வினாச காலே விபரீத புத்தி

வினாச காலே விபரீத புத்தி இதன் பொருள் அழிவு ஒருவனை நெருங்கும் போது அவனது அறிவு வேலை செய்வதில்லை என்பதாகும். இதற்கு உதாரணம்

அனுமான் இலங்கை நகரை தீக்கிரையாக்கி விட்டு சென்ற பின் ராவணனுக்கு கவலை அதிகரித்தது. தனது அமைச்சர்களை கூட்டி ஆலோசனை நடத்தினான். கும்ப கர்ணனும் விபீஷணனும் ராவணது செயலை கண்டித்தனர். கும்ப கர்ணன் பேசும்போது சீதையை அபகரித்து வருவதற்கு முன்பு செய்திருக்க வேண்டிய ஆலோசனையை இப்போது செய்வதில் என்ன லாபம்? என்றான்.

விபீஷணர் ராமர் நமது ராஜ்யத்தை அழிக்கும் முன்பு சீதையை ராமரிடம் திருப்பி அனுப்பி விடுவதே நலம் என்றார்.

சினம் கொண்ட ராவணன் குலத்தை கெடுக்க வந்த கோடாரிக்காம்பே. நீ என் கண் முன் நில்லாதே இங்கிருந்து ஓடி விடு என்றான். விபீஷணனும் நான் உன் நலனை உத்தேசித்து பேசிய பேச்சு உனக்கு பிடிக்கவில்லை. வினாச காலே விபரீத புத்தி என்பது போல அழிவு ஒருவனை நெருங்கும் போது அவனது அறிவு வேலை செய்வதில்லை என்று கூறி அவையை விட்டு வெளியேறி ராமரை சரண் அடைந்தான்.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நாம் கவனமாக இருந்தாலும் விபரீத புத்தி வந்து நம்மைக் கெடுத்து விடும். ஆகவே

எண்ணத்தில் கவனமாய் இருங்கள் ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள் ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள் ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள் ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்.

காமத்தை வெல்வது பற்றி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் மிகுந்த பதட்டத்துடன் இளைஞன் ஒருவன் வந்து என் மனத்தை எவ்வளவு அடக்க முயற்சி செய்தாலும் சில நேரங்களில் கீழான ஆசைகளும் வெறுக்கத்தக்க உணர்ச்சிகளும் என் மனத்தை அலைக்கழிக்கின்றன. அதனால் நான் அமைதியை இழந்து தவிக்கிறேன் காமம் எப்படி விலகும்? என்று கேட்டன்.

அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்பா இறைக்காட்சி கிட்டாதவரை காமம் அடியோடு விலகுவதில்லை. அதன் பிறகும் உடல் இருக்கும் வரை அதன் சுவடு சிறிது இருக்கவே செய்யும். அதனால் எவ்விதத் தொந்தரவும் இருக்காது. என்னிடமிருந்து முழுமையாகக் காமவாசனை போய்விட்டதென்றா நினைக்கிறாய்? காமத்தை வென்று விட்டதாக நான் ஒரு சமயம் நினைத்தேன். அதன் பிறகு ஒருநாள் பஞ்சவடியில் அமர்ந்திருந்தபோது என்னைமீறிக் காம உணர்ச்சி பீறிட்டு எழுந்தது. என்னால் அடக்கவே முடியாது போல் தோன்றிற்று. நான் ஆடிப் போய்விட்டேன். உடனே தரையில் விழுந்து புழுதியில் முகத்தைத் தேய்த்துக் கொண்டு அழுத வண்ணம் அன்னை காளியிடம் அம்மா நான் பெரிய தவறு செய்துவிட்டேன். காமத்தை வென்றதாக இனி எண்ணவே மாட்டேன் என்று முறையிட்டேன். அதன் பின்னரே அந்த உணர்ச்சி என்னை விட்டு நீங்கியது. நீயோ வாலிபன். அதனால்தான் உன்னால் அந்த வேகத்தை அடக்க இயலவில்லை. பெரு வெள்ளம் புரண்டு வரும்போது அது கரையைப் பற்றி கவலைப்படவா செய்யும். கரையோவஎதுவோ வழியிலுள்ள அனைத்தையும் உடைத்துக் கொண்டு அது முன்னேறுகிறது. வயல்களில் புகுந்து பெரும் உயரத்திற்குத் தேங்குகிறது.

