரம் செய்யாவிட்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகள்தான் ஏது? நமது சனாதன தர்மத்திற்கு புத்துயிர் அளித்த சங்கரர் ஜெயந்தி எனக்குப் பிடித்த பண்டிகை என்றார்.
ஆதிசங்கரர் சாதாரண மனிதனுக்கு நான்கு விஷயங்களைச் சொன்னார் .
1. பகவானுடைய நாமத்தை ஜபி. பகவத் கீதையைப் படி 2. பகவானுடைய விஷயத்தையே மனதில் சிந்தனை செய். வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காதே. 3. நீ யாரிடமாவது நட்புடன் பழக வேண்டும் என்றால் நல்ல மனிதர்களிடம் நட்புடன் இரு. 4. முடிந்த அளவு இன்னொருவனுக்கு தானம் செய். நீ இப்படி தானம் செய்ய வேண்டும் அப்படி தானம் செய்ய வேண்டும் என்று நாம் யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை. நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டும். இதை நாம் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நான்கு விஷயங்களை நம் வாழ்க்கையில் நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வந்தால் இது மிகவும் உத்தமம் ஆகும். வாழ்க்கை திருப்தியாக வாழ்வதற்கு இதுதான் வழி.
மகா பெரியவர் மூன்றாவதாக சொல்லப்பட்ட உபதேசத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். யார் நல்ல மனிதர்கள் என்று பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாகத்தான் தோன்றுகிறது. பின்பு அவர்களுடன் கொஞ்ச நாட்கள் பழகிய பின்பு தான் அவர்களுடைய குணம் தெரிந்து விடுகிறது. முதலில் தெரியவே இல்லை என்று சொல்லலாம். நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கேட்டால் முக்கியமாக ஒரு உதவியை பெற்று விட்டு பதில் உதவி அவனுக்கு செய்யக் கூடாது என்கிற எண்ணம் உள்ளவர்கள் நல்லவர்கள். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும். ஆனால் இதற்கு ராமாயணத்தில் ராமர் விளக்கம் சொல்கிறார்.
ராமாயணத்தில் ராமருடைய மனைவி சீதா தேவியை ராவணன் அபகரித்துக் கொண்டு போனான். அந்த சமயத்தில் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது அனுமார். சீதை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவ்வளவு பெரிய சமுத்திரத்தைத் தாண்டி சீதை எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளோடு பேசி ராவணனுக்கு புத்திமதி சொல்லி சீதையிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவந்து ராமருக்கு கொடுத்து இறுதி போரில் ராமர் வெற்றி பெற்று சீதையை பெறுவதற்கு மகா பெரிய உதவி செய்தவர் அனுமார்.
அனுமாருக்கு ராமர் ஒரு வார்த்தை சொன்னார். நீ எனக்கு செய்த உதவியை நீ மறந்துவிடு. நீ திரும்ப ஒரு உதவியை என்னிடமிருந்து எதிர் பார்க்காதே. ஏன் திரும்ப உன்னிடமிருந்து ஒரு உதவியை எதிர் பார்க்கக் கூடாதா? இது என்ன அநியாயம்? என்று கேட்கலாம். காரணம் சொல்கிறார் ராமர். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனுடைய உதவி எப்பொழுது தேவைப்படும்? நாம் ஏதாவது ஒரு துன்பத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். துன்பத்தில் இல்லை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று துன்பத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு துன்பம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். நான் உதவி செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் உனக்கு ஒரு துன்பம் வரட்டும் என்று நீயே எதிர்பார்க்கிறாய் என்றுதானே அர்த்தம். இதை எதற்காக எதிர் பார்க்கிறாய்? நீ மகிழ்ச்சியுடன் நன்றாக இருக்க வேண்டியவன். ஆகவே இதுபோல் எதிர்பார்க்காதே என்று ராமர் அனுமாரிடம் சொன்னார்.