கலியுகத்தில் மனத்தினால் அறியாமல் செய்கின்ற பாவம் பாவமே இல்லையென்று கூறப்பட்டுள்ளது. ஏதோ ஒருமுறை கெட்ட எண்ணம் எழுந்து விட்டதற்காக ஏன் இப்படிப் படபடக்கிறாய்? உடலின் இயற்கைப் படி இந்த உணர்ச்சிகள் சில சமயம் வந்துபோகத்தான் செய்யும். இதையும் மலம் கழிப்பது போன்ற சாதாரண உணர்ச்சியாக எண்ணிக் கொள்ள வேண்டும். மலம் கழிக்க வேண்டியிருக்கிறது என்பதற்காக யாராவது கன்னத்தில் கைவைத்து கொண்டு கவலைப்படுகிறார்களா? அதேபோன்று இத்தகைய உணர்ச்சிகளையும் இயல்பானவையாக அற்பமானவையாகக் கருது. அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காதே. இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய். இறை நாமத்தை ஜெபி. அவரது பெருமையில் ஈடுபடு. கெட்ட எண்ணங்கள் வரட்டும் போகட்டும். அவற்றைக் கண்டு கொள்ளாதே. தாமாகவே அவை கட்டுக்குள் அடங்கி விடும் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

தட்சன் ஆட்டுத் தலையுடன் உயிர்த்தெழுதல்

பிரம்மா தன்னுடைய படைப்புத் தொழிலினை நேர்த்தியாய் செய்ய தட்சனைப் படைத்தார். தட்சனின் மகளாக தாட்சாயிணியாக பிறந்து சிவனை திருமணம் செய்து கொண்டாள் பார்வதி. இதனால் சிவனின் மீது கொண்ட கோபத்தில் தட்சன் சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்கிறார். பலரும் எடுத்துரைத்தும் சிவபெருமானை அழைக்கவில்லை. சிவபெருமானை திருமணம் செய்து கொண்ட தாட்சாயிணி தந்தையிடம் சென்று நீதி கேட்கிறார். பின்பு விவாதம் முற்றி தன்னையே யாகத் தீயில் தன்னை அழித்துக் கொள்கிறார் தாட்சாயிணி. மனைவி இறந்தமைக்காக சிவபெருமான் சினங்கொண்டு வீரபத்திரர் என்பவரைத் தோற்றுவித்து தட்சனை அழிக்க உத்தரவிடுகிறார். வீரபத்திரர் யாகத்தில் கலந்து கொண்டிருப்பவர்களை அடித்து துவம்சம் செய்து இறுதியாக தட்சனின் தலையை வெட்டி யாக குண்டத்தில் போட்டு விடுகிறார். அதன் பின் யாகத்தில் கலந்து கொண்ட அனைவரும் இறைவனை சரணடைய இறுதியாக சிவபெருமான் தன் சினம் தணிந்ததும் வீரபத்திரரால் கொல்லப் பட்டவர்களை உயிர்ப்பித்தார். தலைகணம் கொண்ட தட்சனின் தலை குண்டத்தில் போட்டு எரிந்து விட்டதால் சிவபெருமான் அருளால் ஆட்டுத்தலையுடன் தட்சன் உயிர்த்தெழுந்தார். மகரிஷிகளின் ருத்ர ஜபத்துடன் மீண்டும் யாகம் தொடங்கியது. ஆட்டுத்தலை பெற்ற தட்சன் யாகத்தில் சிவனுக்கு முதல் அவிர் பாகம் தந்து அவரது பாதங்களை வணங்கி பூதகணங்களில் ஒருவனாகத் தன்னையும் ஏற்று அருள்புரியும்படி வரம் கேட்டான். சிவனும் அவ்வாறே வரம் தந்தருளினார். கர்நாடாக மாநிலம் கேலடியில் உள்ள ராமேஸ்வரர் கோவிலில் தட்சனின் சிற்பம் ஆட்டுத் தலையுடன் உள்ளது.

பஞ்சநந்திகள்

சிவபெருமான் வசிக்கும் கயிலாய மலையை காவல் காப்பவராக இருப்பவர். நந்தியம்பெருமான். ஆலயங்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இவர்களுக்கு பஞ்ச நந்திகள் என்று பெயர்.

போகநந்தி:

ஒரு சமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன் நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். இவர் போகநந்தி ஆவார். போகநந்தி அல்லது அபூர்வநந்தி என்று அழைக்கப்படும் இந்த நந்தியானது கோவிலுக்கு வெளியே அமைந்திருக்கும்.

பிரம்மநந்தி:

பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும் முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். இவருக்கு பிரம்மநந்தி என்று பெயர். இந்த நந்திக்கு வேத நந்தி வேத வெள்விடை பிரம்ம நந்தி என்று பல பெயர்கள் உள்ளது. இந்த நந்தி சுதைச் சிற்பமாக பிரகார மண்டபத்தில் காணப்படும்.

ஆன்மநந்தி:

பிரதோஷ கால பூஜையை ஏற்கும் நந்திக்கு ஆன்ம நந்தி என்று பெயர். இந்த நந்தி கொடிமரம் அருகே இருக்கும். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார். உயிர்களுக்குள் இருக்கும் ஆன்மாக்களின் வடிவாக ஆன்மநந்தி உள்ளது.

மால்விடை:

மால் என்றால் மகாவிஷ்ணு விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும் போது மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இந்த நந்தியானது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.

தருமநந்தி:

இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழிகாலத்தின் முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைபெற்று இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக்கொண்டார். இவ்வகையில் தரும நந்தியானது இறைவனைப் பிரியாது அவருடனேயே இருப்பார். இதை உணர்த்தும் வகையில் இந்த நந்தி இறைவனுக்கு அருகில் மகாமண்டபத்திலேயே எழுந்தருளியிருப்பார். பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலை காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன.

திருநீற்றின் மகிமை

ஒரு ஏழை அன்றாட உணவிற்கே ஒன்றுமில்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருந்தான். அவன் பொய் பேச மாட்டான். சோம்பேறியும் அல்ல. முன் ஜென்ம பிரதிபலன் அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. ஒருநாள் தன் வாழ்வினை நொந்து நடந்து கொண்டிருந்தான். அவனுக்கருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் ஐயா எனக்கு சிறிய சந்தேகம் தீர்த்து அருள்வீராக என்று அவரை வணங்கி தாங்கள் ஏன் இப்படி சாம்பலை பூசிக்கொண்டிருக்கிறீர்கள் அதுவும் மேனி முழுதும்? என்றான்.

சிவனடியாரும் இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு அதன் அடையாளமே இது. நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய் விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்க வேண்டும். ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக் கூடாது என்பதை அறியவும். இன்னும் உயிருள்ளவரை இதுவே மகாலெட்சுமி அம்சம். இதையணிந்தால் செல்வம் பெருகும் என்பதற்காகவும் திருநீறு அணிகிறேன் என்றார். சுவாமி எங்கள் குல வழக்கத்தில் இதை அணிய மாட்டார்கள். நான் மிகவும் வறுமையில் வாடுகிறேன் நான் என்ன செய்யவேன் என்று சிவனடியாரிடம் புலம்பி அழுதான். சிவனடியாரும் சரியப்பா நீ அணியவில்லை என்றாலும் பரவாயில்லை அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும் என சொல்லி அங்கிருந்து கிளம்பினார். ஏழை சிந்தித்தான் நம் குல வழக்கப்படி பூச முடியாது. அப்படியெனில் நம் தெரு முனையில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசித்திட வேண்டும் என முடிவு செய்து அதிகாலை எழ வேண்டும் என்ற முனைப்பில் உறங்கினான். அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித் திருநீறு பூச்சை காண காத்திருந்தான். குயவர் அன்று சற்று இவனுக்கு முன்பாகவே கிளம்பிப் போய்விட்டார். இதனை அறிந்த அவன் நாம்தான் தாமதமாக எழுந்துவிட்டோமோ? என்று எண்ணி குயவன் மண்ணெடுக்கும் இடத்திற்கே போய் தரிசனம் செய்யலாம் என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்.