எதிர்பார்ப்பு இல்லாத காரணமில்லாத பக்தியை எவன் ஒருவன் இறைவனிடம் வைக்கிறானோ அவனே உண்மையான பக்தன். அது அநேகம் பேருக்கு புரியாமல் இருக்கலாம். பகவானை பூஜை செய்வது பகவானைப் பற்றி சிந்திப்பது என்பது இன்னொருவன் பாரக்க வேண்டும் என்பதற்காக எவன் செய்கிறானோ அது பக்தி இல்லை. இது என் கடமையை செய்கிறேன் என்கிற திருப்தியுடன் செய்பவனே உண்மையான பக்தன். இதுபோல் பக்தி செலுத்தி இறைவனுடைய நட்பை வைத்துக் கொள்ள வேண்டும். உலகியல் ரீதியாக பார்த்தால் அருகில் இருப்பவருடைய குணம் வருவதற்கு வாய்ப்புள்ளது. விடுமுறை என்றால் சினிமாவிற்கு செல்லும் நண்பனுடைய நட்பு கிடைத்தால் சினிமாவிற்கே கூப்பிடுவான். கோயிலுக்கு செல்லும் நண்பனின் நட்பு கிடைத்தால் கோயிலுக்கே கூப்பிடுவான். நல்ல சிந்தனையோடு இருப்பவர்களின் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் எல்லோருக்கும் மகா உபதேசங்களை அருளி சனாதன தர்மத்தைக் காப்பாற்றி இந்த உலகத்தை காப்பாற்றியவர் மகா புருஷர் ஆதிசங்கரர். அப்பேர்ப்பட்ட சங்கரரிடம் நாம் எல்லோரும் என்றைக்கும் பக்திமான்களாக இருக்க வேண்டும். அவருக்கு சகல மனிதர்களும் கடமைப் பட்டு உள்ளது. அவர்களுக்கு நாம் என்றைக்கும் சிஷ்யர்களாக இருக்க வேண்டும். ஆகையால்தான் சங்கர ஜெயந்தியை பெரிய வைபவமாக கொண்டாடுகிறோம். அந்த ஆதிசங்கரருடைய கடாட்சத்துடன் எல்லோரும் அவர் காட்டிய நல்ல மார்க்கத்தில் சென்று இறைவனை அடையட்டும் என்று பிரார்த்திக்கிறேன். என்று மகா பெரியவர் நிறைவு செய்தார்.
ரமண மகரிஷியிடம் பானர்ஜி எனும் பக்தர் ஒரு கேள்வி கேட்டார். ஜீவன் முக்திக்கும் விதேக முக்திக்கும் வித்தியாசம் என்ன?
ரமண மகரிஷிகள்: வித்தியாசம் ஒன்றுமில்லை. உடலுடன் இருக்கும் ஞானி ஜீவன் முக்தன். உடலை விடும்போது அவன் விதேக முக்தி அடைகிறான் என்று சொல்லலாம். ஆனால் இந்த வித்தியாசம் காண்பவருக்குத்தான் இருக்கும். ஞானிக்கு அல்ல. உடல் விடுவதற்கு முன்னும் பின்னும் ஞானியானவர் ஒரு நிலையிலேயே இருக்கிறான். நாம் ஞானியை மனித உருவமாக அல்லது அந்த உருவில் இருப்பவனாகப் பார்க்கிறோம். ஆனால் ஞானி தன்னை ஆன்மா ஒன்றேயான சத்வஸ்து. உள்ளும் புறமும் வியாபித்து எந்த உருவாலும் வடிவாலும் பந்தப்படாதவன் என்பதை அறிகிறான். பின்வரும் பாடலை பகவான் மேற்கோள் காட்டினார்.
பொருள்: மது அருந்தியவனுக்குத் தன்மேல் ஆடை உள்ளதா இல்லையா என்ற உணர்வில்லாதது போல் ஞானிக்கு உடலின் உணர்வே இருக்காது. அது இருந்தாலும் விழுந்து விட்டாலும் வித்தியாசம் ஒன்றுமில்லை.
ஹர ஹரோ ஹரா என்ற மந்திரத்தின் சுருக்கமே அரோகரா ஆகும். அரன் என்றால் காப்பவன். ஹர என்றால் நீக்குபவன். அரோகம் என்றால் நோயில்லாமல். அரோகரா என்றால் இறைவனே நோய் நொடிகளை நீக்கி துன்பங்களில் இருந்து காத்து நற்கதி அருள்வாயாக என்பதாகும்.
யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தெய்வீக ரகசியம் உள்ளது. மூலிகை தாவரங்களை மட்டும் சாப்பிட்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை. மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு.
நம்முடைய ஒரு நாசி வழியாகவே எப்போதும் சுவாசம் நடைபெறும். தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசம் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக் கொண்டே இருக்கும். இதற்கு சூரியகலை சந்திரகலை என்ற பெயரும் உண்டு. வலது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது சூரியகலை என்றும் இடது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது சந்திரகலை என்றும் பெயர். சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர். பிராணயாமம் வாசியோகம் போன்றவைகளும் நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். யோகப் பயிற்சி செய்பவர்கள் வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் மேல் நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்று விடுவார்கள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.