குயவர் அதிகாலை மண்ணை தோண்டிக் கொண்டிருக்கும் போது எதிர் பாராத விதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது. அந்த தங்கப்பானை புதையலைக்கண்டு அதிர்ச்சியும் சந்தோஷமுமாக இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் பார்த்தான். அப்போது ஏழை குயவனின் நெற்றியிலிருந்த திருநீற்றை தூரத்திலிருந்து பார்த்ததும் பார்த்துட்டேன் பார்த்துட்டேன் என ஆவலாய் கத்தினான். உடனே குயவன் உண்மையாகவே பார்த்து விட்டாயா என்று கேட்டான். ஆமாம் நிறைவாகக் கண்டுவிட்டேன் எனக் கூறினான். உடனே குயவன் அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைபிடித்து தூக்கு ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்வோம் எனக்கூறினான். அப்போது தான் புதையல் விஷயம் ஏழைக்கு புரிந்தது. அப்போது சிந்தித்தான் நெற்றியைப் பார்த்ததற்கே பாதி தங்கம் கிடைத்ததே இன்னும் நாம் பூசினால் என்னவெல்லாம் கிடைக்குமோ என்று தன் குல வேற்றுமையை தூரத் தள்ளி வைத்து உடல் முழுதும் திருநீற்றை பூசினான்.

தீர்க சுமங்கலி பவா

தீர்க சுமங்கலி பவா என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

ஒன்று திருமணத்தில்
2 வது 60 வயது சஷ்டியப்த பூர்த்தியில்
3 வது 70 வயது பீமரத சாந்தியில்
4 வது 80 வயது சதாபிஷேகத்தில்
5 வது 96 வயது கனகாபிஷேகத்தில்

60 வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் தனது என்ற பற்றை துறக்கும் போது செய்வது சஷ்டியப்த பூர்த்தி திருமணம் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

70 வது வயதில் தன்னுடைய மகன் மகள் சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். காமத்தை (ஆசைகள்) முற்றிலும் துறந்த நிலையே பீம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

80 வது வயதில் ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். மனிதனுக்கு ஜாதி மதம் இன பேதம் எதுவும் இல்லை. அனைத்திலும் அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார்.

96 வது வயதில் இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி ஆசி பெறுகிறார்கள்.

சதுரகிரி

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலை சதுரகிரியாகும். சதுர் என்றால் நான்கு. கிரி என்றால் மலை நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன. சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி குபேர கிரி சிவகிரி சக்தி கிரி மேற்கே விஷ்ணுகிரி சந்திர கிரி வடக்கே கும்ப கிரி மகேந்திர கிரி இந்திர கிரி சஞ்சீவி கிரி தெற்கே பிரம்ம கிரி சித்தி கிரி இராம கிரி உதய கிரி இருக்கிறது.

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் தன் மாமனார் வீட்டிற்கு தினமும் அவர்களுக்குத் தேவையான பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார் இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட துறவி அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால் மனம் திருந்தி சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் தரிசனம் கொடுக்க நினைத்த இறைவன் ஒருநாள் சிவன் ஒரு துறவியின் வேடத்தில் சிவ பூஜைக்கு பால் கொடுக்கும் காராம் பசுவின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்து விட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன் என்று தெரிவித்து மறைந்தார்.

சதுரகிரி மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன. 1. மகாலிங்கம் 2. சுந்தரமூர்த்தி லிங்கம் 3. சந்தன மகாலிங்கம் 4. இரட்டை லிங்கம் 5. காட்டு லிங்கம். சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகள் உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும். பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம் சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள் மூலிகைகள் இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

சதுரகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பளியர்கள் வழிபட்டு வந்து பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் இராமகாடையா நாயக்கர் என்பவரால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்கள் கட்டப்பட்டது. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருக்கிறார். 1950 ஆம் ஆண்டு வரை இக்கோவில் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது.

கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குணம் கொண்ட மரம் செடி கொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கிய சுனைகளாக இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர் போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும் துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

பன்னிரு திருமுறைகளின் வரலாறு

ராஜ ராஜ சோழன் என்னும் சோழப் பேரரசன் கோவில்களில் வாய் மொழியாகப் பாடப் பெற்ற தேவாரப் பாடல்களைக் கேட்டு இப்பாடல்களைத் தொகுக்க எண்ணினார். தேவாரப் பாடல்கள் இருக்கும் இடத்தை விநாயகரின் அருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பி என்பவர் மூலம் சிதம்பரம் கோவிலின் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்தார். தேவாரம் பாடிய மூவர் வந்தால் மட்டுமே அறையின் கதவினைத் திறக்க முடியும் என சிதம்பரம் கோவிலில் கூறினார்கள். காலம் சென்ற அம்மூவரையும் எவ்வாறு கொண்டு வருவது? என மன்னன் சிந்தித்தார். உடனே தேவார மூவரையும் சிலை வடிவில் அங்கு கொண்டு வந்து அறையினை திறக்கச் செய்தார். அங்கு ஓலை சுவடிகள் பல செல்லரித்து இருந்தன. மீதம் உள்ளவற்றை நம்பியாண்டார் நம்பி கிபி பதினோராம் நூற்றாண்டில் பதினோரு திருமுறைகளாகத் தொகுத்தார். பின் அநாபாயச் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி சேக்கிழார் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் பாடல்களைப் பாடினார். திருதொண்டர் புராணம் நூலானது 12 வது திருமுறையாக பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது.

பன்னிரு திருமுறைகள்

1 2 3 – ஆம் திருமுறைகள்

திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் 1 2 3 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்படுகிறது. சம்பந்தரின் பாடல்கள் தமிழ் இலக்கியத்தையும் இசையும் மிளரச் செய்கின்றன.

4 5 6 ஆம் திருமுறைகள்

திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் 4 5 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அப்பரின் பாடல்கள் தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை விளக்குகின்றன.

7 ஆம் திருமுறை

சுந்தரர் பாடிய பாடல்கள் 7 ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள் திருப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. சுந்தரர் பாடிய பாடல்கள் சுந்தரர் தேவாரம் என்றும் அழைக்கப்படுகிறது.

8 ஆம் திருமுறை

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. தேன் ரசம் கொட்டும் இவரின் பாடல்கள் இறைவனைச் சரணடைதல் மற்றும் பக்தி பற்றி விவரிக்கிறது.

9 ஆம் திருமுறை

  1. திருமாளிகைத்தேவர் 2. கருவூர்த்தேவர் 3. பூந்துருத்தி நம்பிகாட்ட நம்பி 4. கண்டராதித்தர் 5. வேணாட்டடிகள் 6. திருவாலியமுதனார் 7. புருசோத்தம நம்பி 8. சேதிராயர் 9. சேந்தனார் ஆகிய ஒன்பது நபர்களால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. இத்திருமுறையில் உள்ள நூல்கள் திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகியவை ஆகும். சேந்தனார் மட்டும் திருப்பல்லாண்டு திருவிசைப்பா இரண்டையும் பாடியுள்ளார். ஏனையோர் திருவிசைபாவினை மட்டும் பாடியுள்ளனர்.

10 ம் திருமுறை

திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் இறைவனைப் பற்றியும் பக்தியோகம் அட்டாங்கயோகம் கர்ம யோகம் ஞானம் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது.

11 ஆம் திருமுறை

  1. திருஆலவாயுடையார் 2. காரைக்கால் அம்மையார் 3. ஐயடிகள் காடவர்கோன் 4. சேரமான் பெருமான் 5. நக்கீரர் 6. கல்லாடர் 7. கபிலர் 8. பரணர் 9. இளம்பெருமாள் அடிகள் 10. அதிராவடிகள் 11. பட்டினத்தடிகள் 12. நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரண்டு நபர்களால் பாடிய பாடல்கள் 11 ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 11 ஆம் திருமுறையில் உள்ள நூல்கள் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

12 ஆம் திருமுறை

63 நாயன்மார்களின் வரலாற்றைப் பற்றிய சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் 12 ஆம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.

முதல் திருமுறையின் முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்குகிறது. இப்பாடலின் முதல் எழுத்தான தோ என்பது த் + ஓ எனப் பிரிக்கப்படுகிறது. இதில் ஓ என்பது பிரவண மந்திரமான முதல் எழுத்தைக் குறிக்கிறது.