இரண்டு நாசிகளாலும் சதாசர்வ காலமும் சுவாசிக்கும் தன்மையை பெற்றவர்கள் ஞானிகளாகின்றார்கள். ஞானிகளிடம் ஆசி பெற்றால் நன்மை நடைபெறுவது போலவே இயற்கையாகவே சுழுமுனை வாசியோகம் உள்ள யானை அதன் தும்பிக்கையை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதால் ஆசிர்வாதம் பெற்றவர்களுக்கு அவர்களின் மூச்சுக்காற்று சீராக செயல்பட்டு மனதில் தீய எண்ணம் வராமல் தடுத்து நல்ல சிந்தனைகளை வளரச் செய்யும். நல்ல சிந்தனைகள் இறைவனை சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும். ஒழுக்கத்தை கொடுக்கும். தர்ம சிந்தனை வளரும். மனதில் அன்பு நிறைந்து இருக்கும். இறைவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எந்நாளும் துன்பம் இல்லை என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள தெய்வீக ரகசியம்.
ஒரு மனிதன் உட்கார்ந்திருக்கும் போது 12 எண்ணிக்கை மூச்சும் நடக்கும் போது 18 எண்ணிக்கை மூச்சும் ஒடும் போது 25 எண்ணிக்கை மூச்சும் தூங்கும் போது 32 எண்ணிக்கை மூச்சும் உடலுறவின் போதும் கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 எண்ணிக்கை மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.
இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது. அதனால்தான் வள்ளற்பெருமான் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில் மெல்லென நடை பயில வேண்டும் என்று கூறுவார். அதாவது நமது மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை. மேலும் நம்பெருமானார் ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க பழக்கப்படுத்திக் கொண்டால் அவன் 1000 வருடங்கள் வாழலாம் என்றும் கூறுவார். நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 எண்ணிக்கை மூச்சுதான் செலவாகும். அதுவே உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது. அதாவது நாம் தூங்கும் போது 20 மூச்சு ஒரு நிமிடத்திற்கு விரையம் அடைகிறது. எனவே தூக்கத்தை குறைக்க வேண்டும். அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு விரையமாகிறது. எனவே கோபம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60×24=1440)} மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன் சராசரியாக
100 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான். 93 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான். 87 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான். 80 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான். 73 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான். 66 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்.
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும் போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சராசரியாக
1 நிமிடத்தில் 2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு வாழலாம். 1 நிமிடத்தில் 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு வாழலாம். 0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்).
ஆதிசங்கரர் கடைசியாக செய்த உபதேசம் ஸோபான பஞ்சகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள். பங்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம். ஸோபான பஞ்சகம் என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும். இதனை உபதேச பஞ்சகம் அல்லது ஸாதனா பஞ்சகம் எனவும் கூறுவர். இதில் சங்கரர் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய நாற்பது படிகளைக் கடக்க வேண்டும் என்று விளக்குகிறார்.
தினந்தோறும் தவறாமல் வேதம் ஓது. அதில் விதித்துள்ள கர்மாக்களை முறைப்படி செய். பகவானை திருப்தி செய்ய பூஜைகள் செய். இவ்வாறு நீ செய்யும் கர்மாக்களின் பலனை எதிர்நோக்காமல் இது பகவானுக்கு என அர்ப்பணம் செய்து விடு. வாழ்க்கை நெறி முறைகளை மீறி நடந்ததினால் குவிந்துள்ள உன் பாவ மூட்டையைச் சிறிது சிறிதாகக் கரைத்து விட்டு விடு. இதனால் சித்த சுத்தி ஏற்படும். இந்நிலையில் சம்சார தோஷங்களை துருவி அலசிப்பார்த்தால் ஞான மார்க்கத்தில் அது கொண்டு விடும். இப்போது உனக்கு நித்யா நித்ய வஸ்துக்களின் அறிவு ஏற்படும். அநித்ய வஸ்துக்களில் வைராக்கியம் ஏற்படும் போது இடையில் தடை ஏற்படுமாகின் வீட்டை விட்டு (அடுத்த ஆசிரமத்தில் நுழைந்து விடு) வெளிச் சென்று விடு.