பன்னிரெண்டாவது திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல் உலகெல்லாம் என்று தொடங்குகிறது. இதில் கடைசி எழுத்து ம் என்பது பிரவண மந்திரமான கடைசி எழுத்தைக் குறிக்கிறது. எனவே இப்பாடல்கள் வேதங்களின் விளக்கங்கள் எனப் போற்றப்படுகின்றன.

பன்னிரு திருமுறைகள் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் இவை தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

10 ஆம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

11 ஆம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

12 ஆம் திருமுறை பாடல்கள் 63 ஆம் நாயன்மார்களின் வாழ்க்கையை விளக்குவதால் இது வரலாறு என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆவணி முதல் ஞாயிறுக்கு முன் 12 நாட்கள் பன்னிரு திருமுறைகள் பற்றிய உரையானது நிகழ்த்தப்படுகிறது. ஆவணி மாதம் முதல் ஞாயிறு அன்று திருமறை காண்டல் என்ற விழா சிவாலயங்களில் நடத்தப்படுகின்றது. நாமும் வாழ்விற்குத் தேவையான வளங்களை அள்ளித்தரும் பன்னிரு திருமுறைகளால் எல்லாம் வல்ல இறைவனை ஆராதித்து வாழ்வின் நன்னிலை அடைவோம்.

பாஞ்சசன்ய சங்கு

பாகல்பூரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பங்க மாவட்டத்தில் மாந்தர் பர்பத் அமைந்துள்ளது. இங்கு உள்ள மலை 700 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலையைப் பற்றி புராணங்கள் மற்றும் மகாபாரதத்தில் பல கதைகள் உள்ளது. மலையின் நடுவில் நரசிம்மர் குகைக்கு அருகில் ஒரு சங்கு குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் எப்போதும் வறண்டு போகாது. சிவராத்திரிக்கு ஒரு நாள் முன்பு நீர் வற்றி விடும். அப்போது இந்த குளத்தில் உள்ள சங்கை பார்க்கலாம். மீதி 364 நாட்கள் 70 லிருந்து 80 அடி தண்ணீருக்குள் இந்த சங்கு இருக்கும்.  இந்த ஒரு நாள் மட்டும் தண்ணீர் குறைந்து சங்கு வெளியே தெரியும் அடுத்த நாள் தண்ணீர் சேர்த்து குளம் நிரம்பி சங்கு மறைந்து விடும். இந்த பாஞ்சசன்ய சங்கு கடலை கடையும் போது கிடைத்த ஆலகால விஷத்தை சிவபெருமான் குடித்தாக கூறப்படுகிறது. கி.பி 11 முதல் 12 ஆம் நூற்றாண்டு காலத்திய சிவன் காமதேனு மற்றும் வராகி ஆகியோரின் பல அரிய சிற்பங்கள் இந்த கோவில் இருக்கும் மலையைச் சுற்றி சிதறிக் கிடப்பதைக் காணலாம்.

லலிதா சஹஸ்ரநாமம்

ஆதிசங்கரர் பலமுறை லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுத நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ரநாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும் சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். இரண்டு மூன்று முறை இவ்வாறு நடக்க ஏன் இப்படி? என்று சிஷ்யரிடம் கேட்டார் ஆதிசங்கரர். சிஷ்யர் தான் சுவடிகளை எடுக்கச் செல்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளைத் தந்ததாகவும் அதனைச் சரி பார்க்காமல் தான் கொண்டு வந்து தந்து விட்டதாகவும் கூறினார். இவ்வாறு இரண்டு மூன்று முறை விஷ்ணு சஹஸ்ரநாமச் சுவடிகளை அன்னையே சிறுமி ரூபத்தில் வந்து தந்ததாக அறிந்து கொண்ட சங்கரர் அதுவே அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தார். சௌந்தர்ய லஹரி பவானி ஸ்தோத்ரம் எனப் பல விதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரரால் லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் செய்ய இயலவில்லை.

பிற்காலத்தில் ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்ற வரும் சகல சாஸ்திரங்களில் பாண்டித்யம் கொண்டவருமான பாஸ்கர ராயர் என்பவரைக் கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் எழுதிக் கொண்டாள் அம்பிகை.