நீ சத்ஸங்கத்திலேயே நிலைத்திரு. பகவத் பக்தியை திடமாக்கிக் கொள். சமாதி சட்க ஸம்பத்திகளுடன் நீ மோட்ச வேட்கையோடு ஆத்ம விசாரம் செய். பின்னர் கர்மாக்கள் பிறவிச்சுழலில் தள்ளிவிடும் என உணர்ந்து கர்மாக்களை விட்டு விடு. பிறகு ஆத்ம ஞானி ஒருவரை சரணடைந்தால் அவர் கருணை கூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிப்பார். உபநிஷத்துக்களில் கூறும் தத் த்வம் அஸி (நீயே அதுவாக இருக்கிறாய் என்று பொருள்) போன்ற மகா வாக்கியங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்வாயாக.
மகா வாக்யார்த்தங்களை விசாரணை செய். ச்ருதியை பிரமாணமாகக் கொள். வேதங்கட்கு மாறாக வாதாடுவோரிடமிருந்து விலகி இரு. வேதங்களின் உட்கொருளை உணர தர்க்கம் என்ற புத்திக் கூர்மையை ஆயிதமாகக் கொண்டு அக்ஞானம் என்ற அசுரனை வெட்டிவிடு. நான் உடலல்ல பிரம்மமே என்பதை உணர்ந்து கொள். இவ்வறிவு பெற்ற பின் அகந்தையை அணுக விடாதே. அறிவாளிகளிடம் வாதம் செய்யாதே.
பசி என்ற நோயைத் தீர்க்க மருந்தெனக் கருதி கிடைத்த உணவை மிதமாக உட்கொள். நாவிற்கு ருசியான உணவில் ஆசையைத் துறந்து பிச்சை எடு. சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதிக் செயல்படு. பொன் போன்ற நேரத்தை வெட்டிப் பேச்சில் ஈடுபடுத்தாதே. பதவியில் உள்ளவர்களையும் தனவான்களையும் புகழ்ந்து தன் காரியததைச் சாதித்துக் கொள்ள விரும்பாதே.
ஏகாந்தமான இடத்தில் ஆசனத்தில் அமர்ந்து பர பிரம்மத்தைப் பற்றியே சிந்தித்திரு. பலன் தரத் தொடங்கிவிட்ட கர்மாக்களின் பலனைப் புரதத்தே தீர்த்துவிடு. பிரம்மத்திலேயே நிலைத்திருப்பதில் தயக்கம் காட்டாதே. பிரம்மமும் பூர்ணம். இந்த ஜகமும் பூரணம். பூர்ணமான பிரம்மத்திலிருந்து பூர்ணமான ஜகம் வந்த பின் எஞ்சியிருப்பதும் பூர்ணம் என அறிந்து பூர்ணாத்மாவினை தரிசனம் செய். நீ செய்த கர்மாக்களின் பலனை ஞானத்தால் எரித்து விடு.
என் அருமை சிஷ்யர்களே உங்களுக்கு இதுவே என் இறுதியான உபதேசம் என ஆதிசங்கரர் அருளினார்.
மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை சிரஞ்சீவி ஆவார்கள். அஸ்வத்தாமன் மகாபலி வியாசர் அனுமன் விபீஷணன் கிருபாச்சாரி பரசுராமன் மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் ஆவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பல யுகங்களாக தங்களின் உடலுடனே தங்கள் ஆன்மாவுடன் இந்த உலகத்தில் தற்போதும் உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள். தகுதி பெற்றவர்களுக்கே தங்களை வெளிப்படுத்திக் காட்டிக் கொள்வார்கள். இந்த சிரஞ்சீவிகளில் முக்கியமானவர் மார்கண்டேயன். இவரை காப்பாற்ற வேண்டி சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று? இதன் பின்னணியில் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.
மார்கண்டேயனுக்கு இளம் வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்டு மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்டு முனிவர் அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர் பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக என்று பணித்தார். மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான். சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்டு முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்த போது மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற அவர்களும் தீர்க்கா யுஷ்மான் பவ என்று வாழ்த்தி விட்டார்கள். பிறகு தான் தெரிந்து கொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா? இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள். பிரம்மாவிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கி விடுகிறார்.
மார்க்கண்டேயன் இப்படித் தான் பார்க்கும் ஞானிகள் அனைவரிடமும் ஆசி பெற்றான். அவர்கள் அனைவரது ஆசியும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றி விடுகிறது. சத்தியத்தை கடைபிடிக்கும் ஞானிகளின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா? ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.
பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார். பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது தீய விதியை மாற்றி நன்மையை கொடுத்து காக்கும் அரண் போல் இருக்கும்.